“நீங்கள் காணும் கனவு உங்களை உறங்க விடக்கூடாது” என, சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2012 கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது, ப்ளஸ் 2 மாநிலத்தின் முதன்மாணவி எஸ்.சுஷ்மிதா தெரிவித்துள்ளார். விபரம் பின்வருமாறு:-
காயல்பட்டினம் மாணவ-மாணவியரை மாநில அளவில் சாதனை செய்திடத் தூண்டும் நோக்குடன், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில், “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு, கடந்த ஜூன் 23ஆம் தேதியன்று, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2012” என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில், கலந்துரையாடல் - பரிசளிப்பு என இரண்டு அமர்வுகளாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
சாதனை மாணவ-மாணவியருடன் காயல்பட்டினம் நகர பள்ளிகளின் மாணவ-மாணவியரைக் கலந்துரையாடச் செய்யும் கலந்துரையாடல் நிகழ்ச்சி காலை 10.00 மணிக்குத் துவங்கியது. இக்ராஃ கல்விச் சங்கத்தின் தலைவரும், தாய்லாந்து காயல் நல மன்றத்தின் (தக்வா) தலைவருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி எஸ்.எல்.ஷெய்க் அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் மூத்த ஆலோசகர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா, எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.ஜெஸீமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஹாஃபிழ் வாஸிம் அக்ரம் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, இக்ராஃ கல்வி கல்விச் சங்கத்தின் பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், சாதனை மாணவி குறித்து அறிமுகவுரையாற்றினார். கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நெறிமுறைகள் குறித்து, இக்ராஃ கல்விச் சங்க துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் விவரித்தார்.
பின்னர் கலந்துரையாடல் நிகழ்ச்சி துவங்கியது. 2011-2012 கல்வியாண்டில் ப்ளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி எஸ்.சுஷ்மிதா, இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, காயல்பட்டினம் நகரின் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியருடன் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ சாதனை மாணவியை நேர்காணல் செய்தார்.
அன்றாடம் படிக்க வேண்டிய முறைகள், நேர ஒழுங்கமைப்புகள், சிறப்பு வகுப்புகள், சிறப்புத் தேர்வுகள், அன்றாட பழக்கவழக்க்களை முறைப்படுத்தி அமைத்துக்கொள்ளல், தேர்வு எழுதும்போது மனதை ஒருநிலைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, நேர்காணல் செய்தவரும், அனைத்துப் பள்ளிகளின் மாணவ-மாணவியரும், பார்வையாளர்களும் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சாதனை மாணவி எஸ்.சுஷ்மிதா விளக்கமாக விடையளித்தார்.
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தெரிவித்த “கனவு காணுங்கள்!” என்ற முழக்கம் குறித்து சாதனை மாணவியிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, “உறக்கத்தில் காண வேண்டியதல்ல உங்கள் கனவு! மாறாக, நீங்கள் காணும் கனவு உங்களை உறங்க விடக்கூடாது!!” என்று தெரிவித்தார்.
தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன் அடிமைப்பட்டுக் கிடப்பதைத் தவிர்க்குமாறு தெரிவித்த அவர், “நாம் தொலைக்காட்சியைப் பார்க்காவிட்டால்தான் நம்மை அனைவரும் தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
இடையிடையே மாணவ-மாணவியரை உற்சாகப்படுத்தும் வகையில் சாதனை மாணவியின் தாய், தந்தை, இளைய சகோதரி ஆகியோரும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
நண்பகல் 12.15 மணியளவில் இடைவேளை விடப்பட்டது. இடைவேளையின்போது - நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் குளிர்பானமும், சிற்றுண்டியும் பரிமாறப்பட்டது. மதியம் 01.00 மணியளவில் கலந்துரையாடல் நிகழ்ச்சி, நன்றியுரை - நாட்டுப்பண் - ஸலவாத் - கஃப்ஃபாராவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில் அனைத்துப் பள்ளிகளின் பல்வேறு ஆசிரியர்களும், ஆசிரியையரும், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கல்வி ஆர்வலர்களும், அபூதபீ காயல் நல மன்ற செய்தித் தொடர்பாளர் ஏ.ஆர்.ரிஃபாய், தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீன், தாய்லாந்து காயல் நல மன்ற செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் உள்ளிட்ட உலக காயல் நல மன்றங்களின் நிர்வாகிகள் - செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களும், மாணவ-மாணவியரின் பெற்றோரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடல் நிகழ்ச்சி துவங்கியது முதல் நிகழ்ச்சி நிறைவுறும் வரை, இடைவேளையைத் தவிர அனைத்து நேரங்களிலும் மாணவ-மாணவியர் மிகுந்த அமைதியுடனும், முழு கவனத்துடனும் நிகழ்ச்சிகளை அவதானித்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் தலைமையில், அதன் மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, அங்கத்தினரான எஸ்.அப்துல் வாஹித், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான பி.ஏ.புகாரீ, எஸ்.எம்.ஐ.ஜக்கரிய்யா, எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ், தம்மாம் காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு, வள்ளியூரில் இயங்கி வரும் பெட் பொறியியல் கல்லூரி நிர்வாகம் முழு அனுசரணையளித்திருந்தது. அக்கல்லூரியின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஷாஹுல் ஹமீத், சாதனை மாணவியையும், இந்நிகழ்ச்சியை இணைந்து நடத்தும் இக்ராஃ கல்விச் சங்கம் - தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளையும், அதற்கு முதுகெலும்பாக இருக்கும் உலக காயல் நல மன்றங்களையும் வாழ்த்திப் பேசியதுடன், பெட் பொறியியல் கல்லூரியின் செயற்பாடுகள், சேவைத் திட்டங்கள், முஸ்லிம் மாணவர்களுக்கு விடுதியில் வழங்கப்பட்டு வரும் சிறப்பு வசதிகள் குறித்து விளக்கிப் பேசினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சி நிறைவுற்ற பின்னர், சாதனை மாணவி எஸ்.சுஷ்மிதாவை, காயல்பட்டினம் நகர பள்ளிகளின் மாணவியர் சூழ்ந்துகொண்டு ஆர்வத்துடன் அளவளாவினர்.
|