காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் சார்பில் - ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி மற்றும் எஸ்.ஏ.சுலைமான் நினைவு சுழற்கோப்பைக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி, திருச்சி புனித ஜோஸப் மேனிலைப்பள்ளி அணியை வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது.
வெற்றிபெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளி அணியைப் பாராட்டி, அப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், 20.07.2012 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற மாணவர் ஒன்றுகூடலின்போது (அசெம்ப்ளி) சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.கே.லெப்பைத்தம்பி முன்னிலை வகித்தார். பள்ளியின் அரபி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். கிராஅத்தைத் தொடர்ந்து, மாணவர் ஒன்றுகூடலின் வழமையான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர், தலைமையாசிரியர் வரவேற்புரையாற்றினார். அண்மைக் காலங்களில் கல்வி - விளையாட்டு - இதர திறன்சார்ந்த போட்டிகளில் தம் பள்ளி மாணவர்கள் சாதனைகள் பல புரிந்து வருவதாகப் பாராட்டிப் பேசிய அவர், நடைபெற்று முடிந்த - எல்.கே.லெப்பைத்தம்பி மற்றும் எஸ்.ஏ.சுலைமான் நினைவு சுழற்கோப்பைக்கான - பள்ளிகளுக்கிடையிலான மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளமைக்காக தம் பள்ளி அணியை மனதாப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.
இந்த வெற்றிக்காக உழைத்த அணியின் பயிற்சியாளரும் - பள்ளியின் முன்னாள் மாணவருமான பஷீர் அஹ்மத், அணி மேலாளரும் - பள்ளியின் உடற்கல்வி ஆசிரியருமான ஜமால், அணி ஒருங்கிணைப்புப் பணிகளை சிறமேற்று செய்திட்ட பள்ளியின் முன்னாள் மாணவர் எம்.சதக், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் வேலாயுதம் ஆகியோரைக் குறிப்பிட்டுப் பாராட்டுவதாகவும் அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.
இப்பள்ளி மாணவர்கள் எந்த சாதனையைப் புரிந்தாலும், அவர்களுக்கு அந்தந்த இடங்களில் வழங்கப்படும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை - பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஊக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு - பள்ளியின் மாணவர் ஒன்றுகூடலின்போது அனைத்து மாணவர்கள் முன்னிலையில் வழங்கப்படுவது வழமை என்றும், அந்த அடிப்படையில், தம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சுழற்கோப்பை மற்றும் பரிசுகளை அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் வழங்குவதற்காகவே இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
பின்னர், எல்.கே.லெப்பைத்தம்பி - எஸ்.ஏ.சுலைமான் நினைவு கால்பந்துப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும், சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
பின்னர் அணிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் பள்ளி வளாகமே அதிருமளவுக்கு கரவொலி மற்றும் குரலொலி எழுப்பி தமது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |