தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சிகள் மத்தியில் ஆக்க பூர்வ போட்டியினை உருவாக்க சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு - ஆண்டுதோறும் பரிசுகள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:
சென்னை மற்றும் சென்னை நகரைச் சுற்றி பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் வணிக அமைப்புகள் அதிகரித்து வருவதன் விளைவாக, மக்கள் தொகை அதிகரித்து, அதன் காரணமாக தனி வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி வருவதற்கேற்ப கழிவுநீர் அகற்றல் அமைப்பு அமைக்கப்பட வேண்டும்; நீர் ஆதாரங்கள் மற்றும் நீர் வழிப் பாதைகளில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், சென்னை நகரில் உள்ள நீர் வழிப்பாதைகளில் கழிவு நீர் கலக்கக் கூடிய கூவம் ஆற்றில் 105 இடங்கள், பக்கிங்காம் கால்வாயில் 183 இடங்கள், அடையாறு ஆற்றில் 49 இடங்கள் என மொத்தம் 337 இடங்களில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய 300 கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் நிறைவேற்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக 150 கோடி ரூபாயை தவணை முறையில் சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திற்கு விடுவிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதன்படி, பிரதானக் கழிவுநீர் குழாய்கள் அமைத்தல், சிறிய அளவிலான குழாய்களை அகற்றி, அதிக விட்டம் கொண்ட கழிவு நீர் உந்து குழாய்கள் அமைத்தல், சாலையோரம் சிறிய கழிவுநீரேற்றும் நிலையங்கள் அமைத்தல், ஏற்கெனவே உள்ள கழிவுநீரேற்றும் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் ஏற்கெனவே உள்ள சிறிய அளவிலான கழிவுநீர் குழாய்களை, பெரிய குழாய்கள் கொண்டு மாற்றி அமைத்தல்
போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சென்னை நகரில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் ஆறுகளுடன் கலப்பது தடுத்து நிறுத்தப்படும்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சேவை தரம் உயர, அவைகளுக்கிடையே ஆக்கப்பூர்வ போட்டி அவசியம் என்பதால் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள், சிறந்த சேவைகள் செய்யும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் விருது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் என்றும், சிறந்த ஒரு மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாயும், சிறந்த முதல்
மூன்று நகராட்சிகளுக்கு முறையே 15 லட்சம், 10 லட்சம் மற்றும் 5 லட்சம் ரூபாயும், முதல் மூன்று பேரூராட்சிகளுக்கு முறையே 10 லட்சம், 5 லட்சம் மற்றும் 3 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்றும், பாராட்டுப் பத்திரம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.
இதனைச் செயல்படுத்தும் விதமாக சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை தேர்வு செய்ய, மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களை தலைவராகவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், நகர்மன்ற தலைவர்களின் பேரவைத் தலைவர்
ஆகியோரை உறுப்பினர்களாகவும், நகராட்சி நிர்வாக இயக்குநரை உறுப்பினர்-செயலாளராகவும் கொண்ட ஒரு உயர்மட்ட குழுவினை நியமித்தும், இதற்கென 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்தக் குழு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் வரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலம் திரட்டப்படும் வருவாய், திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம், திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள், சாலை மேம்பாடு, மின்சார பயன்பாட்டில் சிக்கனம் மற்றும் தெருவிளக்குகளை தேவையான நேரங்களில் மட்டும் எரியச் செய்தல், திறம்பட்ட நிதி மேலாண்மை, சேவை மையங்களின்
செயல்பாடுகள் மற்றும் பிற சேவைகளின் மேம்பாடு, சிறப்பு முயற்சிகள் ஆகியவற்றை அளவுகோலாகக் கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் விருதுக்கான சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை உயர்மட்ட குழு தேர்வு செய்யும்.
இதன் மூலம் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளிடையே ஆக்க பூர்வ போட்டி ஏற்பட்டு அவைகளின் பணித் தரம் உயர்வடையும்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9. |