தனியார் மருத்துவமனைகளில் பேறுகால மரணங்களைக் குறைத்திடும் நோக்குடன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:-
தனியார் மருத்துவமனைகளில் பேறுகால மரணங்களைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, 09.02.2012 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து பேறுகால மருத்துவமனை கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அனைத்து மருத்துவமனைகளையும் தணிக்கை செய்திட சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட 6 குழுக்கள் அமைக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டுள்ளது. தணிக்கை அறிக்கையின்படி, அனைத்து தனியார் மருத்துவர்களுக்கும் கீழ்க்காணும் அறிவுரைகள் வழங்கப்பட்டன:-
*** ஒவ்வொரு பேறுகால மருத்துவமனையிலும் பேறுகால மருத்துவர் மற்றும் குழந்தை நல மருத்துவர்கள் பணியிலிருக்க வேண்டும்...
*** பயிற்சி செவிலியர் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும்...
*** பணியிலிருக்கும் மருத்துவர்கள், செவிலியர் குறித்த விபரங்கள் அறிவிப்புப் பலகையில் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்...
*** தாய் மற்றும் குழந்தையின் நிலைப்பாட்டினை அவ்வப்போது உறவினர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்...
*** சி.டி.ஜி. மானிட்டர், அவசர கால மருந்துகள், பிரசவ அறைக்குள் போதிய இடவசதி, அறுவை அரங்கப் பாதைகள் நெரிசலின்றி இருத்தல் வேண்டும்... இதன் மூலம் தொற்று நோய் பரவலைத் தடுக்க வேண்டும்...
*** மருத்துவமனை வளாகம், மருத்துவமனையிலுள்ள அனைத்து அறைகளும் சுத்தமான முறையில் பராமரிக்கப்பட வேண்டும்...
*** பேறுகால வார்டு மற்றும் மருத்துவமனை வாயிலில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்...
மருத்துவமனை - மருத்துவ தொடர்பில்லா நபர்களால் நடத்தப்படுவது தெரிந்தால், உரிய நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்...
மேற்கண்ட அறிவுரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
டெங்கு பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் நபர்களுக்கு டெங்கு பாதிப்பை சரியாக அறிந்துகொள்ள, கார்டு பரிசோதனை செய்யப்பட்ட நபர்களுக்கு அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தோராயமாக எலிசா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இப்பரிசோதனையின் மூலமே உண்மை நிலையை உறுதிப்படுத்திட இயலும். இல்லையேல் தவறான பரிசோதனை முடிவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, அனைத்து தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் எலிசா பரிசோதனை மூலம் டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த வேண்டும். உறுதிப்படுத்தப்பட்ட பின் உடனடியாக பொது சுகாதாரத் துறைக்கு தகவல் அனுப்பி, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |