காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிர்வாக அதிகாரி முனைவர் ஹம்ஸா முகைதீன் - சென்றாண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி காயாமொழி அருகே நடந்த விபத்து ஒன்றில் காலமானார். அவர் மறைந்து ஓராண்டு பூர்த்தியானதை முன்னிட்டு அக்கல்லூரியில் பிரார்த்தனை நடந்தது. அது குறித்து அக்கல்லூரி சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
எம் கல்லூரியில் பணியாற்றி எமக்கெல்லாம் சிறந்த ஆசானாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்து, மாணவ கண்மணிகளுக்கு கடமையினை கள்ளம்கபடமின்றி எடுத்தோதி, நல்வழியில் நடத்திச் சென்று அலுவலக பணியில் அன்புபாராட்டி அயராது உழைத்து அனைவரின் உள்ளத்திலும் அழியா இடம்பிடித்த பெருமைக்குரிய கல்வியாளரும், கடமைவீரருமான டாக்டர் ஆ. கம்சா முகைதீன், M.A., M.Phil., Ph.D. அவர்கள் வபாத்தான முதலாமாண்டு நினைவு (ரமலான் 17) பிறையை முன்னிட்டு 06.08.2012 அன்று திங்கட்கிழமை காலை 10.30 மணி அளவில் எம் கல்லூரி பிராத்தனை கூடத்தில் வைத்து கத்முல் குர்ஆன் ஒதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
அப்பிராத்தனை கூட்டத்தில் கல்லூரியின் நிறுவனரும் தலைவருமான அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் அவர்களும், அவர்களின் துணைவியார் ஞானி வஜீஹா பேகம் மற்றும் வாவு SAR கல்வி அறக்கட்டளை உறுப்பினர்களும், பொருளியல் துறை பேராசிரியைகள் திருமதி. சூரத் ஷீபா, திருமதி. நூர் அஸ்மா, நூலகதுறைப் பேராசிரியை திருமதி. மும்தாஜ் பேகம் மற்றும் மாணவியர் கலந்து கொண்டனர்.
இப்பிராத்தனை கூட்டத்தினை அரபுத் துறைத் தலைவி மற்றும் பேராசிரியை எஸ்.ஏ.கே.முத்து மொகுதூம் பாத்திமா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |