மலபார் காயல் நல மன்றம் (MKWA) சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் காயலர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றுள்ளனர். கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் செய்யது ஐதுரூஸ் (SEENA) வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
மக்கள் வெள்ளத்தில் மக்வா:
எல்லாம்வல்ல ஏக இறைவன் திருவருளால், எமது மலபார் காயல் நல மன்றத்தின் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி, 05.08.2012 ஞாயிற்றுக்கிழமை மாலையில், கேரள மாநிலம் - கோழிக்கோடு - கே.எம்.ஏ. அரங்கில் நடைபெற்றது.
கோழிக்கோடு மற்றும் மலபார் வட்டாரத்தில்லுள்ள மஞ்சேரி, கொடுவள்ளி, படகர, தலிஷேரி, கண்ணனூர், பையனூர், இருட்டி போன்ற - கோழிக்கோடு நகர சுற்றுவட்டாரத்தின் பல்வேறு இடங்களிலிருந்து வந்து அன்று மாலை 05.45 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் அனைவரும் குடும்பத்துடன் சங்கமித்தனர். கூட்டத்தைக் கண்ட மகிழ்ச்சியில் சிலர் "மக்கள் வெள்ளத்தில் மக்வா" என்றும் கூறினார். மேலும் அல்லாஹ்வின் உதவியால் மலபார்வாழ் அனைத்து காயலர்களையும் ஒரே இடத்தில ஒன்று கூட்டி தங்கள் நண்பர்களையும், உற்றார் - உறவினர்களையும் பார்த்து மகிழவைத்த மக்வாவுக்கு நன்றியும் பாராட்டும் கூறி மகிழ்தனர்.
துவக்க நிகழ்வுகள்:
துவக்கமாக அரங்க நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவர் ஜனாப் மஸ்ஊத் தலைமை தாங்கினார். மன்றத்தின் துணைத் தலைவர் ஜனாப் ரஃபீக், துணைச் செயலாளர் ஜனாப் முஹ்யித்தீன் அப்துல் காதர், செயலாளர் ஜனாப் ஹைதுரூஸ் ஆதில் அவர்களின் தந்தை ஜனாப் முஹம்மது அப்துல் காதர் என்ற சாளப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எஸ்.எம்.பி.முஹம்மத் முஹ்யித்தீன் - அவருக்கே உண்டான இனிமையான குரலில் இறைமறையை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
வரவேற்புரை:
அடுத்து, மன்றத்தின் துணை செயலாளர் ஜனாப் முஹ்யித்தீன் அப்துல் காதர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். MKWAவின் இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் இத்தனை பேர் கலந்துகொண்டுள்ளதைப் பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்த அவர், இதுபோன்று MKWAவின் அனைத்து நிகழ்சிகளிலும் தவறாமல் பங்குபெற்று, மன்றத்தின் நகர்நலப் பணிகள் சிறப்பாக நடப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
மேலும் மன்றத்தின் வரவு - செலவு பற்றியும், பல்வேறு தேவைகளுக்காக பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள காயலர்களிடமிருந்து உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பற்றியும், அவை முறையாக பரிசீலிக்கப்படும் விதம் பற்றியும் விரிவாக அவர் தனதுரையில் எடுத்துரைத்தார்.
மேலும் நடப்பு நிர்வாகத்தின் காலவரையறை நிறைவுபெற 6 மாதங்களே உள்ளதாகத் தெரிவித்த அவர், அமைப்புக்கு புதிதாக 15 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்த்தேடுக்க அனைவரும் ஆயத்தமாக வேண்டும் என்று கூறியதோடு, நகர்நலனுக்காக மன்றப் பணிகளைப் பொறுப்பேற்று செய்திட அனைவரும் ஆர்வப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மன்றத்தின் செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் உம்ரா சென்றுள்ளதாகவும், அவருடைய உம்ரா இறைவனிடம் கபூலாக்கபட்ட அமலாக அமைய நாம் அனைவரும் அவருக்காக துஆ செய்ய வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிறப்புரை:
பின்னர், கூட்டத் தலைவரும் - மன்றத் தலைவருமான ஜனாப் மஸ்ஊத் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சி காயலர்களின் ஒற்றுமையைப் பறை சாற்றும் ஒரு நிகழ்ச்சியாக அமைந்திருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த அவர், ரமழானில் முக்கிய தினங்களாகக் கருதப்படும் பத்ருப்போர் நடைபெற்ற தினம் மற்றும் லைலத்துல் கத்ர் ஆகியவற்றின் வரலாற்றுச் சிறப்புகளை சுருக்கமாக எடுத்துக் கூறினார்.
மன்றத்தின் செயற்பாடுகள் அனைவரின் ஒத்துழைப்போடும் சிறப்புற நடைபெற்று வருவதாகத் தெரிவித்த அவர், நகர்நலப் பணிகள் தொய்வின்றி நடைபெற மன்றத்திற்கென சொந்த அலுவலகக் கட்டிடம் அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்ற அடிப்படையில், அதற்கான தேடுதல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், இத்திட்டத்திற்கு உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துஐழப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
உம்றா கிரியைகளை நிறைவேற்ற புனித மக்கா நகருக்குச் சென்றுள்ள மன்றச் செயலாளர் ஹைதுரூஸ் ஆதில், அங்கிருந்தபோதிலும் நம் மன்றத்தின் நினைவால் கைபேசியில் தன்னைத் தொடர்புகொண்டு, கூட்ட ஏற்பாடுகள் - மக்களின் ஆர்வம் குறித்து விரிவாக விசாரித்தறிந்ததாகவும், அனைவருக்கும் ரமழான் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும், தனது உம்றா கிரியைகள் இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட அனைவரும் துஆ செய்யுமாறும் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார்.
இஃப்தார் - நோன்பு துறப்பு:
கூட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து, அரங்கின் மேல் தளத்தில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிக்கு அனைவரும் சென்றனர். அங்கு காயல் கஞ்சி, சாலாவடை, குளிர்பானங்கள், பழ வகைகள் என பலவிதமான உணவுப் பதார்த்தங்கள் இந்நிகழ்ச்சியின் உணவு ஏற்பாட்டுக் குழுவினரால் விமரிசையாகவம், சுவைபடவும் ஆயத்தம் செய்யப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
மஃரிப் தொழுகை:
இஃப்தார் நிறைவுக்குப் பின் மஃரிப் தொழுகை அங்கேயே கூட்டாக (ஜமாஅத்தாக) நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூட்டத்தின் இரண்டாம் அமர்வு அரங்கின் கீழ் தளத்தில் நடைபெற்றது. துவக்கமாக அனைவருக்கும் சுவையான தேனீர் வழங்கப்பட்டது.
அரங்கத்தை அதிர வைத்த குட்டீஸ்:
மைக் முன் நின்று கொண்டு அரங்கமே அதிரும் அளவுக்கு உரை நிகழ்த்தியும், இறைமறையை தஜ்வீத் முறைப்படி ஓதியும் அசத்திய குழந்தைகளை கூட்டத்திற்கு வந்த அனைவரும் பாராட்டி, அவர்களுக்காக துஆ செய்தனர்.
உரை நிகழ்த்திய குழந்தைகளின் பெயர்:
1. மன்றத்தின் துணைத் தலைவர் முஹம்மத் ரஃபீக் KRS அவர்களுடைய மகள் ஜஹரா
2. மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர் சேட் மஹ்மூது அவர்களுடைய மகன் முஹம்மது இபுராஹீம்
இறைமறையை தஜ்வீத் முறைப்படி ஓதிய குழந்தையின் பெயர்:
1. மன்றத்தின் செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் அவர்களுடைய மகன் அப்துல் ரகீப்
வாழ்த்துரை:
பின்னர், மன்றப் பொருளாளர் ஜனாப் உதுமான் அப்துர் ராஜிக் அவர்கள் உரையாற்றினார். “நாம் நம் வீடு என்று இல்லாமல் நம் ஊர் மக்களின் நலனுக்காகவும் நம் நகரின் நலனுக்காகவும் செயல்படுவது அவசியம் என அவர் தனதுரையில் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர் ஜனாப் சிராஜுதீன் அவர்கள் உரையாற்றினார். “அன்று வளர் பிறையாக இருந்த இந்த மாமன்றம் இன்று பூர்ண சந்திரனாக மாறி இருப்பதை பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்த அவர், மன்றத்தின் மூன்றாண்டு கால சாதனையை பட்டியலிட்டு விளக்கிப் பேசினார்.
அவரைத் தொடர்ந்து மன்றத்தின் துணைத் தலைவர் முஹம்மத் ரஃபீக் KRS உரையாற்றினார். மன்றத்தால் இதுவரை நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளிலேயே இன்றுதான் முதன்முதலாக அரங்கு நிறைந்த இவ்வளவு பெரிய மக்கள் திரளைக் காண்பதாகத் தனதுரையில் வியப்பு தெரிவித்த அவர், இப்படியொரு நிகழ்ச்சியை நடத்தி, அனைவரையும் மட்டில்லா மகிழ்ச்சியடையச் செய்த மக்வாவை வெகுவாகப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.
நன்கொடை:
இந்த கூட்டத்திற்கு வந்த ஆண்கள் மற்றும் பெண்களுமாக சேர்ந்து மக்வாவிற்கு நன்கொடையாக மொத்தம் 30,000 ரூபாய் வரை வாரி வழங்கினர் அல்ஹம்துலில்லாஹ்!
நன்றியுரை:
நிறைவாக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர் சேட் மஹ்மூது அவர்களின் நன்றியுரைக்கு பின் - கஃப்ஃபாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
விருந்துதோம்பல்:
பின்னர், இரவு உணவுக்காக அனைவரும் மீண்டும் மேல் தளத்திற்கு அழைக்கப்பட்டனர். அங்கு, இடியாப்பம், கேரளா நைஸ் பத்திரி, காயலருக்கே உண்டான பாணியில் களறிக்கறி என சுவையான உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
அனைத்து நிகழ்வுகளிலும், ஆண்கள் - பெண்கள் - குழந்தைகள் என மொத்தம் சுமார் 300 பேர் வரை ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர் உதுமான் லிம்ரா தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
இந்த இஃப்தார் நிகழ்வுகளின் அனைத்து படங்களையும் தொடர்காட்சியாகப் பார்வையிட, மன்றத்தால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள
https://picasaweb.google.com/107093273045987051953/MKWA05082012?authuser=0&feat=directlink என்ற இணைப்பில் சொடுக்குக!
இவ்வாறு மலபார் காயல் நல மன்றம் சார்பில், அதன் செய்தித் தொடர்பாளர் எஸ்.இ.செய்யித் ஐதுரூஸ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
[செய்தி திருத்தப்பட்டது @ 20:16/11.08.2012] |