காயல்பட்டினம் தைக்கா தெருவின் நடுப்பகுதியில், மருத்துவர் தெருவை அணைத்தாற்போல் அமைந்துள்ளது மஸ்ஜித் அல்ஜதீத் - புதுப்பள்ளி.
காயல்பட்டினம் புறவழிச்சாலையின் துவக்கத்தில், சீதக்காதி தெருவையொட்டி அமைந்துள்ளது மஸ்ஜித் ஷெய்கு ஸலாஹுத்தீன் - மேலப்பள்ளி.
இவ்விரு பள்ளிகளும் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இப்பள்ளிகளின் தலைவராக ஹாஜி எஸ்.எம்.உஸைர், துணைத்தலைவர்களாக ஹாஜி எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ, ஷெய்கு ஸலாஹுத்தீன், செயலாளராக ஹாஜி ஏ.எஸ்.அஷ்ரஃப், துணைச் செயலாளர்களாக பி.எஸ்.அப்துல் காதிர் நெய்னா, ஹாஜி எஸ்.எம்.பி.செய்யித் உமர், பொருளாளர்களாக ஹாஜி பி.எம்.எஸ்.அமீர் அப்துல்லாஹ், எம்.எல்.ஹாரூன் ரஷீத் ஆகியோர் சேவையாற்றி வருகின்றனர்.
புதுப்பள்ளிவாசலின் ஐவேளைத் தொழுகைக்கான இமாமாக ஹாஃபிழ் செய்யித் நூஹ் பணியாற்றி வருகிறார். நடப்பாண்டு ரமழான் தராவீஹ் தொழுகையை - இவரும், ஹாஃபிழ் எஸ்.மூஸல் காழிம் என்பவரும் இணைந்து பொறுப்பேற்று வழிநடத்தி வருகின்றனர். இப்பள்ளியின் பிலாலாக அரபி முஹம்மத் முஹ்யித்தீன் பணியாற்றி வருகிறார்.
மேலப்பள்ளியின் இமாமாக ஷெய்கு அப்துல் காதிர் ஸூஃபீ என்பவர் பணியாற்றி வருகிறார். அவரே பள்ளியின் பிலால் பொறுப்பையும், நடப்பாண்டு ரமழான் தராவீஹ் தொழுகைக்கான பொறுப்பையும் ஏற்று, செய்து வருகிறார்.
விதிக்கப்பட்ட கடமைப் பணிகளை மட்டுமே செய்துவரும் வழமையைக் கொண்ட காயல்பட்டினம் நகர பள்ளி இமாம் - பிலால்களுக்கு இடையில் இவர் சற்று வித்தியாசமானவராக காணப்படுகிறார்.
பள்ளிவாசலைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் சிறுவர்களை பள்ளிக்கு அழைத்து திருமறை குர்ஆனை வாசிக்கக் கற்றுக்கொடுப்பதோடு மட்டுமின்றி, முறையான வருகைப் பதிவேடுகளைப் பராமரித்து, சிறந்த மாணவர்களுக்கு மாதந்தோறும் பரிசுப் பொருட்களையும் வழங்க ஊக்கப்படுத்தி வருகிறார்.
புதுப்பள்ளி, மேலப்பள்ளி ஆகிய இவ்விரு பள்ளிகளிலும், ரமழான் காலங்களில் ஒரே குழுவின் பொறுப்பில் தனித்தனியே நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு கஞ்சி தயாரிப்பு உள்ளிட்ட ரமழான் சிறப்பு ஏற்பாடுகளின் குழுவினராக, பி.எஸ்.அப்துல் காதிர் நெய்னா, ஹாஜி ஏ.எஸ்.அஷ்ரஃப், எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ், ஏ.எஸ்.முஹ்யித்தீன் கலீஃபா செய்யித் அஹ்மத், ஆர்.நாஸர் ஆகியோர் சேவையாற்றி வருகின்றனர்.
புதுப்பள்ளியில் கஞ்சி தயாரிப்பிற்கான ஒருநாள் உத்தேச செலவு விபரம்:-
கறி கஞ்சி - ரூ.10,000
கோழிக்கறி கஞ்சி - ரூ.8,500
வெண்கஞ்சி - 7,000
ரமழானின் இஃப்தார் உணவுப் பதார்த்தங்கள், தராவீஹ் தொழுகைக்குப் பின் வழங்கப்படும் குடிப்பு வகைகள், வித்ரிய்யா மஜ்லிஸில் வழங்கப்படும் நேர்ச்சை உள்ளிட்ட அனைத்தும் இச்செலவுத் தொகைக்குள் அடக்கம்.
புதுப்பள்ளியில் ரமழான் காலங்களில் தினமும் மதியம 03.00 மணிக்கு ஊற்றுக்கஞ்சி வினியோகம் நடைபெறுகிறது. இதனை அந்த மஹல்லாவைச் சார்ந்த சுமார் 100 குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர். தினமும் நடைபெறும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் 20 முதல் 30 பேர் வரை கலந்துகொள்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து மேலப்பள்ளியில் மதியம் 03.30 மணிக்கு ஊற்றுக்கஞ்சி வினியோகம் நடைபெறுகிறது. இதனை அந்த மஹல்லாவைச் சார்ந்த சுமார் 100 முதல் 150 குடும்பத்தினரும், சுற்றுவட்டாரங்களிலுள்ள முஸ்லிமல்லாத மக்களும் பெற்றுச் செல்கின்றனர். இப்பள்ளியில் நடைபெறும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் சுமார் 20 பேர் வரை கலந்துகொள்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, காயல்பட்டினத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பெரும்பாலும் வெண்கஞ்சியும், ரமழான் 12ஆம் நாள், 17ஆம் நாள், 27ஆம் நாள், 29ஆம் நாள் என சில விசேஷ தனிங்களில் மட்டும் கறி கஞ்சியும் தயாரிக்கப்படும் வழமை இருந்தது. நாளடைவில் இந்த வழமை முற்றிலுமாக மறக்கப்பட்டு, தற்போது பெரும்பாலும் அனைத்துப் பள்ளிகளிலும் தினமும் கறிகஞ்சியே தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுப்பள்ளி - மேலப்பள்ளி ஆகிய இவ்விரு பள்ளிகளில் மட்டும் தினமும் வெண்கஞ்சியும், அவ்வப்போது கறி கஞ்சியும் தயாரிக்கப்படும் பழைய வழமை இன்றளவும் பேணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
03.08.2012 அன்று புதுப்பள்ளிவாசலில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட படக்காட்சிகள் பின்வருமாறு:-
இப்பள்ளி ஜமாஅத்தினரைப் பொருத்த வரை, பள்ளியில் நடைபெறும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்போரை விட, வீட்டில் நோன்பு துறந்துவிட்டு, மஃரிப் தொழுகைக்கு பள்ளிக்கு வருவோரின் எண்ணிக்கையே அதிகம்.
இப்பள்ளியில் தினமும் இரவு தராவீஹ் சிறப்புத் தொழுகைக்குப் பின் நடைபெறும் வித்ரிய்யா மஜ்லிஸின் காட்சி:-
03.08.2012 அன்று மேலப்பள்ளிவாசலில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட படக்காட்சிகள் பின்வருமாறு:-
புதுப்பள்ளி - மேலப்பள்ளி குறித்த மேலதிக விபரங்களைக் காண செய்தி 1 செய்தி 2 |