காயல்பட்டணம்.காம் காயல்பட்டினம் நகராட்சியின் 2000 - 2001 ஆம் நிதியாண்டு முதல் ஏப்ரல் 2009 - டிசம்பர் 2009 (கடைசியாக பரிசீலனை
செய்யப்பட்டுள்ள காலகட்டம்) வரையிலான வரவு செலவு கணக்கு மற்றும் தணிக்கை அறிக்கையை - தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் - பெற்றுள்ளது.
மொத்தம் சுமார் 1600 பக்கங்கள் கொண்ட இவ்வறிக்கைகள் - பல அரிய தகவல்களை வழங்குகின்றன. அவைகளில் உள்ள முக்கியமான
தகவல்களை - தொடராக காயல்பட்டணம்.காம் வெளியிட்டு வருகிறது. பாகம் ஐந்து வரை காண இங்கு
அழுத்தவும்.
Tamil Nadu Municipalities Television Cables Installation Regulation Rules 2000 சட்டத்தின் விதிகள்படி - மே 4, 2000 அன்று
வெளியிடப்பட்ட அரசாணை - கேபிள்களை நகராட்சி பகுதிகளில் எடுத்துச் செல்ல, 1 கிலோ மீட்டருக்கு ரூபாய் 5500 வீதம் - கேபிள் டிவி
இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் நகராட்சிக்கு செலுத்தவேண்டும் என கூறுகிறது. இந்த கட்டணம் ஒவ்வொரு ஆண்டும்
ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதிக்குள் கட்டப்படவேண்டும். இந்த வரி காயல்பட்டினம் நகராட்சியில் வசூல் செய்யப்படுகிறதா? இது குறித்து தணிக்கை
அறிக்கை என்ன கூறுகிறது என பார்ப்போம்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 4.5.2000 நாளிட்ட அரசாணை எண் 58ன் படி கேபிள் தொலைக்காட்சி நடத்துபவர்கள், வீடுகளுக்கு கேபிள் தொலைக்காட்சி இணைப்பு வழங்குவதற்கு தங்களது கேபிள்களை நகராட்சிப்பகுதிகளில் எடுத்த செல்ல 1 கிலோ மீட்டருக்கு ரூ.5500 வீத தட வாடகையாக நகராட்சிக்கு செலுத்த வேண்டும். இந்நகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ள் 17 கிலோ மீட்டர் தொலைவிற்கு கேபிள் வடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கேபிள் தொலைக்காட்சி நடத்துபவர்களிடமிருந்த தனிக்கையாண்டில் தட வாடகை எதுவும் வசூல் செய்யப்படாததால் இத்தணிக்கையாண்டில் ரூபாய் 93,500 (17 * 5500) இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தொகை கேபிள் தொலைக்காட்சி நடத்துபவர்களிடம் வசூல் செய்யப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் அல்லது இழப்பிற்கு பொறுப்பான களப்பணியாளர்கள் மற்றும் செயல் அலுவலர்களிடமிருந்து இத்தொகை ஈடு செய்யப்பட் வேண்டும்.
மேலே குறிப்பிடப்படும் தணிக்கை தடை - காயல்பட்டினம் நகராட்சியின் தணிக்கை அறிக்கைகளில் 2001 ஆண்டு முதலிலிருந்து வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு இழப்பு சுமார் ஒரு லட்சம் என்றால் - இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட 12 ஆண்டுகளில், கேபிள் வடங்களுக்கான தட வாடகை வசூல் செய்யாமல், நகராட்சிக்கு இழப்பு குறைந்தது ரூபாய் 10 லட்சம் ஆகும்.
தணிக்கை அறிக்கைப்படி நகரில் 17 கிலோ மீட்டர் அளவிற்கு கேபிள் இணைப்புகள் உள்ளன. நகரில் உள்ள சாலைகளின் நீளம் சுமார் 32 கிலோமீட்டர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற தகவல்கள் - நகர சாலைகளின் நீளம் சுமார் 50 கிலோமீட்டர் என தெரிவிக்கின்றன. நகரில் கேபிள் இணைப்புகளே இல்லாத தெருக்கள்/வீடுகள் இல்லை என்பதே யதார்த்தம். எனவே - வரி விதிக்கப்படவேண்டிய நீளம் தற்போது அளவிடப்பட்டுள்ள நீளத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை அதிகம் இருக்கும் என்றே தெரிகிறது.
[தொடரும்] |