காயல்பட்டினம் கொச்சியார் தெருவையடுத்து, கடற்கரையையொட்டிய ஒடை மரக்காடு புதர் பகுதியில் நேற்று மாலை 04.30 மணியளவில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனைக் கண்ணுற்ற சிலர் உடனடியாக திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
இதனிடையே, சுமார் 30 உயரத்துக்கு எழுந்து எரிந்த இந்தத் தீ தமது இல்லங்களைத் தாக்கி விடுமோ என்ற அச்சத்தில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் - தம் குடும்பத்து பள்ளிக் குழந்தைகள் துணையுடன் - தமதில்லங்களிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து பாய்ச்சி தீயை ஓரளவுக்கு அணைத்து விட்டனர்.
தீயணைப்பு வாகனம் நிகழ்விடத்தை வந்தடைந்தபோது பெரும்பாலும் புதர்கள் எரிந்து சாம்பலாகிவிட்டன. எனினும், ஆங்காங்கே பற்றி எரிந்துகொண்டிருந்த தீயை அவர்கள் மண் மற்றும் தண்ணீர் கொண்டு அணைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொடுத்தனர்.
திருச்செந்தூருக்கு 2 கிலோ மீட்டர் முன்பிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் பயணித்து காயல்பட்டினம் வந்து சேருவதற்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை நேரம் எடுப்பதாகத் தெரிவித்த தீயணைப்புப் படையினர், காயல்பட்டினத்தில் குறுகலான சாலைகளுக்கிடையிலெல்லாம் வீடுகளை அமைத்திருப்பதால், இதுபோன்ற சூழ்நிலைகளில் மீட்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளைச் செய்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும், தற்போது இந்த குறுகிய சாலைக்குள் தீயணைப்பு வாகனத்தைக் கொண்டு வர இயலவில்லை என்றும், வாகனத்துடன் இணைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாயை ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை மட்டுமே கொண்டு செல்ல இயலும் என்றும் தெரிவித்தனர்.
காயல்பட்டினம் நகராட்சியாக உள்ள நிலையிலும், இதுவரை இங்கு ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்கப்படாதிருப்பது பொதுமக்களுக்கு அச்சத்துடன் கூடிய பல கேள்விகளை எழுப்பியவண்ணம் உள்ளது. |