இந்தியாவின் இரு முக்கிய பருவ மழை காலங்கள் - தென் மேற்கு பருவ மழை மற்றும் வட கிழக்கு பருவ மழை. தென் மேற்கு பருவ மழை -
பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும். வட கிழக்கு பருவ மழை - அக்டோபர் முதல் டிசம்பர் வரை நீடிக்கும்.
இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை ஜூன் மாதம் துவங்கினாலும் - நாடு முழுவதும் வழமையை விட குறைவாகவே மழை பெய்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் வறட்சி நிலைமை நிலவுகிறது.
தமிழகம் தனது பெருவாரியான மழையினை (48 சதவீதம்) - வட கிழக்கு பருவ மழை காலத்தில் பெற்றாலும், இவ்வாண்டு தென் மேற்கு பருவ
மழை மூலம் பெரும் மழையின் அளவு வழமையை விட இதுவரை 31 சதவீதம் குறைவாக உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் - ஜூன் முதல்
இதுவரை எந்த மழையும் பெய்யவில்லை. வழமையாக இந்த காலகட்டத்தில் - தூத்துக்குடி பகுதியில் சராசரியாக 23.6 மில்லிமீட்டர் மழை பெய்யும்.
காயல்பட்டினம் குடிநீர் பெறும் மேல ஆத்தூரில் உள்ள நீர்தேக்கத்திற்கு - பாபநாசம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் விடப்படுவது வழக்கம்.
பாபநாசம் அணையின் மொத்த கொள்ளளவு 143 அடி. இன்று (ஆகஸ்ட் 7) அணையில் உள்ள தண்ணீரின் அளவு 33.65 அடி. இதே காலத்தில்
கடந்தாண்டு 43.10 அடிக்கு தண்ணீர் இருந்தது.
தினசரி சராசரியாக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் - TWAD மூலம் - காயல்பட்டினதிற்கு அனுப்பப்பட்டு வந்தது. அது தற்போது - 15 லட்ச லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது என TWAD துணை பொறியாளர் பாலசுப்ரமணியம் காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் - தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக இருப்பதால், சில நாட்களில் இந்த அளவும் குறைக்கப்படவேண்டி இருக்கும் என்றும், திருநெல்வேலியில் அமைச்சர் முனுசாமி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்ட சனிக்கிழமை நடந்த ஆய்வு கூட்டத்தில் - சூழ்நிலையை கருத்தில்கொண்டு - விரைவாக நில தண்ணீர் மூலம் காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில் - நிலத்தடி நீர் மூலம் காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்க குரும்பூர் அருகே நேற்று (ஆகஸ்ட் 6) ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக், ஆணையர் அசோக் குமார், மண்டல பொறியாளர் மற்றும் இதர அதிகாரிகள் ஆகியோர் குரும்பூருக்கு அருகில் உள்ள ஒரு பகுதியில் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.
[செய்தி திருத்தப்பட்டது @ 12:30pm; 8-8-2012] |