காயல்பட்டின மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான புதிய குடிநீர் திட்டத்திற்கான டெண்டர் அறிவிப்பு (ROC No.250/2010/A3/dt.26.7.2012) சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் - தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும், தமிழகம் முழுவதும் தின மலர் நாளிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 28 கோடியே, 30 லட்சத்து, 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த பணிகளுக்கான டெண்டர், இ-டெண்டர் முறையில் வெளியிடப்பட்டுள்ளது. டெண்டர் ஆவணங்களை ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 3 வரை - காயல்பட்டினம் நகராட்சியின் இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
செப்டம்பர் 4 அன்று மாலை 3 மணி வரை - நிரப்பப்பட்ட ஒப்பந்தபுள்ளிகள், இ-டெண்டர் முறையில் ஏற்றுக்கொள்ளப்படும். பெறப்பட்ட அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளும், அன்று மாலை 3:30 அளவில், டெண்டர் ஆய்வு குழுவிற்கு முன்னர், ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பித்த ஒப்பந்ததாரர்கள் இருக்க - காயல்பட்டினம் நகராட்சியில் - திறக்கப்படும். அன்றைய தினம், விடுமுறை என அறிவிக்க நேரிட்டால், அடுத்த வேலை நாளில், அதே இடத்தில, அதே நேரத்தில், ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும்.
ஒப்பந்தப்புள்ளிகள் திறப்பதிற்கு முன்னர் விளக்க கூட்டம் (Pre-Bid Meeting) ஆகஸ்ட் 23 அன்று காலை 11 மணி அளவில், காயல்பட்டினம் நகராட்சியில் நடைபெறும். டெண்டர் ஆவணங்களை - http://municipality.tn.gov.in/tenders மற்றும் http://tntenders.gov.in - ஆகிய இணையதளங்கள் மூலம் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த திட்டம் மத்திய அரசின் UIDSSMT (Urban Infrastructure Development Scheme for Small and Medium Towns) திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்படவுள்ளது. மொத்த திட்ட தொகையில் 80 சதவீதம் மத்திய அரசும், 10 சதவீதம் மாநில அரசும், 10 சதவீதம் காயல்பட்டினம் நகராட்சியும் பங்களிக்கும். அதன்படி காயல்பட்டினம் நகராட்சியின் பங்கு சுமார் 3 கோடி ரூபாய் இருக்கும் என தெரிகிறது.
திட்டம் துவக்கப்பட்டு 18 மாதங்களில் (மழை காலங்களையும் சேர்த்து) நிறைவு செய்யப்படவேண்டும் என்றும், இந்த டெண்டரில் பங்கேற்க விரும்பும் ஒப்பந்ததாரர்கள் - பாதுகாப்பு தொகையாக 28.35 லட்ச ரூபாய்க்கான கேட்புக் காசோலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், முதல் தர (Class 1) ஒப்பந்ததாரர்களே இந்த டெண்டரில் கலந்துக்கொள்ள முடியும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. |