தமிழக அரசின் மூலமாக ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி வகைக்கு பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கப்படுவது உண்டு. இவ்வாண்டும் இதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பு வருமாறு:
சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள்,
இஸ்லாமிய மக்கள் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்குத் தேவையான மொத்த
அனுமதியை வழங்க தனது முந்தைய ஆட்சி காலத்தில், அதாவது 9.11.2001 அன்று ஆணையிட்டார்கள். அதன்படி, பள்ளிவாசல்களுக்கு
அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இஸ்லாமிய மக்களின் கோரிக்கையினை கனிவுடன் ஏற்று, இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்கள்
சிரமமின்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாக மொத்த அனுமதி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள்
ஆணையிட்டுள்ளார்கள்.
ஆவணங்களை உரிய ஆய்வு செய்து பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித்
தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள்
பயன் அடைவதுடன், 3800 மெட்ரிக் டன்கள் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை-9.
|