காயல்பட்டினத்தில் 90 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குப்பைகளை சுத்திகரிக்க Bio-Gas தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கும், நகரில் தினசரி உருவாகும் குப்பைகளை கொட்ட இடமும் கோரி நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
பெறுனர்
காயல்பட்டினம் அனைத்து ஜமாஅத்தினர்,
பொது நல அமைப்புகள் மற்றும் பொது மக்கள்.
பேரன்புடையீர்,
சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!
காயல்பட்டினம் நகராட்சியில் தினசரி உருவாகும் குப்பைகளை அள்ள - நவீன குப்பை வண்டி (Dumber Placer Vehicle) ஒன்றும், 45 குப்பை தொட்டியும் (Dumber Placer Bin), 48 தள்ளு வண்டியும் (Push Carts) - சுமார் 38 லட்ச ரூபாய் செலவில் - தமிழக அரசின் IUDM திட்டத்தின் கீழ் - டெண்டர் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இவை நகரில் அறிமுகப்படுத்தப்படும். மேலும் டெண்டர் மூலம் மிச்சமான 12 லட்ச ரூபாய்க்கும் - IUDM திட்டத்தின் கீழ் - திடக்கழிவு பராமரிப்பு சம்பந்தமான பொருட்கள் வாங்க நகராட்சி நிர்வாகத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
நகரில் உருவாகும் குப்பைகள் தற்போது - தனியார் நிலத்தில் கொட்டப்படுகிறது. நகராட்சிக்கு என குப்பைகளை கொட்ட பிரத்தியேக இடம் வாங்க 2006 ஆம் ஆண்டே அரசு, 5 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. இருப்பினும் இது வரை அதற்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் - மக்கும் குப்பைகளை நவீன முறையில் சுத்தீகரிக்க Bio-Gas Plant ஒன்றினை 90 லட்ச ரூபாய் செலவில் - காயல்பட்டினத்தில் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த வசதியை உருவாக்க குறைந்தது 10 சென்ட் இடம் தேவை. மேலும் - இந்த இடம், குப்பை கொட்டப்படும் இடத்திற்கு அருகில் இருப்பது சிறந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சிக்கு என பிரத்தியேக குப்பைகள் கொட்டும் இடம் இல்லாததால் - அதற்கு தேவைப்படும் 5 ஏக்கர் நிலம் கிடைக்கும் பட்சத்தில், அதே இடத்தில, Bio-Gas Plant க்கு தேவையான 10 சென்ட் நிலத்தையும் நாம் ஒதுக்கலாம். எனவே - நகரில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேவைக்கான நிலம் வைத்துள்ளவர்கள், இந்த முக்கிய பணிக்கு இடம் தந்து உதவிடும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள். இந்த பணிகள் அனைத்தும் இறைவன் உதவியுடன் நிறைவேறினால் - கூடிய விரைவில் - குப்பைகள் தெருக்களில் தேங்காத நகராக நம் நகரை நாம் மாற்றிவிடலாம்.
ஆகவே - அனைத்து ஜமாஅத்துகளும், பொது நல அமைப்புகளும், பொது மக்களும் - இப்பணிகளுக்கு தேவையான இடத்தினை அடையாளம் கண்டு, நகராட்சிக்கு தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
இவண்,
ஐ. ஆபிதா சேக்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |