டில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் (12622) ரெயிலில் நடந்த தீ விபத்தில் 32 பேர் மரணமுற்றதாக தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
புது டெல்லியிலிருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழ்நாடு விரைவு ரயிலின் எஸ்-11 என்ற பெட்டி நெல்லூர் ரயில்வே நிலையம்
அருகே இன்று அதிகாலை தீப்பிடித்ததில் அந்தப் பெட்டியில் பயணம் செய்த 32 பயணிகள் உயிரிழந்துள்ளனர்; பல பயணிகள் தீக்காயங்களுடன் நெல்லூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி அறிந்து சொல்லொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களும் உள்ளதால், அவர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து
ஆறுதல் கூறவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை புரியவும் மூத்த அமைச்சர்களையும், அரசு அதிகாரிகளையும் நெல்லூருக்கு அனுப்பி
வைத்துள்ளேன்.
இந்த கோரச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதுடன், தீக்காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாடீநு
வழங்கவும், தீக்காயம் அடைந்தவர்களுக்கு 25,000 ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
ஜெ ஜெயலலிதா,
தமிழ்நாடு முதலமைச்சர்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை. |