இந்தியாவின் துணை ஜனாதிபதியாக ஹமீத் அன்சாரி இன்று மீண்டும் பதவி ஏற்றார். இன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அன்சாரிக்கு, ஜனாதிபதி பிரணாப் முக்கர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 75 வயது நிரம்பிய ஹமீத் அன்சாரியின் பூர்வீகம் உத்தர் பிரதேஷ் மாநிலம் என்றாலும், இவர் கொல்கத்தாவில் பிறந்தவர்.
2007 ஆம் ஆண்டு முதலில் துணை ஜனாதிபதியாக தேர்வான அன்சாரி, இரண்டாவது முறையாக தேர்வாகும் - இரண்டாவது துணை ஜனாதிபதி ஆவார். இதற்கு முன்னர் எஸ். ராதாகிருஷ்ணன் இருமுறை துணை ஜனாதிபதியாக இருந்து, பின்னர் ஜனாதிபதியாக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை ஜனாதிபதியின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று இந்திய பாராளுமன்றத்தின் ராஜ்யசபாவின் சபாநாயகராக செயல்புரிவதாகும்.
முன்னதாக ஆகஸ்ட் 7 அன்று நடந்த தேர்தலில் ஹமீத் அன்சாரி, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான ஜஸ்வந்த் சிங்கை 490 - 238 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தேர்தலில் - இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளின் 788 உறுப்பினர்கள் - வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.
கடந்த மாதம் நடந்த தேர்தலில் பிரணாப் முக்கர்ஜி இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. |