சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் திரளான காயலர்கள் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை பின்வருமாறு:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் எமது ரியாத் காயல் நற்பணி மன்றம் (ரக்வா) அமைப்பின் 44ஆவது பொது குழுக்கூட்டம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி 03.08.2012 வெள்ளிக்கிழமை மாலை பத்ஹா ஹால்ஃப் மூன் பார்ட்டி ஹாலில், எமது அமைப்பின் தலைவர் ஹாஜி எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன் தலைமையில் நடைபெற்றது.
ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக் இறைமறையின் வசந்த வார்த்தைகளை ஓதி நிகழ்ச்சியை ஆரம்பம் செய்தார். வந்தோரை இன்முகத்துடன் வரவேற்று ஹாஃபிழ் ஷேக் தாவூத் இத்ரீஸ் உரையாற்றினார்.
தொடர்ந்து எமது மன்ற பாடகர் இன்னிசைத் தென்றல் ஷேக் அப்துல் காதர் இனிமையான ரமலான் வாழ்த்து பாடல் பாடினார்.
அடுத்து தலைமையுரை இடம்பெற்றது. தலைவர் தமது முன்னுரையில், மன்றம் ஆற்றி வரும் பணிகளைத் தொய்வின்றி செயல்படுத்திட மன்ற உறுப்பினர்கள், காயல் நண்பர்கள் தங்கள் அறிவுரை, நல்ல ஆலோசனைகளை நிறைவாகத் தருவதோடு மட்டுமின்றி, நமதூர் வறியவர் துயர் துடைக்கும் பணியில் ஆர்வமுடன் நமது அமைப்புடன் ஒத்துழைக்க வேண்டுமாய் கேட்டு கொண்டார்.
அடுத்து உரையாற்றிய ஹாஜி எம்.இ.எல்.நுஸ்கீ, நமது மன்றம் இதுவரை ஆற்றிய பணிகள் அதன் மூலம் பயன் பெற்றோர், இனி ஆற்ற இருக்கும் பணிகள் பற்றியும், இவ்வருடம் காயலில் வறிய குடும்பத்தினர் கண்டறியப்பட்டு புனித ரமலான் மாதத்தில் அவர்களுக்குத் தேவையான பொருட்கள் 53 குடும்பத்தினருக்கு ரூபாய் 1,10,760/- செலவில், மன்ற உறுப்பினர்களின் அனுசரணையோடு வழங்கப்பட்டது பற்றியும் இது வகைக்கு உதவிய அன்பு உள்ளங்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அனுக்கிரகம் நின்று நிலவட்டுமாக என்றும், அதுபோல் எமது அமைப்பின் அனுசரணையுடன் பி.இ. படிப்பை ஒரு மாணவர் முடித்துள்ளார் என்றும் தனதுரையில் நினைவு கூர்ந்தார்.
இன்னும் 2 மாணவர்கள் தொடர்ந்து படித்து வருவதாகவும் அவர்களும் படித்து முடித்து நல்ல நிலைக்கு வரும் பட்சத்தில் அவர்களின் குடும்பத்தினர் வாழ்வு சிறப்படையும் என்றும், அந்நேரம் அவர்கள் கேட்கும் துஆ இருக்கிறதே அந்த ஒரே ஒரு பிரதிபலனை மட்டும் எதிர்பார்த்து நமது உறுப்பினர்கள் வாரி வாரி வழங்குகிறார்கள் என்றும், இதுபோன்று இன்னும் பல காரியங்களை உங்களின் ஒத்துழைப்பு இருந்தால் நிறைவேற்றலாம்... எனவே உங்களின் ஏழை வரி என்னும் ஜகாத், ஸதகா போன்ற வகைகளில் ஒரு பகுதியை ஒதுக்கி இதுபோன்ற நீடூழி கால நன்மையை பெற்றுகொள்ளுமாறும் அவர் தனதுரையில் கேட்டுக் கொண்டார்.
அதுபோன்று இது வரை மன்றம் துவங்காமல் இருக்கும் அல்லது துவங்கி செயல்படாமல் இருக்கும் மும்பை, கல்கத்தா, திருச்சி, போன்ற நகரங்களில் நமது மக்கள் துரிதமாக மன்றம் துவங்கி காயல் மக்களின் துயர் துடைக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகோள் விடுத்தார்.
தொடந்து உரையாற்றிய மன்ற பொதுச்செயலர் கூஸ் முஹம்மத் அபூபக்கர், நமது மன்றம் இவ்வருடம் தாய்லாந்து மன்றத்துடன் இணைந்து நமதூர் பள்ளிவாசல் இமாம் - முஅத்தின் ஆகியோருக்கு ஊக்கத்தொகை புனித ரமழான் மாதத்தில் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும், .அது வகைக்கு நம் மன்றம் ரூபாய் 25,000 வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுபோன்று மருத்துவ வகைக்கு ஐந்தாயிரம், மூவாயிரம் கேட்டு எல்லாம் கடிதம் வருவதாகத் தெரிவித்த அவர், அப்படிபட்டவர்களுக்கு உற்றார்-உறவினர்கள் மற்றும் பக்கத்துக்கு பகுதியை சார்ந்தவர்களே வழங்கி விடலாம் என்றும், இப்படி உதவி ஒத்தாசை இல்லாமல் இருக்குமேயானால் அல்லாஹ்வின் கோபத்திற்கு யாரும் தப்ப முடியாது என்றும் எச்சரித்தார். இருந்தும் அப்படிப்பட்ட கடிதங்கள் கூட பரிசீலிக்கப்பட்டு எமது மன்றத்தின் மூலம் வழங்கப்படுகிறது என்று எடுத்துரைத்தார்.
அடுத்து உரையாற்றிய புதுக்கோட்டை மாவட்டம் அரசனாரி பட்டினம் இளம்பிறை மன்றத்தின் தலைவர் ஜனாப் ஆசிக் இக்பால் ரக்வா அமைப்பு செயல்படும் விதம் கண்டு எங்களூர் ரியாத் வாழ் நண்பர்கள் இளம்பிறை நற்பணி மன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளோம் என்று கூறி, அதற்கு வழிகோலிய ரக்வா அமைப்புக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக மகிழ்வுடன் தெரிவித்தார்.
அடுத்து வாழ்த்துரை வழங்கிய தம்மாம் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் நமதூரை பூர்வீகமாகக் கொண்ட முனைவர் யாசீன் அவர்கள் தமது உரையில், காயல்பட்டினத்தில் வளர்ந்த காரணத்தினால்தான், தான் இந்த நல்ல நிலைக்கு முன்னேறியுள்ளதாகவும், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தில் அடிப்படைக் கல்வி பயின்றதாகவும், நமதூர் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் அங்கெல்லாம் அமைப்பை ஏற்படுத்தி நல்ல சேவைகளை செய்வதாகவும், அதுபோன்று ரக்வா அமைப்பு இவ்வளவு சிறப்புடன் பணியாற்றி வருவது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது என்றும் தெரிவித்தார்.
நமதூர் வறிய மக்களின் துயர் துடைக்கும் சீரிய பணியில் நானும் உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன், அது எனது கடமை என்றும் நமதூர் மாணவ செல்வங்கள் எல்லாத் துறைகளிலும் முத்திரை பதிக்க வேண்டும் என்றும் அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
அடுத்து வாழ்த்துரை வழங்கிய ரியாத் தமிழ் சங்க நிர்வாகி காயல் ஹைதர் அலி அவர்கள் தமதுரையில், சிறப்பான இந்த ரமலான் மாதத்தில் இப்தார் நிகழ்ச்சியில் காயல் மக்களை ஒரு சேர கண்டுகளிக்கும் வாய்ப்பைத் தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு நன்றி தெரிவித்து, நமதூர் வறிய மக்களின் துயர் துடைக்கும் சீரிய பணியினை ஆற்றி வரும் ரக்வா அமைப்புக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.
நமதூரில் வட்டியின் கோரப்பிடியில் இருந்து ஏழை மக்களைக் காப்பாற்ற நாமனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். எல்லாத் துறைகளிலும் சாதனை படைக்கும் நமது மாணவச் செல்வங்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற ஆட்சிப் பணி துறைகளில் இதுவரை யாரும் நுழைய முன்வரவில்லை என்றும் ஆதங்கம் தெரிவித்த அவர், இது வகைக்கு இக்ராஃ அமைப்பு மாணவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து பள்ளிப்படிப்பின் போதே மாணவர்களின் திறமையை வெளிக்கொணர ஆவன செய்ய வேண்டும் என்றும், இது விஷயத்தில் நமது ரக்வா உள்ளிட்ட உலக காயல் நல மன்றங்கள் தங்களது முழுமைமையான பங்களிப்பை தர தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார். ரக்வாவின் செயல்பாட்டில் எனது பணியும் இன்ஷா அல்லாஹ் அமையும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இறுதியாக கேரளா முஸ்லிம் கலாசாரக் கழகத்தின் (KMCC) கேப்டன் ஹாஜி அரூஸுல் அஹ்மத் அவர்கள் நமது மன்றத்தின் பணிகளை வாழ்த்தியும் அவர்கள் மேற்கொண்டு வரும் நலப்பணிகள் பற்றியும் விரிவாகவும் உணர்ச்சி மயமாகவும் எடுத்துரைத்தார். அவரது உரையில் இந்தியாவில் கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு பகுதியிலும், தமிழ்நாட்டில் காயல்பட்டினம் பகுதியிலும் தான் இஸ்லாம் உதயமானது என்றும், அப்படிப்பட்ட சிறப்பான ஒரு ஊரின் அமைப்பான ரக்வா மன்றத்தின் சிறப்பு விருந்தினராக தான் அழைக்கப்பட்டதை எண்ணி எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு நன்றி தெரிவிப்பதாகவும், இம்மன்றம் செய்யும் பணி மகத்தான இறை பணி. இது தான் இறைவனும் இறை தூதர் நபிகள் நாயகமும் விரும்பிய ஒன்று என்றும் தெரிவித்தார்.
தாங்களும் பல்வேறு பணிகளை செய்து வருவதாகவும், குறிப்பாக தங்கள் பகுதிகளில் நம்மவர் நிர்வகிக்கும் மருத்துவமனைகளில் கிட்னி வியாதியினால் அவதியுறும் வறிய மக்களுக்கு இலவசமாக டயாலிசிஸ் கருவி அமைத்து இலவசமாக டயாலிசிஸ் செய்து வருவதாகவும், கான்சர் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கீமோ தெரபி கருவி அமைத்து இலவசமாக சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்த அவர், இது வகைக்கு எங்கள் மாநில சமுதாய தனவந்தர்கள் மற்றும் இங்கே பணிபுரியும் மக்களிடம் வசூலித்து இதுபோன்ற மருத்துவ உபகரணங்கள் பல்வேறு பகுதிகளில் அமைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
நீங்களும் இது போன்று செய்தால் நமது மக்களில் இதுபோன்ற நோயினால் பாதிக்கபட்டவர்களுக்கு உதவி அளிக்கலாம் என்றும், அதன் மூலம் மிக பெரும் செலவு குறையும் என்றும், அம்மக்களின் நோயின் கடுமையும் குறையும் என்றும் தெரிவித்தார்.
அதுபோன்று கல்வி மற்றும் தொழில் துறைகளிலும் பல வழிகளில் செயல்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்த அவர், இங்கு வளைகுடாவில் பல வழிகளிலும் பாதிப்பிற்குள்ளாகும் நம் மக்களுக்கு பல வகைகளில் உதவி புரிந்து வருவதாகவும், தேவையான சட்ட உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். உங்களில் ஒருவனாக என்னால் முடிந்த எந்த ஒரு உதவியையும் நான் செய்து தர தயாராக இருக்கிறேன் என்றும் அவர் ஆர்வத்துடன் குறிப்பிட்டார்.
உலக நாடுகளில் முஸ்லிம் சமூகம் பல்வேறு நிலைகளிலும் கருவறுக்கப்படுகிறது... இன்று சிரியா, பாலஸ்தீன் ,ஆப்கானிஸ்தான், பர்மா, ஈராக், ஏமன், நமது இந்திய நாட்டில் அஸ்ஸாம், குஜராத் போன்ற மாநிலத்தில் கூட நமது மக்கள் மிகுந்த தொல்லை துன்பங்கள் அனுபவித்து வருகிறார்கள். அம்மக்களுக்காக நாமும் அல்லாஹ்விடம் இப்புனித ரமலான் மாதத்தில் பிரார்த்திப்போம். ஒற்றுமையுடன் செயல்படுவோம்... எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவானாக என்று தெரிவித்து, பிரார்த்தனையுடன் தனதுரையை நிறைவு செய்தார்.
பின்னர், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் கூப்பன் வழங்கப்பட்டு ஐந்து நபர்கள் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசளிக்கப்பட்டனர்.
நன்றியுரை ஹாஜி எம்.எஸ்.நயீமுல்லாஹ் அவர்களால் வழங்கப்பட்டு ஹாஃபிழ் பி.எஸ்.ஜெ.ஜைனுல் ஆப்தீன் அவர்களால் துஆ ஓதப்பட்டு ஸலவாத்துடன் கூட்டம் இனிதுற நிறைவுபெற்றது.
பின்னர் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் சுவையான காயல் பிரியாணி கஞ்சி மற்றும் கடற்பாசி உள்ளிட்ட பலகாரங்கள் பரிமாறப்பட்டது. பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகளில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அனைத்து நிகழ்ச்சிகளின் விரிவான படக்காட்சிகளை இங்கே சொடுக்கி காணலாம்.
இவ்வாறு, ரியாத் காயல் நற்பணி மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில்,
S.M.முஹம்மத் லெப்பை
மற்றும்
A.T.ஸூஃபீ இப்றாஹீம் |