சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் குடும்ப சங்கம நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
குடும்ப சங்கமம்: இடையறாத பணிப்பளுவிற்கிடையே மனதில் இன்பம் பொங்கச் செய்யும் நோக்குடன், எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் குடும்ப சங்கம நிகழ்ச்சி அடிக்கடி நடத்தப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், எம் மன்றத்தின் சார்பில், 30.06.2012 சனிக்கிழமையன்று குடும்ப சங்கம நிகழ்ச்சி, சிங்கப்பூர் பொட்டானிக் கார்டன்ஸ்-இல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் மகிழ்ச்சிப் பரிமாற்றம்:
அன்று மாலை 17.30 மணியளவில், மன்ற உறுப்பினர்கள் அனைவரும் சங்கம நிகழ்விடத்தை வந்தடைந்தனர். அந்நேரத்தில் மனதுக்கு புத்துணர்ச்சியூட்டும் ரம்மியமான வானிலை நிலவியதால், உறுப்பினர்கள் அதனை உற்சாகத்துடன் அனுபவித்தனர்.
சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளாத நிலையில், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள இச்சந்திப்பில் மகிழ்ந்து போன மன்ற உறுப்பினர்கள் ஒருவரையொருவர் இன்முகத்துடன் வரவேற்று, தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டதன் மூலம், இருக்கும் உறவுக்கு இன்னும் வலிமை சேர்த்தனர்.
நிகழ்முறை:
குடும்ப சங்கம நிகழ்ச்சி, மாலை 18.15 மணியளவில், புத்தாநத்தம் மவ்லவீ முஹம்மத் இஸ்மாஈல் மன்பஈ அவர்களின் இறைமறையோதலுடன் இனிதே துவங்கியது.
அடுத்து, இந்நிகழ்விற்குத் தலைமை தாங்கிய - சிங்கப்பூர் மஸ்ஜித் ஜாமிஆ சூலியாவின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ, தலைமையுரையாற்றினார். மன்ற உறுப்பினர்கள் - மாச்சரியங்களுக்கப்பாற்பட்டு இன்முகத்துடன் கூடிக் கொண்டாடும் இந்த அரிய நிகழ்வு என்றென்றும் தொடர வேண்டும் என்ற தனது ஆவலை அவர் தனதுரையில் வெளிப்படுத்தினார்.
அடுத்து, மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான், குடும்ப சங்கம நிகழ்வில் பங்கேற்க வந்திருந்த அனைவரையும் மன்றத்தின் சார்பில் முறைப்படி வரவேற்று உரையாற்றினார்.
மன்றப் பணிகள் குறித்து விளக்கம்:
அடுத்து, கடந்த ஆறு மாத காலத்தில் மன்றத்தால் செய்து முடிக்கப்பட்டுள்ள அண்மைப் பணிகள் குறித்து மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் விளக்கிப் பேசினார். மன்றத்தின் நகர்நலப் பணிகள் இறையருளால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படுவதற்கு, மன்ற உறுப்பினர்களின் மனப்பூர்வமான ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைத்து வருவதே முக்கிய காரணமென அவர் தனதுரையில் தெரிவித்தார்.
அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
காயல்பட்டினம் நகரிலுள்ள ஏழை - நிராதரவான - உழைக்கவியலாத குடும்பத்தினருக்கு வழங்ப்படும் அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், வரும் ரமழான் மாதத்திற்கான பொருளுதவிகள், இன்ஷாஅல்லாஹ் 18.07.2012 அன்று வழங்கப்படும் என்றும், தமது பரிந்துரையின் கீழான பயனாளிகளின் விபரங்களை மன்ற நிர்வாகத்திடம் விரைந்தளித்து ஒத்துழைக்குமாறும் தனதுரையில் கேட்டுக்கொண்ட அவர், மன்றத்தின் ஜகாத் நிதி சேகரிப்புத் திட்டத்தின் கீழ், உறுப்பினர்கள் தமது ஜகாத் நிதிகளை விரைந்தளித்து உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இக்கூட்டத்தில், மன்ற உறுப்பிர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
சிறாரின் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்:
ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபுறம் - பூங்காவின் மலர்ச்செடிகளுக்கிடையே சிறுவர்-சிறுமியர் துள்ளி விளையாடி மகிழ்ந்தனர்.
மஃரிப் தொழுகை:
பின்னர், மஃரிப் தொழுகை ஜமாஅத்துடன் (கூட்டாக) தொழப்பட்டது. மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ தொழுகையை வழிநடத்தினார்.
அரட்டை:
தொழுகை நிறைவுற்ற பின்னர், உறுப்பினர்கள் தத்தம் நண்பர் வட்டத்துடன் கூடி, நகர் நடப்புகள் குறித்து அளவளாவிக் கொண்டனர். இரவு 20.30 மணிக்கு அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இதயத்திற்கிதமூட்டும் இன்ப நினைவுகளுடன் இரவு 21.15 மணியளவில், மன்ற உறுப்பினர்கள் தமதில்லம் திரும்பினர்.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
[செய்தி திருத்தப்பட்டது @ 18:53/10.07.2012] |