தமிழகத்தின் செய்யாறு என்ற ஊரில் பிறை பார்க்கப்பட்ட தகவல் அடிப்படையாகக் கொண்டு, சென்னையிலுள்ள தமிழ்நாடு தலைமை காஜீ உறுதி செய்து அறிவித்துள்ளதன் அடிப்படையில், இன்று ரமழான் முதல் நாள் இரவு என்றும், நாளை முதலாவது நோன்பு என்றும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியில் நடைபெற்ற - மஹ்ழரா அரபிக்கல்லூரி, ஜாவியா அரபிக்கல்லூரி உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் ஏகமனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபரம் பின்வருமாறு:-
ஹிஜ்ரீ 1433ஆம் ஆண்டிற்கான ரமழான் தலைப்பிறையை முடிவு செய்வதற்கான மஹ்ழரா - ஜாவியா அரபிக்கல்லூரிகள் மற்றும் காயல்பட்டினம் நகர உலமாக்கள் கலந்தாலோசனைக் கூட்டம், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியில் இன்று இரவு 07.00 மணியளவில் நடைபெற்றது.
மவ்லவீ ஹாஃபிழ் “முத்துச்சுடர்” என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீ மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ, தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபிர் - குத்பா பெரிய பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவரும், காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் இமாமுமான மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ, ஜாவியா அரபிக்கல்லூரியின் நிர்வாகி ஹாஜி ச.த.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, மவ்லவீ கத்தீப் அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ, ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, அக்கல்லூரியின் ஆசிரியர்களான மவ்லவீ ஸலாஹுத்தீன் மழாஹிரீ, மவ்லவீ ஹாஃபிழ் காரீ அப்துல்லாஹ் ஃபாஸீ, முஹம்மத் முஹ்யித்தீன் ஆலிம் மற்றும் எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், மவ்லவீ ஹாஃபிழ் நோனா காஜா முஈனுத்தீன் ஜிஷ்தீ மஸ்லஹீ, மவ்லவீ ஹாஃபிழ் தாஜுத்தீன் மஸ்லஹீ, மவ்லவீ ஹாஃபிழ் உமர் ஃபாரூக் அஃலம் மஹ்ழரீ மற்றும் நகரின் உலமாக்கள் கலந்துகொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தலைப்பிறை குறித்த தகவல்களை சேகரித்து வழங்கியவண்ணம் இருந்தனர். ஆங்காங்கே பிறை பார்க்கப்பட்ட தகவல்கள் கிடைத்தபோதிலும், எந்தத் தகவலும் உறுதி செய்யப்படாத நிலையில், உலமாக்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நீண்ட நேரம் நீடித்தது.
இரவு 08.50 மணியளவில், செய்யாறு என்ற ஊரில் பிறை பார்க்கப்பட்ட தகவலை, சென்னையிலுள்ள தமிழக அரசின் தலைமை காஜீ தலைமையிலான உலமாக்கள் குழு ஆய்ந்தறிந்து முடிவு செய்ததன் அடிப்படையில் இன்றிரவு ரமழான் முதல் நாள் இரவு என்று, தலைமை காஜீ அறிவித்ததாக உறுதியான தகவல் பெறப்பட்டது.
அத்தகவலை அடிப்படையாகக் கொண்டு, இரவு 09.00 மணியளவில் - இன்று (வெள்ளி பின்னிரவு) ரமழான் முதல் நாள் இரவு என்றும், சனிக்கிழமை முதல் நோன்பு நோற்கப்பட வேண்டும் என்றும் முறைப்படி உலமாக்களால் அறிவிக்கப்பட்டது.
நிறைவாக, கூட்டத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ துஆவுக்குப் பின், ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
உலமாக்கள் கூட்டத்தில் வடிவமைத்து வெளியிடப்பட்ட முறைப்படியான அறிவிப்பு பின்வருமாறு:-
ரமழான் தலைப்பிறை குறித்த தகவலைப் பெற்றுச் செல்வதற்காக, நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மஹ்ழரா அரபிக்கல்லூரி வெளி வளாகத்தில் திரளாகக் குழுமியிருந்தனர். தலைப்பிறை செய்தி அறிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் உற்சாகத்துடன் தமதில்லங்களுக்கும், தமக்கறிமுகமானோருக்கும் அத்தகவலைப் பரிமாறிக்கொண்டனர்.
|