காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில், எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில், மார்க்கக் கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு பெருநாள் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி 05.08.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்கு, பள்ளிவாசல் கிழக்குப்பகுதியிலுள்ள வெளிப்புற வளாகத்தில் நடைபெற்றது.
காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை செயலாளர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், கே.எம்.டி. மருத்துவமனை மேலாளர் அப்துல் லத்தீஃப், காயல்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஆஷிக் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். வரவேற்புரையைத் தொடர்ந்து, கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி கேளரங்க கட்டிடக் குழு தலைவர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் அறிமுகவுரையாற்றினார்.
அடுத்து, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ “தர்மம் செய்வதன் மகத்துவம்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், மாணவ-மாணவியருக்கு பெருநாள் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பள்ளிவாசலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மார்க்கக் கல்வி வகுப்பில் பயின்று வரும் 55 மாணவ-மாணவியருக்கு பெருநாள் புத்தாடைகள் வழங்கப்பட்டது. அவற்றை, நிகழ்ச்சித் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ, சிறப்பு விருந்தினரான - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மற்றும் நகரப் பிரமுகர்கள் வழங்கினர். புத்தாடை வழங்கும் நிகழ்ச்சியை, கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி பொருளாளர் கோமான் மீரான் ஒருங்கிணைத்தார்.
பின்னர், நிகழ்ச்சித் தலைவர் - சிறப்பு விருந்தினர் - முன்னிலை வகித்தோர் அனைவருக்கும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பள்ளிவாசல் செயலாளர் “முத்துச்சுடர்” ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை நன்றி கூற, பள்ளி இமாம் ஹாஃபிழ் ரஹ்மத்துல்லாஹ் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
அதனைத் தொடர்ந்து, நோன்பு துறக்கும் நேரம் நெருங்கும் வரை - மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ தமிழில் பிரார்த்தனை செய்தார்.
பின்னர் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், கறி கஞ்சி, 3 வகை வடை, கேக், குளிர்பானம் ஆகிய உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது. மஃரிப் தொழுகை நிறைவுற்ற பின்னர் அனைவருக்கும் தேனீர் உபசரிப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், ஏ.லுக்மான், பி.எம்.எஸ்.சாரா உம்மாள், எம்.ஜஹாங்கீர், ஜெ.அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கியஷீலா, கே.ஜமால், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகிய - காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களும், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, கே.எம்.டி.சுலைமான், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ், மக்கீ நூஹுத்தம்பி, எழுத்தாளர் ஏ.எல்.எஸ். மாமா, கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் உள்ளிட்ட நகர பிரமுகர்களும், ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி தலைவர் கே.அப்துர்ரஹ்மான் தலைமையில், செயலாளர் “முத்துச்சுடர்” ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, பொருளாளர் கோமான் மீரான், ‘காவல்துறை‘ ஷேக், ‘மரக்கடை‘ அக்பர் பாதுஷா, ஆசிரியர் மீராஸாஹிப், எஸ்.எஸ்.செய்யித் அஹ்மத், ஹாஃபிழ் வி.டி.அப்துல் காதிர், ஜுவெல் ஜங்ஷன் கனீ மற்றும் மத்ரஸா மாணவர்கள் செய்திருந்தனர்.
படங்களில் உதவி:
தாஸ் ஸ்டூடியோ மற்றும்,
M.ஜஹாங்கீர். |