தீ விபத்திற்குள்ளான தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரெயிலில் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த வி.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் என்ற விளக்கு முஹ்யித்தீன் தீயில் கருகி உயிரிழந்தார். விபரம் பின்வருமாறு:-
டில்லியிலிருந்து சென்னை நோக்கி தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரெயில் 29.07.2012 அன்று இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு, 30.07.2012 அன்று அதிகாலை 04.14 மணிக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் விதயபாலம் தொடர்வண்டி நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து சென்னை நோக்கி ரெயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அதன் S11 பெட்டியில் தீ கொளுந்து விட்டெரிந்தது. இந்த வண்டியில் பயணித்த பல பயணியர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இந்த ரெயிலில், காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் விளக்கு ஸாஹிப் என்பவரின் மகன் வி.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் என்ற விளக்கு முஹ்யித்தீன் பயணித்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடா நகருக்கு அருகிலுள்ள ஏலூரில் கடந்த 12 ஆண்டுகளாக மாணிக்க வணிகம் செய்து வந்த இவர், சொந்த ஊரான காயல்பட்டினம் வருவதற்காக, விஜயவாடா ரெயில் நிலையத்திலிருந்து - விபத்து நேர்ந்த தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரெயிலில் சென்னை நோக்கி பயணித்துள்ளார். இவரது நிலை குறித்த தகவல்கள் தீவிரமாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
விபத்தில் இறந்த பயணியர் உடல்களை உறவினர்கள் அடையாளங்காட்டுமாறு தொடர்வண்டித் துறை விடுத்த வேண்டுகோளையடுத்து, விளக்கு முஹ்யித்தீனின் தம்பி அல்தாஃப், மகன் காதிர் ஸாஹிப், சகலை எல்.எம்.இ.கைலானீ, முஹ்யித்தீன் அப்துல் காதிர், பேராசிரியர் தமீமுல் அன்ஸாரீ உள்ளிட்டோர் 30.07.2012 அன்று மாலையில் காயல்பட்டினத்திலிருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் புறப்பட்டுச் சென்றனர்.
அங்கு, தீயில் கருகி இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்குச் சென்ற இவர்கள், விளக்கு முஹ்யித்தீன் அணிந்திருந்த மோதிரம், அவரது சாம்பல் நிற கண் ஆகியவற்றைக் கொண்டு அவரது உடலை அடையாளங்காட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம், விளக்கு முஹ்யித்தீன் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தீ விபத்தில் மரணமான விளக்கு முஹ்யித்தீன், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாதின் சகோதரி முஹம்மத் செய்யித் ஃபாத்திமாவை திருமணம் செய்திருந்தார். இத்தம்பதிக்கு காதிர் ஸாஹிப் (வயது 17) என்ற மகனும், அஹ்மத் அர்ஷதா (வயது 11) என்ற மகளும் உள்ளனர். காதிர் ஸாஹிப் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். அஹ்மத் அர்ஷதா ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவரது மனைவி முஹம்மத் செய்யித் ஃபாத்திமா மரணித்த பிறகு, மர்ழிய்யா என்ற பெண்ணைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
ரெயில் தீ விபத்தில் மரணித்த விளக்கு முஹ்யித்தீனின் உடல் ஆந்திர மாநிலம் நெல்லூரில் நேற்று மாலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது..
தகவல்: V.S.லத்தீஃப், (மறைந்த விளக்கு முஹ்யித்தீனின் சகோதரர்)
படம்: M.ஜஹாங்கீர் |