சென்னையில், மண்ணடி - புரசைவாக்கம் - தி.நகர் ஆகிய பகுதிகளில் காயலர்கள் செறிவாக வசித்து வருகின்றனர்.
சென்னை புரசைவாக்கம் - தானா தெருவில் அமைந்துள்ளது - காயல்பட்டினத்திற்குச் செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகள், காயலர்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டினருக்கு விமானப் பயண ஏற்பாடுகளைச் செய்துகொடுக்கும் காயல் டெலிகாம் நிறுவனம்.
இந்நிறுவனத்தின் சார்பில், புரசைவாக்கத்திலுள்ள காயலர்களை ஒருங்கிணைத்து, நடப்பாண்டு முதல் ரமழான் இஃப்தார் - நோன்பு துறப்பு, தராவீஹ் - சிறப்புத் தொழுகை, மார்க்க சொற்பொழிவு, ஸஹர் உணவு ஏற்பாடுகள் என அனைத்தையும் செய்து வருகின்றனர், அதன் அதிபர்களான - காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த அப்துல் காதிர் மற்றும் காதிர் சுலைமான் ஆகியோர்.
தினமும் இந்நிறுவன வளாகத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து இரவில் தராவீஹ் - சிறப்புத் தொழுகையும், அவ்வப்போது மார்க்க சொற்பொழிவும், தினமும் - காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி ஸஹர் உணவு ஏற்பாடும் செய்யப்பட்டு வருகிறது.
இஃப்தார், தராவீஹ் தொழுகை மற்றும் ஸஹர் உணவு ஆகிய அனைத்து நிகழ்வுகளிலும் தினமும் சுமார் 50 காயலர்கள் பங்கேற்று வருகின்றனர்.
தராவீஹ் தொழுகையை காயல்பட்டினம் தீவுத் தெருவைச் சார்ந்த ஹாஃபிழ் ஃபைஸல், ஆஸாத் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் செய்யித் முஹம்மத் அஃப்ழல் ஆகியோர் வழிநடத்தி வருகின்றனர்.
நடப்பு ரமழானில், 17ஆம் நாளன்று, பத்ர் ஸஹாபாக்கள் நினைவு தின நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், பத்ர் ஸஹாபாக்கள் புகழோதும் மவ்லித் மஜ்லிஸும், அதனைத் தொடர்ந்து துஆ மஜ்லிஸும் நடத்தப்பட்டுள்ளது. மவ்லவீ நூருத்தீன் ஷக்காஃபீ அவற்றை வழிநடத்தினார்.
அதனைத் தொடர்ந்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பத்ர் ஸஹாபாக்கள் கொண்டிருந்த நேசம், பத்ர் போர் நிகழ்வுகள் ஆகிய செய்திகளை உள்ளடக்கி, சென்னை மடிப்பாக்கம் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் மவ்லவீ அப்துல்லாஹ் கான் காதிரீ உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் பெரும்பாலான காயலர்கள் உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இரவு 12.30 மணிக்கு சொற்பொழிவு துவங்கி அதிகாலை 02.30 மணிக்கு நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி களறி சாப்பாடு அனைவருக்கும் ஸஹர் உணவாகப் பரிமாறப்பட்டது.
காயலர்களின் வசதியைக் கருத்திற்கொண்டு, நடப்பாண்டு முதல் இனி வருங்காலங்களில், ஆண்டுதோறும் ரமழான் சிறப்பேற்பாடுகளைச் செய்யவுள்ளதாக, காயல் டெலிகாம் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
தகவல்:
லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன்
[செய்தி திருத்தப்பட்டது @ 15:48/09.08.2012] |