கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் உள்ளிட்ட தேவைகளுக்காக மாணவ-மாணவியருக்கு அரசு வங்கியொன்றில் வங்கிக்கணக்கு இருப்பது அவசியம் என்ற நிலையுள்ளது.
பள்ளிகளில் பாடம் நடைபெறுவதும், வங்கிகள் இயங்குவதும் ஒரே நேரத்தில் அமைவதால், மாணவ-மாணவியர் புதிதாக வங்கிக் கணக்கு திறப்பதற்காக தமது பள்ளிப்பாடங்களைத் தவிர்த்துவிட்டு, பலமுறை வங்கிகளுக்கு அலைவது வாடிக்கையாகிவிட்டது.
இதனால், மாணவ-மாணவியர் சந்திக்கும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் காயல்பட்டினம் நகர கிளை மேலாளர் வி.குணசேகரன் தனதார்வத்தில், மாணவ-மாணவியருக்கு அவரவர் பள்ளியிலேயே புதிதாக வங்கிக் கணக்கு திறக்கும் வகையில் முகாம் நடத்தி வருகிறார்.
துவக்கமாக காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில், 08.12.2011 வியாழக்கிழமையன்று முதல் முகாம் நடைபெற்றது.
இரண்டாவது முகாம், இன்று (07.08.2012) காலை 11.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியை மீனா சேகர் முகாமைத் துவக்கி வைத்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தூத்துக்குடி மண்டல வணிக மேலாளர் சுகன்யா மேற்பார்வையில் நடைபெற்ற இம்முகாமில், வங்கியின் காயல்பட்டினம் கிளை மேலாளர் வி.குணசேகரன், வங்கி ஊழியர் சுபா காயத்ரி ஆகியோர் பள்ளி மாணவியருக்கு புதிய வங்கிக் கணக்கு திறக்கும் பணிகளைச் செய்தனர். மாணிக்கம், ராஜ்குமார் ஆகியோர் துணைப் பணிகளைச் செய்தனர்.
இம்முகாமில், எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 100 மாணவியருக்கு புதிய வங்கிக் கணக்கு துவக்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பதிவு செய்ப்பட்டது. |