டில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் (12622) ரெயிலில் நடந்த தீ விபத்தில் 32 பேர் மரணமுற்றதாக தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. (ஆரம்ப தகவல்கள் 47 பயணியர்கள் இறந்ததாக தெரிவித்தன). சனிக்கிழமை அன்று டில்லியில் இருந்து புறப்பட்ட இந்த வண்டி - இன்று அதிகாலை 4:15 மணிக்கு தீ விபத்துக்கு உள்ளானது. எஞ்சினில் இருந்து 20 வது பெட்டியாக அமைந்திருந்த S11 பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த வண்டியின் S11 பெட்டியில், 51 எண் இருக்கையில் காயல்பட்டினத்தை சார்ந்த வி.எஸ்.எம்.டி.முஹ்யித்தீன் என்பவர் (வயது 40) தட்கல் முறையில் பயணச்சீட்டு பதிவு செய்து, ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து சென்னை நோக்கி பயணம் செய்து வந்தார். விஜயவாடாவில் நள்ளிரவு 2 மணி அளவில் அவர் ரயில் ஏறி உள்ளார்.
தென்-மத்திய ரயில்வே தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில் - காயமுற்ற 25 பேர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. பார்க்கவும் இங்கே. அதில் வி.எஸ்.எம்.டி.முஹ்யித்தீன் பெயர் இல்லை.
மேலும் S11 பெட்டியில் பயணம் செய்ய பதிவு செய்திருந்த 72 பேரில் - 7 பேர், இறுதி நேரத்தில் வண்டியில் பயணம் செய்யவில்லை என தெரிகிறது. மீதியுள்ள 65 பேரில் 19 பேரை காண முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு விபரம் இங்கே.
இறந்த 32 பேரில் 4 பேரை அடையாளம் காண முடியவில்லை என்றும், மீதி 28 பேரில் 19 பேர் ஆண்கள் என்றும், 6 பேர் பெண்கள் என்றும், 2 சிறுவர் என்றும், 1 குழந்தை என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. S11 பெட்டியலில் காண முடியாத நபர்களை விட இறந்தவர் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், பிற பெட்டிகளில் பயணம் மேற்கொண்டவர்களும் இறந்திற்க கூடும் என தெரிகிறது.
|