காயல்பட்டினம் பரிமார் தெரு - அலியார் தெருவை அணைத்தாற்போல் - ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் முகப்புடன் அமைந்துள்ளது மஸ்ஜித் அஸ்ஸூக் என்ற கடைப்பள்ளிவாசல்.
மீரான், ‘ஹாஜி பரீக்கா‘ முத்து முஹம்மத், ‘மீன் ஏலம்‘ பாபு, முத்து முஹம்மத் ஆகிய நால்வர் இப்பள்ளியின் நிர்வாகிகளாக சேவையாற்றி வருகின்றனர்.
இப்பள்ளியின் இமாமாக காயல்பட்டினத்தைச் சேர்ந்த செய்யித் முஹம்மத் புகாரீ தங்ஙள் என்பவரும், பிலாலாக காயல்பட்டினத்தைச் சேர்ந்த எம்.எஸ்.அஹ்மத் ஸாமுனா லெப்பை என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
இட நெருக்கடி, கட்டிடத்தில் பழுது ஆகிய காரணங்களுக்காக இப்பள்ளி சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் - கட்டிடத்தின் பழைய அமைப்பு மாறாமல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது. உள்பள்ளி மற்றும் வெளிப்பள்ளி மேற்பகுதியில் சிமெண்ட் சுவர்களுக்குப் பகரமாக மார்பிள் கல் பதித்த சுவர்களும், சிமெண்ட் தளத்திற்குப் பகரமாக மார்பிள் தளமும் அமைக்கப்பட்டுள்ளது. உள்பள்ளியில், ஏ.சி. - குளிரூட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.
வருங்காலத்தில், வெளிப்பள்ளியின் கீழ் தளமும் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளது. அத்துடன், பள்ளியின் கிழக்குப் பகுதி வெளிப்புறத்தில் - பரிமார் தெரு பக்கமாக, திருமணம் - பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்ட உள்ளரங்க நிகழ்ச்சி நடத்தும் வகையில் கேளரங்கம் - ஆடிட்டோரியம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள பரிமார் தெரு மக்கள் தமது இல்லங்களின் திருமண நிகழ்ச்சிகளை, மிகக் குறைந்த செலவில் இப்பள்ளி வளாகத்திலேயே நடத்திக்கொள்ள இயலும்.
இப்பள்ளியில், தினமும் ஐவேளைத் தொழுகை தவிர, ரமழான் காலங்களில் தராவீஹ் சிறப்புத் தொழுகை நடத்தப்படுகிறது. நடப்பாண்டு ரமழான் தராவீஹ் - சிறப்புத் தொழுகையை ஹாஃபிழ் வாஸிம் அக்ரம் வழிநடத்துகிறார்.
தினமும் இஃப்தார் - நோன்பு துறப்பிற்காக கஞ்சி தயாரிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு பிரியாணி கஞ்சிக்கு ரூபாய் 4,000 தொகையும், கறி கஞ்சிக்கு ரூபாய் 4,200 தொகையும், வெண்கஞ்சிக்கு ரூபாய் 2,800 தொகையும் செலவிடப்படுகிறது. இச்செலவு, அன்றைய ஒருநாள் ரமழான் சிறப்புச் செலவுகள் அனைத்தையும் உள்ளடக்கும். ஊற்றுக்கஞ்சி வினியோகம் செய்யப்படுவதில்லை.
தினமும் மாலையில் நடத்தப்படும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் 50 முதல் 75 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு - பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், வடை, கஞ்சி, வெண்கஞ்சி எனில் சட்னி உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்படுகின்றன.
06.08.2012 அன்று மாலையில், இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
இப்பள்ளி குறித்த வரலாற்று விபரங்களைக் காண இங்கே சொடுக்குக! |