காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், தீவுத்தெரு - ஸீ-கஸ்டம்ஸ் சாலை, முத்துவாப்பா தைக்கா தெரு ஆகியவற்றை அணைத்தாற்போல் அமைந்துள்ளது மஸ்ஜிதுல் உஸ்ஃபூர் எனும் குருவித்துறைப்பள்ளி.
இப்பள்ளியின் தலைவராக சேவையாற்றிய மர்ஹூம் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஜுமானீ அவர்களின் மறைவிற்குப் பின், பள்ளியின் துணைத்தலைவர் ஹாஜி நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் அப்பொறுப்பைத் தற்காலிகமாகக் கவனித்து வருகிறார்.
ஹாஜி எஸ்.எம்.கபீர் பள்ளியின் செயலாளராகவும், ஹாஜி எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல் (எஸ்.ஜே.எம்.மெடிக்கல்ஸ்), ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் (சுலைமானிய்யா கார்ப்பரேஷன்) ஆகியோர் இணைச் செயலாளர்களாகவும் சேவையாற்றி வருகின்றனர்.
மவ்லவீ எம்.எல்.முஹம்மத் அலீ பள்ளியின் இமாமாகவும், சதக்கு இப்றாஹீம் பிலாலாகவும் பணியாற்றி வருகின்றனர். நடப்பாண்டு ரமழான் தராவீஹ் சிறப்புத் தொழுகையை, ஹாஃபிழ் கே.எஸ்.நவ்ஃபல் ரிஸ்வீ வழிநடத்தி வருகிறார்.
பள்ளியின் நடப்பாண்டு கஞ்சி தயாரிப்பு உள்ளிட்ட ரமழான் சிறப்பேற்பாடுகளை, ஹாஜி எஸ்.எம்.எஸ்.முஹம்மத் நூஹ் தலைவராகவும், ஹாஜி எஸ்.ஏ.பீர் முஹம்மத் துணைத்தலைவராகவும், ஹாஜி கே.எம்.ஐ.மூஸா நெய்னா, எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், ஹாஜி என்.டி.ஷேக் சுலைமான், எம்.இ.எல்.முஹ்யித்தீன், எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ், சொளுக்கு ஏ.ஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாஜி எஸ்.எஸ்.இப்றாஹீம், எஸ்.ஏ.காஜா, எம்.இ.எல்.புகாரீ, கணக்கர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் பொறுப்பேற்று செய்து வருகின்றனர்.
இப்பள்ளியில் தினமும் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டு, மாலை 05.00 மணியளவில் இல்லங்களுக்கு ஊற்றுக்கஞ்சியாக வினியோகிக்கப்பட்டும், பின்னர் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டும் வருகிறது. ஊற்றுக்கஞ்சியை, இப்பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த குடும்பத்தினர், நகரில் வணிக நிறுவனங்களை நடத்துவோர் என 100 முதல் 125 பேர் வரை வந்து பெற்றுச் செல்கின்றனர். பள்ளிக்கூட பாட நேரம் நிறைவுற்ற பின்னர் கஞ்சி வினியோகிக்கப்படுவதால், ஊற்றுக்கஞ்சியைப் பெற்றிட மாணவர்கள் அதிகளவில் வருவது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டு ரமழானில், பெரும்பாலும் தினமும் கறிகஞ்சி தயாரிக்கப்படுகிறது. அவ்வப்போது வெண்கஞ்சியும் தயாரிக்கப்படுகிறது.
நாளொன்றுக்கு கறி கஞ்சிக்கு ரூபாய் 14,500 தொகையும், காய்கறி கஞ்சிக்கு ரூபாய் 13,500 தொகையும், கோழிக்கறி கஞ்சிக்கு ரூபாய் 12,000 தொகையும், வெண்கஞ்சிக்கு ரூபாய் 9,000 தொகையும் உத்தேசமாக செலவிடப்படுகிறது. அன்றைய தினத்தின் ஒருநாள் ரமழான் சிறப்பு ஏற்பாடுகளுக்கான அனைத்து செலவினங்களும் இதில் உள்ளடக்கம்.
தினமும் நடத்தப்படும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் சுமார் 100 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், வடை, கஞ்சி, அவ்வப்போது கடற்பாசி மற்றும் குளிர்பானமும் பரிமாறப்படுகிறது.
இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர் வீண் பேச்சுக்களைத் தவிர்த்திடும் நோக்குடன் தினமும் சுமார் 10 நிமிடங்கள் துஆ - பிரார்த்தனை மஜ்லிஸ் நடைபெறுகிறது. ஹாஃபிழ் எஸ்.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா இந்த துஆ மஜ்லிஸை நடத்தி வருகிறார்.
07.08.2012 அன்று மாலையில் இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவுசெய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
இப்பள்ளி குறித்த வரலாற்று விபரங்களை அறிந்திட, இங்கே சொடுக்குக! |