காயல்பட்டணம்.காம் காயல்பட்டினம் நகராட்சியின் 2000 - 2001 ஆம் நிதியாண்டு முதல் ஏப்ரல் 2009 - டிசம்பர் 2009 (கடைசியாக பரிசீலனை
செய்யப்பட்டுள்ள காலகட்டம்) வரையிலான வரவு செலவு கணக்கு மற்றும் தணிக்கை அறிக்கையை - தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் - பெற்றுள்ளது.
மொத்தம் சுமார் 1600 பக்கங்கள் கொண்ட இவ்வறிக்கைகள் - பல அரிய தகவல்களை வழங்குகின்றன. அவைகளில் உள்ள முக்கியமான
தகவல்களை - தொடராக காயல்பட்டணம்.காம் வெளியிட்டு வருகிறது. பாகம் ஆறாம் வரை காண இங்கு
அழுத்தவும்.
காலி நிலங்களை வியாபார நோக்கில் கையகப்படுத்தி - அதன் மதிப்பினை செயற்கையாக ஏற்றி, விற்பனை செய்யும் பழக்கும் நாடு முழுவதும் உள்ளது. இதனை கட்டுப்படுத்த பல சட்டங்கள் கடந்த காலங்களில் இயற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள ஒரு சட்டம் - காலி நிலத்தின் மீது, அவற்றின் மதிப்பின் (Capital Value) அடிப்படையில் (சுமார் 6 சதவீதம்), நில உரிமைதாரர் - வரி (Vacant Land Tax) கட்டவேண்டும் என்பது. இந்த சட்டம் 2009 இல் மாற்றப்பட்டு, மதிப்பிற்கு பதிலாக சதுர அடி அடிப்படையில் (உள்ளாட்சியின் நிலை, நிலம் இருக்கும் பகுதி) வரி விதிக்க கூறியது. அரையாண்டுக்கு ஒரு முறை விதிக்கப்படவேண்டிய இந்த வரி - காயல்பட்டினம் நகராட்சியில் பல ஆண்டுகளாக முறையாக வசூல் செய்யப்படுவதில்லை.
இது குறித்த - தணிக்கை தடை - பல ஆண்டுகளாக, காயல்பட்டினம் நகராட்சியின் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. 2009ம் ஆண்டைய தணிக்கை அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்படுவதாவது:
காலிமனை வரி விதிக்கப்படவில்லை/வசூலிக்கப்படவில்லை - நிதி இழப்பு ரூ 73,809 /- ஈடு செய்யப்பட வேண்டும்.
நகராட்சி எல்லையில் உள்ள காலிமனைகளுக்கு நகராட்சி சட்டம் 1920 பிரிவு 81 (3) ன்படியும் பேரூராட்சிகளுக்கு இயக்குனர் கடிதம் ந.க. எண். 14956 / 2006 / 05 நாள்: 27.09.2006 ன்படியும் காலிமனை வரி 1.10.1998 இரண்டாம் அரையாண்டு முதல் கட்டிட உரிமம் அனுமதி வழங்கும் காலம் வரை நிலுவையுடன் சேர்த்து மனைவரைமுறை அனுமதி கோரி விண்ணப்பித்த மனை உரிமைதாரர்களிடம் வசூலிக்கப்பட வேண்டும். தனிக்கையாண்டில் காலிமனை வரி ஒரு அறையாண்டிற்கு அல்லது ஓராண்டிற்கு மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே கீழ்க்கண்டவாறு நிலுவையாக உள்ள காலிமனை வரிகளை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அல்லது பொறுப்பான நபர்களிடம் ஈடு செய்யப்பட வேண்டும்.
[தொடரும்] |