ரமழான் மாதத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) சார்பில் தினமும் இரவுத் தொழுகைக்குப் பின் தொடர் சொற்பொழிவு நடத்தப்பட்டு வருகிறது.
இன்றிரவு முதல், 07.08.2012 செவ்வாய்க்கிழமை இரவு வரை நடைபெறும் தொடர் சொற்பொழிவில், இலங்கை ஜாமிஆ நளீமிய்யா கலாசாலையின் பேராசிரியர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.முஹம்மத் ஃபளீல் நளீமீ பங்கேற்று, பல்வேறு தலைப்புகளில் உரையாற்றவுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இன்று (03.08.2012) வெள்ளிக்கிழமை ஐ.ஐ.எம். தொடர் சொற்பொழிவின் சிறப்பு அழைப்பாளராக இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள அஷ்ஷெய்க் எஸ்.ஹெச். முஹம்மத் ஃபளீல் நளீமி எம்.ஏ., ‘தவ்பாவும் பெரும்பாவமும்’ எனும் தலைப்பில் உரையாற்றுகிறார். தொடர்ந்து ஐந்து நாட்கள் உரை நிகழ்த்தவுள்ள இவர், பல்வேறு தலைப்புகளில் அரிய பல கருத்துகளை நம்முடன் பகிர்ந்துகொள்வுள்ளார்.
ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமிய கலாசாலை இலங்கையில் பேருவளை எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கலாசாலை இலங்கைவாழ் முஸ்லிம்களிடம் இஸ்லாமிய அறிவில் மாபெரும் பங்களிப்பை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்கல்விக்கூடத்தின் நிறுவனரும் - புகழ்பெற்ற மாணிக்க வியாபாரியுமான மர்ஹூம் நளீம் ஹாஜியாரின் சமுதாய பங்களிப்புகள் மகத்தானவை. காயல்பட்டினத்தில் அமைந்துள்ள எல்.கே. தொடக்கப் பள்ளியின் கட்டிடப் பணியில் நளீம் ஹாஜியாரின் பங்களிப்பு நினைவுகூரத்தக்கது. இலங்கையுடன் தொடர்புள்ள காயல்வாசிகள் குறிப்பாக மாணிக்க வியாபாரிகள் நளீம் ஹாஜியாரை அறியாமல் இருக்கமாட்டார்கள்.
அத்தகையவரால் நிறுவப்பட்ட இக்கலாசாலையில் 7 ஆண்டுகள் இளங்கலை கல்வியைப் பயின்ற அஷ்ஷெய்க் முஹம்மத் ஃபளீல் ‘நளீமீ’ என்ற பட்டம் பெற்றார். அக்காலாசலையிலேயே சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் மூத்த விரிவுரையாளராக பணியாற்றிவருகிறார். அத்துடன், அக்கலாசாலையின் கல்வித்துறை பொறுப்பாளராகவும் அங்கம் வகித்துவருகிறார். கலாசாலை பாடத்திட்டத்தை வடிவமைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறார்.
இவர் இலங்கை - பேராதனை பல்கலைக்கழகத்தில் முதுகலை (எம்.ஏ.) பட்டம் பெற்றுள்ளார். தற்போது ‘ஃபிக்ஹுல் அகல்லிய்யாத்’ எனப்படும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இலங்கை போன்ற நாடுகளில் சமய நல்லிணக்கம் தொடர்பான இஸ்லாமியக் கண்ணோட்டம் என்ற தலைப்பில் ஆய்வும் (M.Phil.) மேற்கொண்டுவருகிறார்.
ஜாமிஆ நளீமிய்யாவின் காலாண்டு ஆய்வு இதழான ‘இஸ்லாமிய சிந்தனை’யின் ஆலோசனைக் குழு உறுப்பினராக அங்கம் வகிக்கும் இவர், இலங்கையில் வெளிவரும் இஸ்லாமிய மாத இதழ்கள் முன்னணி நாளிதழ்கள், வார இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார்.
சுமார் 25 ஆண்டுகளாக அகில இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை பிரிவில் பல்வேறு தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தியுள்ளார். தொலைக்காட்சிகளிலும் கலந்துரையாடல்கள், உரைகள் ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார்.
தலைநகர் கொழும்பில் உள்ள முக்கியமான பள்ளிவாசல்களில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரை நிகழ்த்திவருவதும் இவரது பணிகளுள் ஒன்றாகும்.
இலங்கையின் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள முஸ்லிம் பிரிவில் ஆசிரியர் பயிற்சி நடத்தும் முக்கியப் பொறுப்பில் இருந்துவருகிறார்.
‘முஸ்லிம்கள் ஐக்கியப்படுவார்களா?’, ‘இஸ்லாமும் தொடர்புசாதனங்களும்’, ‘நாளைய முஸ்லிம் பெண்’ போன்ற தலைப்புகளில் நூற்களை எழுதியுள்ளார். இன்னும் இவரது உரைகள் அடங்கிய குறுந்தகடுகளும் (சி.டி.) வெளியிடப்பட்டுள்ளன.
இவரது ஜும்ஆ உரைகளை பின்வரும் இணைப்பைச் சொடுக்கி செவியுறலாம்:-
http://www.slmuslims.com/downloads/cat_view/9974-by-scholar/10184-072ash-sheikh-faleel-naleemi/10186-jummah-quthbas.html
இவருக்கு, http://www.sheikhshmfaleel.lk/ என்ற பிரத்தியேக இணையதளமும் உள்ளது.
இன்றைய நவீன உலகில் இதுபோன்ற இஸ்லாமிய அறிவுசார் ஆளுமைகளை (Islamic Intellectual Personalities) சமூகத்திற்கு வெளிச்சமிட்டுக் காட்டுவது காலத்தின் கட்டாயம் என்றே உணரப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் இன்று நடைபெற்ற ஜும்ஆவில், அஷ்ஷெய்க் முஹம்மத் ஃபளீல் நளீமீ குத்பா உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:
அபூ ஹிஷாம். |