பொருளாதாரத்தில் பின் தங்கிய ITI மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
“கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” என்ற நாமக்கல் கவிஞர் அவர்களின் வாக்கிற்கிணங்க, இரண்டு கோடி நபர்களை வேலைவாய்ப்புக்கேற்ற, பயிற்சி மற்றும் திறன் பெற்ற பணியாளர்களாக உருவாக்கும் நோக்குடன், தொலை நோக்குத் திட்டம் 2023 உட்பட வேலை வாய்ப்பை தரக்கூடிய தொழில் கல்வி சார்ந்த பல்வேறு திட்டங்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா
அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.
தொழில் திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற் பயிற்சி நிலையங்கள் (Industrial Training Institutes - ITIs) அரசால் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையங்களில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியர்களில் பெரும்பாலோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் என்பதால், தொலைவில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு அவர்களது இல்லங்களிலிருந்து வந்து செல்வதற்கு வசதியாக பள்ளி மாணவ, மாணவிகளைப் போல இவர்களுக்கும் விலையில்லா மிதிவண்டி
வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக 6 கோடியே 36 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இதன் மூலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 21,925 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.
அரசின் இந்த நடவடிக்கை தொழிற் பயிற்சி நிலையங்களில் அதிக அளவு மாணவ மாணவியர்கள் சேர்ந்து பயிலவும் வருங்காலத்தில் தொழிற் திறன் வாய்ந்த மனித வளம் உருவாவதற்கும் அடித்தளமாக அமையும்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை-9. |