காயல்பட்டினம் முஸ்லிம் மகளிர் உதவி சங்கம் மற்றும் காயல்பட்டினம் நகர அரிமா சங்கம் இணைந்து நடத்தும் - ஏழைகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, இம்மாதம் 15ஆம் தேதி புதன்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில், ஏழை முஸ்லிம் பெண்களுக்கு சேலை, சட்டை துணி, அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படவுள்ளது. இதற்கான வினியோக அடையாள அட்டை, காயல்பட்டினத்திலுள்ள பெண்கள் தைக்காக்கள் மூலமாக அந்தந்தப் பகுதிகளிலுள்ள ஏழைப் பெண்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், அரிமா சங்க மாவட்ட துணை ஆளுநர் சிவகாமி எஸ்.ஆறுமுகம், அதன் மண்டல தலைவர் தர்மன் டிரோஸ், அதன் வட்டாரத் தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஆகியோர் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, முஸ்லிம் மகளிர் உதவி சங்கத்தின் காயல்பட்டினம் நகர அமைப்பாளர் ஹாஜ்ஜா ஏ.வஹீதா, காயல்பட்டினம் நகர அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா ஆகியோர் செய்து வருகின்றனர். |