காயல்பட்டினத்திற்கு - மேல ஆத்தூரில் அமைந்துள்ள நீர்தேக்கத்தில் இருந்து குடிநீர் தினசரி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பராமரிக்கும் இந்த நீர்தேக்கத்திற்கு - பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
சாதாரண காலங்களில் தினசரி 20 லட்சம் லிட்டர் - காயல்பட்டினத்திற்கு வழங்கப்படுவது உண்டு. தற்போது - தென் மேற்கு பருவ மழை பெரும் அளவில் பெய்யாததால் - பாபநாசம் அணையில் உள்ள தண்ணீரின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. 143 அடி வரை நீரினை தேக்கும் திறன்கொண்ட இந்த அணையில் - தற்போது 33.15 அடிக்கு மட்டுமே நீர் உள்ளது. இதனால் - காயல்பட்டினத்திற்கு வழங்கப்படும் தண்ணீர் அளவு தினசரி 15 லட்ச லிட்டர் என குறைக்கப்பட்டது. மழை பெய்யாத சூழல் தொடர்ந்தால் - இந்த அளவு, மேலும் குறைக்கப்படும் என்று அண்மையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய - துணை பொறியாளர் பாலசுப்ரமணியம், காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு தெரிவித்திருந்தார்.
இன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம் உரையாடிய துணை பொறியாளர் - காயல்பட்டினத்திற்கு வழங்கப்படும் தண்ணீர் மேலும் குறைக்கப்பட்டு, இன்று முதல் 11 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் வழங்கப்படும் என தெரிவித்தார். இந்த நிலை அடுத்த 10 நாட்களுக்கு தொடரும் என்றும், மழை பெய்யாவிட்டால் - அதன் பிறகு மேல ஆத்தூரில் இருந்து தண்ணீர் வழங்குவது முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
நிலைமையை சமாளிக்க நிலத்தடி நீர் மூலம் - குடிநீர் வழங்க பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. குரும்பூர் அருகே ஓர் இடத்தில இதற்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த இடத்தில் எடுக்கப்பட்ட தண்ணீரை பரிசோதித்ததில் - க்ளோரைட் அளவு சற்று கூடுதலாக இருந்ததாக தெரிகிறது. இது குறித்து கருத்து கூறிய குடிநீர் வடிகால் வாரிய துணை பொறியாளர், பல நாட்களாக அந்த நிலத்தில் நீர் எடுக்காததால் க்ளோரைட் அளவு கூடியிருக்கலாம் என்றும், சில மணி நேரம் நீரினை வெளியேற்றிவிட்டு மீண்டும் பயன்படுத்தினால் - க்ளோரைட் அளவு குறைந்து காணப்படும் என்றும் தெரிவித்தார். இந்த இடத்தில இருந்து இரு பம்புகள் மூலம் தினசரி 5 லட்சம் லிட்டர் வரை நீர் எடுக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
இதற்கிடையில் - இன்று பாபநாசம் அணையில் 1 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணைக்கான நீர்வரத்து 201 cusecs அளவில் உள்ளது. (நேற்று நீர்வரத்து அளவு 226 cusecs அளவில் இருந்தது. ஆகஸ்ட் 11 அன்று இது 166 cusecs அளவில் இருந்தது.) அணையில் இருந்து நீர் வெளியேற்றம் - கடந்த சில நாட்களாக 205 cusecs அளவில், பராமரிக்கப்பட்டு வருகிறது.
தென் மேற்கு பருவ மழையின் இரண்டாம் பாதியில் - மழை தீவிரம் அடைந்தால் - குடிநீர் பிரச்சனை ஓர் அளவு மேம்படும் என தெரிகிறது. |