சஊதி அரபிய்யாவில், உம்றா சென்று வந்த வாகனம் விபத்திற்குள்ளானதில், அதில் பயணித்த 2 காயலர்கள் உட்பட நால்வர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். விபரம் பின்வருமாறு:-
காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவைச் சார்ந்தவர் எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய். 37 வயதான இவர் நெய்னார் தெருவில் திருமணம் செய்துள்ளார். காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சார்ந்தவர் ஹுஸைன் ஹல்லாஜ். இவருக்கு வயது 37. பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் அலாவுத்தீன். (வயது 54). சீர்காழியைச் சேர்ந்தவர் முஹம்மத் அலீ. வயது 57.
இந்நால்வரும், 09.08.2012 வியாழக்கிழமையன்று அதிகாலை 02.00 மணியளவில், சஊதி அரபிய்யா - யான்பு நகரிலிருந்து காரில் புனித மக்கா நகருக்கு உம்றா சென்றுள்ளனர். உம்றா கிரியைகளை நிறைவு செய்த பின், மதியம் 01.00 மணியளவில் அதே வாகனத்தில் வசிப்பிடம் திரும்பிக் கொண்டிருந்தனர். வாகனத்தை எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் ஓட்டியுள்ளார்.
மதியம் 03.30 மணியளவில், யான்பு - மக்கா நகரங்களுக்கிடையே ராபித் என்ற இடத்தில் வாகனம் சென்றுகொண்டிருக்கையில், பயண அலுப்பில் அனைவரும் கண்ணயர்ந்துள்ளனர். வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தவரும் சற்று கண்ணயர்ந்துவிட்ட நிலையில், முன் சென்று கொண்டிருந்த ட்ரெய்லர் கனரக வாகனத்தின் மீது இவர்களின் கார் மோதி முற்றிலும் நொறுங்கிவிட்டது.
இந்த விபத்தில், அதில் பயணித்த அனைவரும், பெரும்பாலும் கால்களிலும், வேறு சில இடங்களிலும் காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த சஊதி காவல்துறையினர் மற்றும் மருத்துவ மீட்புக்குழுவினர், விரைந்து செயல்பட்டு, காரில் பயணித்த நால்வரையும், விபத்து நடந்த ராபித் நகரிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில், ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் இன்று (வெள்ளிக்கிழமை) வசிப்பிடம் திரும்பிவிட்டனர். பட்டுக்கோட்டையைச் சார்ந்த அலாவுத்தீனுக்கு காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் காயமுற்ற காயலர்கள் - தாம் நலமுடனிருப்பதாகவும், தங்களுக்காக இறைவனிடம் அனைவரும் பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தகவல்:
S.A.ஸல்மான் ஃபாரிஸ்,
யான்பு, சஊதி அரபிய்யா. |