ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 66 வது செயற்குழு கூட்டம் சென்ற ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜித்தா ஷரஃபியாவிலுள்ள ஆர்யாஸ் உணவகத்தில் நடந்தேறியது. சகோ.ஏ.எம்.அப்துல் மஜீத் தலைமை ஏற்க, சகோ.எம்.அய்.அப்துல் பாசித் கிராஅத் ஓத, சகோ.எம்.அய்.அரபி ஷுஅய்ப் அனைவரையும் வரவேற்க, இரண்டு அமர்வாக நடைபெற்ற செயற்குழுவின் முதல் அமர்வு மாலை 06:30 மணிக்கு இனிதே ஆரம்பமானது.
அறிக்கை:
சென்ற செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் கலந்தாலோசிக்கப்பட்ட செய்திகளையும், அதன் நிமித்தம் நடந்தேறிய பணிகளையும் அறிக்கையாக தந்தார் மன்றச்செயலர் சகோ.சட்னி எஸ்.ஏ.செய்யிது மீரான்.
செயல்பாடுகள்:
நம் மன்றம் துவங்கி ஆண்டுகள் 10 ஆகிறதென்றும், இந்தக் காலங்களில் நம் மன்றம் ஆற்றிய சேவைகள் அளப்பரியது என்றும், நகரில் நம் மன்றம் நடத்திய பிரத்தியேக முகாம்கள் மற்றும் வெளியீடுகள் ஆழிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும், நம் மன்றத்தின் தொய்வில்லா நலப்பணிகள் மூலம்நம் நகர் பயனாளிகள் நமக்காக செய்யும் பிராத்தனைகள் பல கோடி நன்மைகளை நமக்குபெற்றுத்தருமென்றும் கூறினார் மன்றத்தலைவர் சகோ.குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன்.
மேலும், நம் மன்றத்தின் அனைத்து பணிகளுக்கும் முக்கிய காரணியாக விளங்கும் சந்தாவின் தேவையை அழுத்தமாக பதித்த அவர், நமக்கு அறிந்த, அய்க்கியமான அன்பர்களிடம் நம்மன்றப்பணிகளை எடுத்துக்கூறி அவர்களிடமிருந்து நன்கொடைகளை பெற்றளித்தால் இன்னும் பல சேவைகளாற்ற உதவியாக இருக்குமென்றும் கூறினார்.
மேலும், நாம் இந்த அமர்வில் உயர் கல்விக்கான உரிய பங்கினை அளிக்க உள்ளோம் என்றும், அதற்கான தொகையை ஒதுக்க நம் மன்றம் ஆயத்தமாக உள்ளதென்றும் தெரிவித்த அவர், அதுபோல், வழமையான மருத்தவ மனுக்களும் அதன் நிலைகள் அறிந்து அதற்குரிய உதவிகள் வழங்கப்படுமென்றும், கூட்டு மருத்துவ உதவிகள் மிகுந்த பயனளிக்கிறதுஎன்றும், எந்த கூட்டுமுயற்ச்சிகளும், கலந்தாலோசனைகளும் நல்ல பலனைத்தருமென்றும் கூறினார். நம் மன்றத்தின் நற்பணிகள் மென்மேலும் சிறந்தோங்கவும், நாம் செய்யும் அனைத்து பணிகளும் வல்ல அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படவும் இந்த புனித ரமலான் மாதத்தில் பிரார்திக்குமாறு அனைவரையும் வேண்டிக்கொண்டார்.
இஃப்தார் நெருங்க சில மணித்துளிகள் இருக்கமுதல் அமர்வு முடிவுற்றது. அந்நேரத்தை இறைபிரார்த்தனையில் ஈடுபடுத்தினர் நம்சகோதரர்கள். அல்லாஹ்வை புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்திய வண்ணம் அருசுவை பேரீத்தம்பழத்துடன் நோன்பு துறக்கப்பட்டது. சுவைமாறா காயல் கறிகஞ்சியுடன் பலதர பழக்குழுக்களும் சங்கமமாக, மசாலா கடலை, சம்சா, பக்கோடா மணமணக்க, எலுமிச்சை குளிர்பானம் ஜில்லென்று அருந்திட, காயலின் இஞ்சி தேநீர் சூடாக பருகிட சிறப்பாக நிறைவேறியது இஃப்தார் நிகழ்வு.
மக்ரிப் தொழுகை முடிந்த பிறகு இரண்டாம் அமர்வுகூடியது.
நிதி நிலை:
கல்வி மற்றும் மருத்துவத்திற்கான நிதி ஒதுக்கம், அன்றைய சந்தாக்களின் வரவு போக மீதி நிதியின் இருப்பு மற்றும் விடுப்பு விபரங்களை துல்லியமாக பட்டியலிட்டார் பொருளர் சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம்.
உதவிகள்:
உதவி வேண்டி வந்த மனுக்கள் அனைத்தும் வாசிக்கப்பட்டு சகோதரர்களின் விவாதம் கலந்த கருத்துப்பகிர்வுகள் அறியப்பட்டு தகுந்த பரிசீலனைக்குப்பின் ஏகமனதாக பெரும்பாலான கல்வி மற்றும் மருத்துவ மனுக்களுக்கு உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பொறியியல், தொழில்நுட்பம், கணிணி போன்ற உயர்கல்விக்கான உதவிகள்பெற பதிமூன்று நபரும்; இருதய சிகிச்சை, நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை மற்றும் எல்.கே.பள்ளியில் பயிலும் மாணவன் தவறி விழுந்ததில் உடம்பின் ஒரு பகுதி முழுவதும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி அதற்கான சிகிச்சை என மருத்துவத்திற்கான உதவிகள்பெற மூன்று நபரும், மொத்தம் 16 பயணாளிகள் அறிவிக்கப்பட்டனர். அதற்கான உதவித்தொகை தாமதமின்றி பயனாளிகளை சென்றடையவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நன்கு படித்து வெற்றி பெறவும், உடல் சுகமற்றோர் பரிபூரண நலம் பெறவும் யாவரும் பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொள்ளப்பட்டது.
மேலும் ரியாதிலிருந்து மாற்றலாகி ஜித்தா வந்திருக்கும் ஜித்தா காயல் நற்பணிமன்றத்தின் முன்னாள் நிர்வாகிகளுள் ஒருவரான சகோ.முஹம்மது லெப்பை செயற்குழுவில் கலந்து ரியாத் காயல் நற்பணிமன்றத்தின் செயல்பாடுகளை அறியத்தந்தார்.
தீர்மானங்கள்:
* இன்ஷாஅல்லாஹ் வரும் செப்டம்பர் திங்கள் 14 தேதியன்று மன்றத்தின் 28-வது பொதுக்குழு ஈகைத்திருநாள் சந்திப்பு நிகழ்வாக இம்பாலா உணவக கூட்டரங்கத்தில் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது.
* மன்ற உறுப்பினர்களுக்கும், நகர கண்மணிகளுக்கும், மன்றப்பணிகளுக்கு உதவிகள் புரியும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மற்றும் உலக முஸ்லீம் உம்மத்துக்கும் ஜித்தா காயல் நற்பணி மன்றம் புனித நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்களை மனமகிழ்வோடு தெரிவிக்கிறது.
* பயனாளிகளின் தேவைகள் செவ்வனே நிறைவேற, மன்றப்பணிகள் தொடர்ந்து நடந்தேற வல்லோனிடம் பிரார்த்திக்குமாறு அனைவரையும் இம்மன்றம் உரிமையோடு வேண்டிக்கொள்கிறது.
* சங்கை மிகுந்த ரமலான் காலங்களில் நாம் செய்த நற்காரியங்கள் அனைத்தும் வல்ல ரஹ்மானிடம் ஏற்றுக்கொள்ளப்பட இம்மன்றம் மனமுருகி பிரார்த்திக்கிறது.
நன்றி கூறல்:
சகோ.எம்.எம்.மூஸா ஸாஹிப் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க, சகோ.எம்.எ.சி.ஷாஹ்மீரான் ரியாஸ் பிரார்த்திக்க, துஆ கஃப்ஃபாராவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
சகோ.குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீனது அனுசரணையுடன் புரோட்டா, இடியாப்பம், களறிக்கறி, ஜவ்வரிசி, கடப்பாசியுடன் காயல்மண பசியாறு / இரவு உணவுஅருமையாக பரிமாறப்பட்டது. கூட்ட ஏற்பாடுகளை மன்ற சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
தகவல்:
ஜி.கா.ந.மன்றம் சார்பாக
அரபி ஷுஅய்ப், இணைச்செயலர்.
நிழற்படங்கள்:
சட்னி எஸ்.ஏ.முஹம்மது உமர்.
|