இந்தியாவின் 66ஆவது சுதந்திர தின விழா இன்று நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் நகராட்சியில் இன்று காலை 10.00 மணிக்கு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விழாவிற்குத் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் அஷோக் குமார் முன்னிலை வகித்தார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
துவக்கமாக, நகர்மன்றத் தலைவரும், விழா தலைவருமான ஐ.ஆபிதா ஷேக் நகராட்சி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றினார். அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நகர்மன்ற 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால், 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாப்தீன், 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், 04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா, 14ஆவது வார்டு உறுப்பினர் பாக்கிய ஷீலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் தமிழாசிரியர் மு.அப்துல் ரசாக் வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பின்வருமாறு முன்மொழிய, அனைவரும் அதனை வழிமொழிந்தனர்:-
இந்தியா எனது தாய்நாடு... இந்தியர் அனைவரும் என் உடன்பிறப்புக்கள்... எனது நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன்... இந்நாட்டின் பழம்பெருமை - பன்முக மரபுச் சிறப்புக்காக நான் பெருமிதமடைகிறேன்... இந்நாட்டின் பெருமைக்குத் தகுந்து விளங்கிட என்றும் பாடுபடுவேன்...
என்னுடைய பெற்றோர் - ஆசிரியர் - எனக்கு வயதில் மூத்தோர் அனைவரையும் மதித்து நடப்பேன்... எல்லோரிடமும் அன்பும், மரியாதையும் காட்டுவேன்...
என் நாட்டிற்கும், என் நாட்டு மக்களுக்கும் உழைத்திட முனைந்து நிற்பேன்... அவர்கள் நலமும், வளமும் பெறுவதில் நான் என்றும் மகிழ்ச்சி காண்பேன்...
நாட்டின் உரிமை வாழ்வையும், ஒருமைப்பாட்டையும் பேணிக்காத்து வலுப்படுத்திச் செயல்படுவேன் என நான் உளமார உறுதி கூறுகிறேன்...
ஒருபோதும் வன்முறையை நாடேன் என்றும், சமயம் - மொழி - வட்டாரம் முதலியவை காரணமாக எழும் வேறுபாடுகளுக்கும், பூசல்களுக்கும், ஏனைய அரசியல் - பொருளாதாரக் குறைபாடுகளுக்கும் அமைதி நெறியிலும், அரசியல் அமைப்பின் வழியிலும் நின்று தீர்வு காண்பேன் என்றும் நான் உறுதியளிக்கிறேன்...
காயல்பட்டினம் நகராட்சியை, ஊழலற்ற - லஞ்ச லாவண்யமற்ற நகராட்சியாக்கிட உறுதி பூணுகிறேன்... அனைத்து நகராட்சிகளுக்கும் முன்னுதாரணமான நகராட்சியாக இதனைத் திகழச் செய்திட ஒன்றிணைந்து உழைத்திடுவேன்...
ஒருங்கிணைந்த எம் உளத்தூய்மையான செயல்பாடுகளால், நம் நகராட்சியை நம் தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ள - சிறந்த நகராட்சிக்கான விருதைப் பெற்றிட தகுதியுள்ளதாக ஆக்கிட முழு முயற்சி செய்வேன்...
என இந்த இனிய சுதந்திர தின விழாவில், நான் உளமார உறுதி கூறுகிறேன்...
இவ்வாறு உறுதிமொழி வாசகம் அமைந்திருந்தது.
பின்னர், நகராட்சி ஆணையர் அஷோக் குமார் வாழ்த்துரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து, பின்வருமாறு தேசிய ஒருமைப்பாட்டு பாடல் பாடினர்:-
ஒன்றுபட்டு வாழுவோம் ஒருமைப்பாடு பேணுவோம்
நன்றியோடு தாயகத்தில் நன்மை சூழ நாடுவோம்
நன்மை சூழ நாடுவோம்...
பண்டுநமது பெருமையிந்த பாரினுக்குச் சாற்றுவோம்
பண்பினோடு எவரும் வாழ பாடமினிது ஊட்டுவோம்
பாடமினிது ஊட்டுவோம்...
நாடுநம் சமூகம் ஓங்க நாளுஞ்சேவை யாற்றுவோம்
கேடு செய்ய எண்ணுவோரின் கொட்டமதனை வீழ்த்துவோம்
கொட்டமதனை வீழ்த்துவோம்...
பிஞ்சுநம் சிறார்கள் நெஞ்சில் நஞ்சினை விதைத்திடும்
வஞ்சகக் குலத்தினோரின் வன்செயல் ஒடுக்குவோம்
வன்செயல் ஒடுக்குவோம்...
மாண்புசான்ற புனிதநமது முன்னவர்கள் பாங்கிலே
மாறிடாது நாம்நடந்து மேன்மைதன்னை எய்துவோம்
மேன்மைதன்னை எய்துவோம்...
சாதிசமய பேதங்கூறி சண்டைகள் விளைத்திடும்
கோதுநோக்கி னோர்கள்நாண சமரசத்தை நாட்டுவோம்
சமரசத்தை நாட்டுவோம்...
இவ்வாறு, தேசிய ஒருமைப்பாட்டுப் பாடல் அமைந்திருந்தது.
அடுத்து, நகராட்சி சுகாதார துணை ஆய்வாளர் ராதா கிருஷ்ணன் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், நகர்மன்ற 03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள், 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், நகராட்சி அலுவலர்கள் - பணியாளர்கள், 02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமாவின் கணவர் முத்து முஹம்மத், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மற்றும் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவ-மாணவியர், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மற்றும் நகராட்சி ஆணையர் அஷோக் குமார் ஆகியோர் இனிப்பு வழங்கினர்.
|