இன்று (ஆகஸ்ட் 15) - நாடு முழுவதும், 66வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார். அதன் தொகுப்பு வருமாறு:
66-ஆவது சுதந்திர தின நன்னாளில் பன்னிரண்டாவது முறையாக இந்தக் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
65 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களை இந்திய மண்ணில் இருந்து விரட்டி சுதந்திரத்தைப் பெற பாரதம் முழுவதும் தன்னலமற்ற தியாகிகள் பலர்
தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈந்து அரும்பாடுபட்டனர். ஆங்கிலேய அடிமைத்தளையை தகர்த்தெறிய நடைபெற்ற விடுதலைப்
போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு மகத்தானது.
ஆங்கிலேயருக்கு எதிராக வீர முழக்கமிட்ட நெற்கட்டும் செவல் பூலித்தேவன்; தூக்கு மேடை ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மன்; தாயின் மணிக்கொடி
காக்க உயிர் துறந்த திருப்பூர் குமரன்; வீரத் தழும்புகளை விருதுகளாய் சுமந்த மருது சகோதரர்கள்; வீரமங்கை வேலுநாச்சியார்; மாவீரன்
வாஞ்சிநாதன்; விடுதலைப் போராளி தில்லையாடி வள்ளியம்மை; செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார்; தம் கவிதைகள் மூலம் விடுதலை
உணர்வினை ஊட்டிய மகாகவி பாரதி; நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வழிவந்த சுதந்திரப் போராட்டத் தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்; தீரர்
சத்தியமூர்த்தி; சுப்ரமண்ய சிவா; தீரன் சின்னமலை; மாவீரன் அழகு முத்துக்கோன்; பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார் என இந்திய
விடுதலைக்காக போராடிய எண்ணற்ற தியாக சீலர்களை போற்றி வணங்குகிறேன்.
“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றார் பேரறிஞர் அண்ணா. ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பதாக
இருக்க வேண்டும். அரசின் சட்டங்கள் மற்றும் திட்டங்கள் மக்கள் நலன் கருதியே அமைய வேண்டும். இந்தக் குறிக்கோளை எய்தும் வண்ணம்,
உங்கள் அன்புச் சகோதரியின் அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவது மட்டுமல்லாமல், விரைந்த வளர்ச்சி எய்தும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கு
இணையாக தமிழகத்தின் வளர்ச்சி இருத்தல் வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆகும். இந்த லட்சியத்தை எய்தும் வண்ணமும்; தமிழ்நாட்டின்
மொத்த வளர்ச்சி ஆண்டொன்றுக்கு 11 விழுக்காடு அல்லது அதற்கு மேலாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும்; அடுத்த 10 ஆண்டுகளில்
இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகின்ற மொத்த வளர்ச்சியைக் காட்டிலும் 20 விழுக்காடு கூடுதல் வளர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையிலும்
தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம், 2023 வகுக்கப்பட்டுள்ளது.
உங்கள் அன்புச் சகோதரியின் அரசு பதவியேற்று 15 மாதங்கள் முடிவடைந்துள்ளன. இந்த 15 மாதங்களில் பல்வேறு சாதனைகளை எனது
தலைமையிலான உங்கள் அரசு புரிந்துள்ளது.
வேளாண் துறையைப் பொறுத்தவரையில், 2010-2011 ஆம் ஆண்டில் 76 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்த உணவு தானிய உற்பத்தி, 2011-2012
ஆம் ஆண்டில் சாதனை அளவாக 106 லட்சம் மெட்ரிக் டன்கள் என உயர்ந்துள்ளது. காவேரியில் நமக்கு உரிய பங்கினை உரிய நேரத்தில் கர்நாடகம்
விடுவிக்காததால், குறுவை சாகுபடி பரப்பு இந்த ஆண்டு குறைந்துவிட்டது. எனினும், எனது தலைமையிலான அரசு டெல்டா விவசாயிகளுக்கு 12
மணி நேரம் மும்முனை மின்சாரத்தை வழங்கிய காரணத்தால், 1 லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பா பயிர்
சாகுபடி வழக்கமான பரப்பளவில் மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் தமிழகம் முன்னணி மாநிலமாக தொடர்ந்து திகழ வேண்டுமெனில் அதற்கு அடித்தளமாக அமைவது மனித வள மேம்பாடு தான். இந்த
மனித வள மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வில் எனது அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது.
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு, அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு ஊக்கத் தொகை வழங்குதல்; நான்கு சீருடைகள்,
காலணிகள், புத்தகப் பை, வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி, பூகோள வரைபடம், பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள்
ஆகியவை வழங்குதல்;
மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு மடிக்கணினி வழங்குதல்;
மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியருக்கு மிதிவண்டி வழங்குதல் ஆகியன சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
உயர் கல்வியைப் பொறுத்த வரையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை மற்றும் தஞ்சாவூர்
மாவட்டம் செங்கிப்பட்டி ஆகிய இடங்களில் புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 22 புதிய பல்கலைக்கழக
உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 100 கோடி
ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வை பொறுத்தவரையில், ஏழை, எளிய மக்கள் உயரிய சிகிச்சை பெற ஏதுவாக, ஒரு குடும்பத்திற்கு ஆண்டொன்றிற்கு
ஒரு லட்சம் ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை கிடைப்பதை உறுதி செய்யும் முதலமைச்சரின் விரிவான
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்; கிராமப்புற வளர் இளம் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டம்; தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின்
உடல் நலம் பேணிப் பாதுகாக்கும் வகையில் நோய் தடுப்புச் சேவையுடன் இணைந்து 12,000 ரூபாய் நிதி உதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி
ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம்; ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேர பிரசவ சேவை, சிறந்த மருத்துவ வசதிகள் ஆகியவை நோயற்ற
சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்கின்றன.
கல்வி மேம்பாடு மற்றும் மக்கள் நல்வாழ்வுடன் தொழில் வளர்ச்சி ஏற்பட்டால் தான் கல்வி கற்றோர் வேலைவாய்ப்பினை பெறுவதுடன்
தமிழகத்தின் பொருளாதாரம் மேம்படவும் வழிவகுக்கும் என்பதன் அடிப்படையில், 5,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9,530 நபர்களுக்கு நேரடி வேலை
வாய்ப்பையும்; 20,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பினையும் உருவாக்கும் வகையில், 5 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு
ஒப்பந்தங்கள் என் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளன. இன்னும் பல தொழில் நிறுவனங்களுடன் விரைவில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட
உள்ளன. இதே போன்று, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் வளர்ச்சிக்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், கடந்த 15 மாதங்களில் மட்டும் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் 1,70,000 பணியிடங்களை நிரப்ப
உத்தரவிடப்பட்டது. இதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 24,952 பணியிடங்களும்; வேலைவாய்ப்பகம் மூலம் 17,540
பணியிடங்களும்; 59,189 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும்; 1,432 கல்லூரி ஆசிரியர் பணியிடங்களும்; 13,376 இரண்டாம்
நிலை காவலர் பணியிடங்களும்; 205 உதவி ஆய்வாளர் பணியிடங்களும்; 2,874 மருத்துவப் பணியிடங்களும்; 16,793 சத்துணவு அமைப்பாளர்,
சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களும்; 11,803 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களும்; தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4,672
பணியிடங்களும்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 16,963 பணியிடங்களும் அடங்கும். இவற்றில் பெரும்பாலான பணியிடங்கள்
நிரப்பப்பட்டுவிட்டன. மீதமுள்ள பணியிடங்கள் ஒரு சில மாதங்களில் நிரப்பப்பட்டுவிடும்.
ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், வேளாண் வளர்ச்சிக்கும் இன்றியமையாததாக விளங்கும் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்கும் வண்ணம்
பல்வேறு முனைப்பான நடவடிக்கைகள் எனது அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு திட்டங்கள் விரைந்து முடிக்கப்பட்டு, மின் தட்டுப்பாடு
முழுவதும் நீங்கும் வகையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் ஏழை, எளிய, சாமானிய மக்களும் தங்களுக்கு உரிய பங்கைப் பெறும் வகையில், பல்வேறு
நடவடிக்கைகளை உங்கள் அன்புச் சகோதரியின் அரசு எடுத்து வருகிறது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்குதல்;
ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம்;
கருவறை முதல் கல்லறை வரை பயனளிக்கும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்;
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டம்;
என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதே போன்று, அரிசி பெறத் தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா மின் விசிறி, மிக்ஸி மற்றும்
கிரைண்டர் வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 2011-2012 ஆம் ஆண்டில் 25 லட்சம் மின் விசிறிகள், மிக்ஸி மற்றும்
கிரைண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 35 லட்சம் பயனாளிகளுக்கு இவை வழங்கப்படும்.
மேலும், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை எளிய கிராம மக்கள் பயன்பெறும் வண்ணம், கறவைப் பசுக்கள் மற்றும் ஆடுகள்
வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 17,000 பயனாளிகளுக்கு 17,000 கறவைப் பசுக்களும், 1 லட்சத்து 70 ஆயிரம்
பயனாளிகளுக்கு 6 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளாடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
கிராமப்புற ஏழை மக்களின் வீட்டு வசதியை மேம்படுத்தும் வகையில், முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள்
திட்டத்தின் கீழ், 2011-2012 ஆம் ஆண்டில்1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 300 சதுர அடி கொண்ட 60,000 வீடுகள் கட்ட நிதி
ஒதுக்கப்பட்டு, அந்தப் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. இந்த ஆண்டும், 60,000 வீடுகள் கட்டப்படும். இதே போன்று தானே புயலால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் தேவைப்படும் அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், தாய் திட்டத்தின்
கீழ், 2011-12 ஆம் ஆண்டில் 2020 கிராம ஊராட்சிகளில் உள்ள 25,335 குக்கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 680 கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டு அனைத்துப் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. நடப்பாண்டில் இத்திட்டப் பணிகளுக்கென 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
சுதந்திரத் திருநாளை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நம் உறவுகளாகிய இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்கள்
அனைவரும் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பிச் செல்வதற்கும், சிங்களர்களுக்கு இணையான உரிமைகளைப் பெறுவதற்கும் வழிவகை
ஏற்படுத்த இனிமேலாவது இலங்கை அரசை வலியுறுத்தி அவர்களின் துயரை நீக்க வேண்டும் என மத்திய அரசை இந்தத் தருணத்தில் நான்
வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த இனிய நாளில், சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தும் இந்த வேளையில், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான
ஓய்வூதியம் 5,000 ரூபாயிலிருந்து 7,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும்; அவர்களுக்கான மருத்துவப்படி 100 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக
உயர்த்தப்படும் என்பதையும்; அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாக
உயர்த்தப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திரம் என்பது ஒவ்வொருவருக்கும் வேண்டும். ஆனால் அந்தச் சுதந்திரம் வரம்பை மீறாமல் இருக்க வேண்டும். எல்லா விதத்திலும் கண்ணியம்
மற்றும் கட்டுப்பாட்டினை கடைபிடிக்க வேண்டும். அது தான் உண்மையான சுதந்திரம். இந்த உண்மையான சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்க
வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உங்கள் அன்புச் சகோதரியின் அரசு செயல்பட்டு வருகிறது. எனக்குச் சுதந்திரம் இருக்கிறது என்று
அடுத்தவரின் சுதந்திரத்தை, உரிமையை, வாழ்வாதாரத்தை பறிக்கும் விதத்திலோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எவரேனும்
செயல்பட்டால், அவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்
கொண்டு, “ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்” என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் பாடல் வரிகளை இந்தத் தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இந்த நன்னாளில் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கவும்; இந்திய திருநாட்டை வல்லரசாக்கவும்; அதில் தமிழ்நாட்டை வளம் மிக்க மாநிலமாக
ஆக்கவும் நான் தொடர்ந்து அயராது பாடுபடுவேன் என்பதைத் தெரிவித்து,
“உங்களுக்காக நான் என்பது மட்டுமல்ல; உங்களால் நான்” என்ற உணர்வோடு, நான் எனது கடமையை நிறைவேற்றிட தமிழக மக்களாகிய நீங்கள்
எல்லாம் எனக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு,
சுதந்திரக் காற்றை சுதந்திரமாகவும், பெருமையுடனும் சுவாசித்துக் கொண்டிருக்கும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் சுதந்திர தின
நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, விடை பெறுகிறேன்.
இவ்வாறு அவர் தனதுரையில் தெரிவித்தார்.
தகவல்:
தினமணி |