காயல்பட்டினம் - திருச்செந்தூர் சாலையில், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியையடுத்து - வீரபாண்டியன்பட்டினம் பேரூராட்சி எல்லைக்குள் அமைந்துள்ளது காட்டு மகுதூம் பள்ளி. இங்கு மஹான் ஷஹீத் முத்து மகுதூம் வலிய்யுல்லாஹ் அவர்களின் அடக்கஸ்தலம் (தர்ஹா) அமைந்துள்ளது.
அக்காலத்தில் காட்டுப் பகுதியில் அமைந்திருந்ததால், மஹான் அவர்களின் பெயராலேயே காட்டு மகுதூம் பள்ளி என்றழைக்கப்படுகிறது. தர்ஹாவையொட்டி மஸ்ஜிதுன் நூர் என்ற பள்ளிவாசலும் அமைந்துள்ளது.
சில வருடங்களுக்கு முன் பிரச்சினைக்குட்பட்டிருந்த இந்நிர்வாகம், பின்னர் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் நேரடி பொறுப்பில் எடுக்கப்பட்டு, நெல்லை மண்டல வக்ஃப் கண்காணிப்பாளரை நிர்வாக அதிகாரியாகவும்,
ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான்,
ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி,
ஹாஜி சொளுக்கு முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி,
ஹாஜி பிரபு சுல்தான்,
ஹாஜி கே.எஸ்.எச்.மஹ்மூத் நெய்னா
ஆகியோரை ஆலோசனைக் குழுவினர்களாகவும் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியின் இமாம் மற்றும் பிலாலாக - நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த மவ்லவீ அஹ்மத் பஷீர் ஸிராஜீ பணியாற்றி வருகிறார். நடப்பாண்டின் ரமழான் தராவீஹ் - சிறப்புத் தொழுகையையும் அவரே வழிநடத்தி வருகிறார்.
இப்பள்ளியில், ஐவேளை தொழுகையுடன், அவ்வப்போது இதர நற்கிரியைகளும் செய்யப்பட்டு வருகிறது. ரமழான் மாதங்களில் இங்கு இஃப்தார் - நோன்பு துறப்பிற்காக இங்கேயே நோன்புக் கஞ்சி தயாரிக்கப்படுகிறது. மாலையில் வினியோகிக்கப்படும் ஊற்றுக் கஞ்சியை, இப்பகுதியில் வணிக நிறுவனங்கள் வைத்திருப்போரும், தோட்டங்களைப் பராமரிப்போரும், வழிப்போக்கர்களும், தர்ஹா ஜியாரத்திற்கு வரும் பொதுமக்களும் பெற்றுச் செல்கின்றனர்.
இஃப்தார் - நோன்பு துறுப்பு நிகழ்ச்சியின்போது சில நேரங்களில் ஓரிருவர் மட்டும் இருப்பர். சில நேரங்களில், ரெயில் பயணத்திற்காக திருச்செந்தூர் செல்வோர், ஜியாரத்திற்கு வருவோர் என சுமார் 50 பேர் வரையிலும் வந்து கலந்துகொள்வதுமுண்டு. அவர்களுக்கு, கஞ்சி, பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், அவ்வப்போது வடை உள்ளிட்ட பதார்த்தங்களும் பரிமாறப்படுகிறது.
ஆண்டுதோறும் ரமழான் மாதத்தின் ஒரு நாளில், இந்நிர்வாகத்தின் சார்பில் - காயல்பட்டினம் நகரின் அனைத்து ஜமாஅத்துகளைச் சேர்ந்த பிரமுகர்கள் - பொதுமக்கள் அழைக்கப்பட்டு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் நடப்பாண்டில், 10.08.2012 அன்று (நேற்று முன்தினம்) இஃப்தார் - நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
ரமழான் கால சிறப்பேற்பாடுகளை, தர்ஹா நிர்வாகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹாஜி கே.எஸ்.எச்.மஹ்மூத் நெய்னா (H & H மார்பிள்ஸ்) பொறுப்பேற்று செய்து வருகிறார்.
இப்பள்ளியில் 11.08.2012 அன்று (நேற்று) நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சி:-
இப்பள்ளியின் கடந்தாண்டு இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காட்டு மகுதூம் பள்ளி (தர்ஹா), மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் ஆகியன குறித்த வரலாற்று விபரங்களைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 19:42/12.08.2012] |