கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் திரளான உறுப்பினர்களும், காயலர்களும் பங்கேற்றுள்ளனர். கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் செய்யித் முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
துவக்க நிகழ்வுகள்:
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் தலைமையில், தோஹாவிலுள்ள அலிஷான் ஓய்வுணவகத்தில் நடைபெற்றது. மன்றத்தின் மூத்த உறுப்பினர்களான ஜனாப் எஸ்.எம்.ராஃபிக், ஜனாப் முஹம்மத் தம்பி, ஜனாப் கே.வி.ஹபீப் முஹம்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் கனீ முஹம்மத் கிராஅத் ஓதி - கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர் ஃபைஸல் ரஹ்மான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ‘இசைக்குயில்‘ ஃபாயிஸ் - ரமழானின் சிறப்பை விளக்கும் இஸ்லாமிய இன்னிசை பாடினார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
அதனைத் தொடர்ந்து, மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு - செலவு கணக்கறிக்கை அடங்கிய நிதிநிலை அறிக்கையை, மன்றப் பொருளாளர் முஹ்யித்தீன் தம்பி சமர்பிக்க, கூட்டம் அதனை ஒருமனதாக அங்கீகரித்தது.
இதுவரை சந்தா செலுத்தாத அல்லது சந்தா தொகை நிலுவையிலுள்ள உறுப்பினர்கள், மன்றத்தின் நகர்நலப் பணிகள் தொய்வின்றித் தொடர தமது சந்தாக்களை விரைந்து செலுத்தி நிலுவையைத் தவிர்த்திடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
ஆண்டறிக்கை:
பின்னர் மன்றத்தின் ஆண்டறிக்கையை, மன்றச் செயலாளர் செய்யித் முஹ்யித்தீன் கூட்டத்தில் சமர்ப்பித்தார்.
வாழ்த்துரை:
அதனைத் தொடர்ந்து, மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கே.வி.ஹபீப் முஹம்மத் வாழ்த்துரை வழங்கினார்.
ஒற்றுமை, தர்மம் செய்தல் ஆகியவற்றின் அவசியம் மற்றும் பலன்கள் குறித்து அழகுற விளக்கிப் பேசிய அவர், கடந்த 25 ஆண்டுகளில் கத்தரில் நான்கு முறை மன்றம் துவக்கப்பட்டு - ஒற்றுமையின்மை காரணமாக இயங்காமல் போனதாகவும், இம்முறை உறுப்பினர்களின் மனப்பூர்வமான ஒற்றுமையுடன் கூடிய ஒத்துழைப்புடன் மன்றம் இறையருளால் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இந்நிலை இன்றும் சிறப்புற்று எந்நாளும் தொடர வேண்டுமெனவும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
மார்க்க சொற்பொழிவு:
அடுத்து, மவ்லவீ ஹாஃபிழ் ‘முத்துச்சுடர்‘ எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை பாக்கவீ - ‘ஸதக்காவின் சிறப்பு‘ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர் உரை:
பின்னர், இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - இடிஏ மெல்கோ நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் அப்துல் அஜீஸ் உரையாற்றினார்.
கத்தர் காயல் நல மன்றத்தின் செயல்பாடுகள், இந்நாட்டிலுள்ள பிற ஊர்களைச் சேர்ந்த மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், இம்மன்றத்தின் அனைத்து நன்முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துவதாகத் தெரிவித்தார்.
கத்தர் நாட்டின் பொருளாதாரம் குறித்துப் பேசிய அவர், கேஸ் வெல்த் உலகில் தற்போது மூன்றாமிடத்தில் இருக்கும் கத்தர் விரைவிலேயே முதலிடத்தை எட்டும் வாய்ப்புள்ளதாகவும், அதன் காரணமாக ஏராளமான வேலைவாய்ப்புகள் இந்நாட்டில் வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தியப் பொருளாதாரம் குறித்து பேசிய அவர், இந்தியாவின் பொருளாதாரம் விரைவில் சீனாவின் பொருளாதாரத்தை மிஞ்ச வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
உலகிலேயே அதிக வருமானம் கிடைப்பது கல்வியைக் கொண்டுதான் என அண்மையில் அமெரிக்கா ஒப்புக்கொண்டிருப்பதாகவும், அதனைக் கருத்திற்கொண்டு - நமது அதிகளவிலான நிதியாதாரத்தை ஏழை மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக முதலீடு செய்ய வேண்டியது அவசியமென்றும் தெரிவித்தார்.
உரையின் நிறைவில் சிறப்பு விருந்தினருக்கு மன்றத்தின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
தலைமையுரை:
பின்னர், கூட்டத் தலைவரும், மன்றத் தலைவருமான எஸ்.ஏ.ஃபாழுல் கரீம் தலைமையுரையாற்றினார்.
புற்றுநோய் பரிசோதனை முகாம் குறித்த விழிப்புணர்வு...
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புடன் இணைந்து நகரில் தொடராக நடத்தப்பட்டு வரும் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமில் பரிசோதனை செய்ய வரும் பொதுமக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துகொண்டே வருவதாகக் கவலை தெரிவித்த அவர், இப்பரிசோதனையின் அதிமுக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு - உலக காயல் நல மன்றங்கள் தத்தம் உறுப்பினர்களுக்கு ஊக்கமளித்து - ஊரிலுள்ள அவரவர் குடும்பத்தினரைக் கலந்துகொள்ளச் செய்தாலே பரவலாக இம்முகாமின் பயன்கள் நகரைச் சென்றடையும் என்றும், அனைத்துலக காயல் நல மன்றங்களும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமென்றும் தெரிவித்தார்.
பாராமல் விட்டோரின் பரிதாப நிலை...
புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் நடத்தப்பட்ட கடந்த நான்காண்டுகளில், முகாமில் கலந்துகொண்டு - புற்றுநோயை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, முறையான சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களும் உண்டு; அச்சத்தினாலோ, அலட்சியத்தினாலோ இம்முகாமைப் பயன்படுத்தாமல் விட்டு - புற்று நோய் முற்றிய நிலையில் நம்மிடம் வருந்திப் பேசியவர்களும் உண்டு என்று உருக்கத்துடன் தெரிவித்த அவர், முறையான வாய்ப்பிருந்தும் அதைப் பயன்படுத்தாமல் உயிரளவில் பாதிப்பைக் கேட்டு வாங்கும் பரிதாப நிலை நமதூரில் யாருக்கும் வந்துவிடக்கூடாது என்று ஆர்வம் தெரிவித்தார்.
சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் - நடத்தியோருக்கு நன்றி...
01.07.2012 அன்று காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட சர்க்கரை நோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி மற்றும் மறுநாள் 02.07.2012 அன்று நடத்தப்பட்ட சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம் ஆகியவற்றை முன்னின்று நடத்திய அனைத்து காயல் நல மன்றங்கள் மற்றும் நகரின் பொதுநல அமைப்பினருக்கும் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தனதுரையில் அவர் தெரிவித்தார்.
சர்க்கரை நோயின் அளவுக்கதிகமான பெருக்கத்திற்குக் காரணம்...
இப்பரிசோதனை முகாமில் சோதனை செய்துகொண்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது அளவுக்கதிகமான பரவல் என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து, காயல்பட்டினத்திலுள்ள மருத்துவ நிபுணர் ஒருவரிடம் கேட்டபோது, நமதூரின் உணவுப் பழக்கவழக்கங்கள் - சுற்றுப்புறச் சூழல் இதற்குக் காரணங்களாக இருந்தாலும், நம் பிள்ளைகளுக்கு பசியெடுக்கும் முன்பே அதிக உணவைத் திணிப்பதாலும்,
ஓடியாடி விளையாட வேண்டிய சிறுவர் - சிறுமியருக்கு உட்கார்ந்தே விளையாடத்தக்க - உடல் உழைப்புக்கு சிறிதும் வேலை கொடுக்காத கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் விளையாட்டு சாதனங்களை வாங்கிக்கொடுத்து நம் மக்கள் ரசிப்பதாலும்,
விளையாட்டுக்காக ஒதுக்கப்பட வேண்டிய மாலை நேரத்திலும் டியூஷன் என்ற பெயரில் பள்ளிப் படிப்பை மாறி மாறித் திணிப்பதாலும் கூட இந்நோய் நமதூரில் அதிகளவில் பரவியிருக்கக் கூடும் என்றும் கருத்து தெரிவித்ததாகக் கூறினார்.
ஒருங்கிணைந்த மருத்துவ உதவி...
மருத்துவ உதவி கோரி மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்களை இதுவரை நம் மன்றமே தனிப்பட்ட முறையில் பரிசீலித்து உதவி வந்ததாகவும், அண்மையில் ரியாத் மற்றும் சிங்கப்பூர் காயல் நல மன்றங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, உதவி கோரி பெறப்படும் விண்ணப்பங்களை மருத்துவ உதவி வழங்கும் திட்டத்தில் இணைந்து செயல்படும் ஆறு மன்றங்களின் பரிசீலனைக்கும் சமர்ப்பித்து, ஏற்கப்படும் விண்ணப்பங்களுக்கு - அந்தந்த மன்றங்களின் தகுதிக்குட்பட்டு உதவித் தொகையைப் பகிர்ந்தளிக்கலாம் என்றும் பெறப்பட்ட யோசனை குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நிறைவாக, மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா நன்றி கூற, மவ்லவீ ஏ.எல்.செய்யித் முஹம்மத் ஸாலிஹ் உமரீ துஆவுடன் கூட்ட நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றன.
துணை நிகழ்வுகள்:
பிரியாவிடை...
இக்கூட்டத்தில், கத்தரிலிருந்து பணிவிடை பெற்றுச் செல்லும் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் கனீ முஹம்மதுக்கு பிரியாவிடை வழங்கப்பட்டது.
பள்ளிச்சீருடை இலவச வினியோகம்...
சில காரணங்களால் நடப்பாண்டில் பள்ளிச் சீருடை இலவச வினியோகம் செய்யவிலாமற்போனதாகவும், வரும் ஆண்டில் சேர்த்து வழங்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வினாடி-வினா போட்டி...
மன்றத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் - நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி நகரின் மாணவ-மாணவியரிடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளதாகவும், அனைத்துப் பள்ளிகளும் நிறைந்த ஆர்வம் காண்பிக்கும் வகையில் வரும் ஆண்டில் இன்னும் மெருகேற்றி இப்போட்டி நடத்தப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மறைந்தோருக்கு இரங்கல்...
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் கே.எம்.எஸ்.மீரான் அவர்களின் தாயார் மறைவு மற்றும் மன்ற உறுப்பினர்களான உமர், லெப்பை ஆகியோரின் உறவினரான - அண்மையில் தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரெயில் தீ விபத்தில் பலியான விளக்கு முஹ்யித்தீன் ஆகியோரின் மறைவுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களின் பாவப் பிழை பொறுப்பிற்காக பிரார்த்திக்கப்பட்டது.
இஃப்தார் - நோன்பு துறப்பு:
கூட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து, பல்வேறு உணவுப் பதார்த்தங்களுடன் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கூட்டம் மற்றும் இஃப்தார் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும், 60 ஆண்கள், 10 பெண்கள் மற்றும் 9 குழந்தைகள் என மொத்தம் 79 பேர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை முஹம்மத் முஹ்யித்தீன் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
இவ்வாறு, கத்தர் காயல் நல மன்ற செயலாளர் செய்யித் முஹ்யித்தீன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
ஃபைஸல் ரஹ்மான் (கத்தர்) மூலமாக,
S.K.ஸாலிஹ்,
உள்ளூர் பிரதிநிதி,
கத்தர் காயல் நல மன்றம். |