காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளியில், ஜும்ஆ தொழ வரும் சிறுவர்களை அமைதிப்படுத்தி, அவர்களை சரியான இடங்களில் அமரச் செய்திட சிறப்புக் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாரந்தோறும் ஜும்ஆ தொழுகையின்போது சிறுவர்களின் அளவுக்கதிகமான பேச்சுக் குரல்கள், குத்பா உரையாற்றும் கத்தீபுக்கு பெரும் இடைஞ்சலைத் தந்து வந்தது. அச்சிறுவர்களை அமைதி காக்குமாறு பலமுறை ஒலிவாங்கியில் கத்தீப் அவர்களே வேண்டுகோள் விடுத்த நிகழ்வுகளும் உண்டு.
குறிப்பாக, ஜும்ஆ தொழுகை நடைபெறும் சிறிய - பெரிய குத்பா பள்ளிகளின் மேல் தளத்தில் அரட்டை அடித்தல், ஓடிப்பிடித்து விளையாடுதல் என அறியாச் சிறுவர்களின் குறும்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், அக்கறையுடைய ஒரு சிலர் அச்சிறுவர்களைக் கண்டித்தபோது, அவ்வாறு கண்டித்த பெரியவர்களிடம் அச்சிறுவர்களின் பெற்றோரே குரலை உயர்த்தி வாக்குவாதம் செய்வதும் வாரந்தோறும் காணக்கிடைத்த வழமையான நிகழ்வாகிப் போனது.
இந்நிலையில், நமக்கேன் வம்பு என்ற எண்ணத்தில் ஆர்வப்பட்ட சிலரும் ஒதுங்கியதால் சிறுவர்களின் குறும்புகள் இன்னும் அதிகரித்தது. இதனைக் கருத்திற்கொண்டு, சிறிய - பெரிய குத்பா பள்ளிகளின் நிர்வாகத்தின் சார்பில் தன்னார்வக் குழுவினர், 20.07.2012 வெள்ளிக்கிழமை முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு, கழுத்தில் தொங்க விடும் வகையிலான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதனை அணிந்த நிலையில் அவர்கள் மேற்கொள்ளும் ஒழுங்குப் பணிகளுக்கு மறுபேச்சின்றி சிறுவர்கள் முழுமையாகக் கட்டுப்பட்டு வருவதால், தற்காலங்களில் ஜும்ஆ தொழுகையின்போது ஓரளவுக்கு அமைதியைக் காண முடிகிறது.
குறிப்பாக, எப்போதும் ஓட்டமும், ஆட்டமுமாகக் காணப்படும் - ஜும்ஆ பள்ளியின் மேல் தளத்தில் இந்த அமைதி காணப்படுவதால், அடையாள அட்டை அணிந்துள்ள இச்சிறப்புக் குழுவினரின் பணி வாரந்தோறும் இன்றியமையாததாகிவிட்டது. |