Re:...தீதும் நன்றும் பிறர் தர வாரா... posted byMauroof (Dubai)[20 December 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 24622
நவம்பர் மாத நகர்மன்றக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் விவாதத்திற்கு/பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் அநேகம் அவசியமானதாகவே உள்ளது. சில பொருட்களின் மீதான உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் வரவேற்க்கத்தக்கது. மற்ற சில வரவேற்க்கத்தக்கதல்ல.
மின் விளக்குகள் பராமரிப்பு மற்றும் புதியவை, பழுதடைந்த சாலைகள் பராமரிப்பு மற்றும் புதியவை (2ஆவது பைப்லைன் திட்டம் ஆரம்பிக்கும்பொழுது சாலைகள் சேதத்திற்கு உள்ளாகலாம், எனவே அந்த பணிகள் நடைபெற்ற பின்னர் அமைக்கலாம் என்ற உறுப்பினரின் கருத்து சரியானது. அதற்காக பள்ளங்களைக்கூட நிரப்பாமல் விட்டு விடாதீர்கள்), நீர் நிலைகள் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்க்கொள்ளல், குடிநீர் தேக்கங்கள், குடிநீர் வால்வு தொட்டிகள் பராமரிப்பு மற்றும் அழகுக் குதிரைகளாகக் காட்சி தரும் குடிநீர் தேக்கத் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் அல்லது இடித்தல் (பொதுமக்களின் வரிப்பணம் சிலரின் வயிற்றிற்கு சமர்ப்பணம், அது கட்டப்ப்படும்போதும் சரி, இடிக்கப்ப்படும்போதும் சரி), புதிய பேருந்து நிறுத்தங்கள் மற்றும் நிழற்குடைகள் அமைத்தல், பயன்பாடற்ற பேருந்து நிழற்கூடம் அகற்றுதல், முறைப்படுத்தப்படவேண்டிய/அகற்ற வேண்டிய வேகத்தடைகள் மற்றும் புதியவை, பேருந்து நிலைய கழிப்பறை பராமரிப்பு, நகராட்சிக்கு சொந்தமான கிணறுகள் பராமரிப்பு, தினசரி சந்தை ஒழுங்குபடுத்துதல், சாலைகளில் பெயர் பலகை அமைத்தல், சட்டத்திற்கு உட்பட்டு கட்டுமான பணிகளுக்கான அங்கீகாரம் வழங்கல் மற்றும் அதற்கு அப்பாற்பட்டு வழங்கப்பட்டவைகளை ரத்து செய்தல், DCW ஆலை குறித்த ஆய்வுகள், கழிவு மேலாண்மைக்கு தேவைப்படும் நிலம் குறித்த கருத்துப்பரிமாற்றங்கள், கம்பளிப்பூச்சிகளை அழித்தல், நகராட்சிப் பணிகளுக்குத் தேவையான புதிய தொழிலாளர்கள் நியமனம் குறித்த வேண்டுகோள், குப்பைகள் அகற்ற பயன்படுத்தப்படும் ஊர்தி/கள் பழுது நீக்குதல், ஆடு, மாடுகள் அறுப்பிடம், ஆக்கிரமிக்கப்பிற்கு உள்ளான சாலைகளை மீட்டெடுத்தல், தனது வார்டிற்கு உட்பட்ட சாலையில் காணப்படும் புழுதி மணல்களை அப்புறப்படுத்த வேண்டி ஒரே ஒரு உறுப்பினரின் கோரிக்கை வரவேற்கத்தக்கது (குறிப்பிட்ட சாலையைத் தவிர வேறெங்கும் புழுதி மணல்கள் இல்லை போலும், அதனால்தான் மற்ற உறுப்பினர்கள் இந்த முக்கியமான கோரிக்கையை வைக்கவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.
புழுதி மணல்கள் கொண்ட சாலையில் செல்லும் வாகனங்களால் எழும் புழுதிகள், அப்புழுதியின் காரணமாக ஏற்படும் நோய்களை தடுப்பது பற்றி அக்கறையே இல்லை), பொருள் எண் 82-ன் படி பள்ளங்களில் சரள் மண் பரப்புவதில் தவறில்லை, ஆனால் மோனோ ரயில் விடும் அளவிற்கு பரப்பாமல் இருந்தால் சரி (பார்க்க: http://www.kayalpatnam.com/shownews.asp?id=9592), சாலையை உயர்த்தச் சொல்லி ஒரு உறுப்பினர் கோரிக்கை. பார்த்து உயர்த்துங்க Sir தேவையான அளவிற்கு. அதை விடுத்து சில வருடங்களுக்கு முன்னர் குறுக்குதெரு உயர்தப்பட்டதைப் போன்றா அல்லது அதை விட உயரமாகவோ உயர்த்திவிடாதீர்கள். சாலைகள் உயர்த்துவதில் பொதுமக்களின் பங்கு ஒரு புறமிருக்க தற்போது அரசு இயந்திரம் மூலம் உயர்த்தினால் அப்பகுதியில் உள்ள வீடுகள் இன்னும் பாதாளத்திற்கு போகும்.
நகர்மன்றக் கூட்ட நிகழ்வுகளை காணொளிப்பதிவு செய்யப்படுவதின் மூலம் தலைவர் தனக்கு சாதகமில்லாததை நீக்கிவிடக்கூடும் என்று அஞ்சுவதாகவும், தலைவியின் நேர்மை மீது பல உறுப்பினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் "ஐக்கியப் புகழ்" உறுப்பினர் கூறியதை அவரின் மனசாட்சிக்கே விட்டுவிடலாம். அவ்வளவு இலகுவாக சாட்சியங்களை/நடந்தவைகளை மாற்றி அமைப்பதென்பது இன்றைய சூழலில் சாத்தியமற்றது. வழக்கமாக இவர் அமரும் இடமும் மாறுபட்டுள்ளது. காணொளிப்பதிவு செய்வதை தடை செய்யும் வகையில் பொருளும் கொண்டு வந்தாகிவிட்டது. இதற்குத்தானே ஆசைபட்டீர்கள் பாலகுமாரர்களா!
தலைவி விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்று கூறும் உறுப்பினர்களில் பலர் ஒரே கோரிக்கைகளை பல்வேறு பொருள்களாக அவையில் வைப்பதின் மூலம் தாங்களும் விளம்பரம் தேடிக்கொள்ளத்தான் என எடுத்துக் கொள்ளலாமா? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் சம்பந்தம் இல்லாத வகையில் பொருளுக்கு சற்றும் தொடர்பில்லாது, DCW-வில் தான் பணிபுரிந்த காலத்தில் "அபின்" கடத்தவில்லை என்று கூறியுள்ளார் உறுப்பினர் சாமி. அப்படியானால் அதுவுமா தயாரிக்கப்படுகிறது அந்த ஆலையில்? சாமியே இவ்வாறு கூறி இருப்பதினால்தான் இந்த ஐயம்.
இணையத்தளத்தில் வெளியிடப்படும் செய்திகளை "அறுத்துக் கிழிக்கிறார்கள்" என்று காரம் தரக்கூடிய இரண்டு பொருள்களான ஒன்றின் ஆங்கிலப்பெயரை அப்படியே தமிழில் எழுதும்போதான முதல் எழுத்திற்கும், மற்றொரு பொருளுடைய தமிழ் பெயரின் ஆரம்ப எழுத்திற்கும் சொந்தக்காரர்களான இரு உறுப்பினர்கள் வெகுண்டெழுந்தது அவசியமே இல்லாத ஒன்று. கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முயலாது இவ்வாறு பேசுவது அறிவுடைமை அன்று.
மன்றத்தின் பல அமர்வுகளில் உட்காருவதற்கு பதிலாக மேஜையில் படுக்கும் தோரணையிலேயே காட்சி தந்த உறுப்பினர் ஒருவர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதி விளம்பரத்தின் உச்சிக்கே போய்விட்டார் எனலாம். என்னே ஒரு ஆச்சரியம் வழக்கமாக கர்ஜிக்கும் சில உறுப்பினர்கள் (தாய்க்குலம் உட்படத்தான்) இவ்வளவு சாதுவாக இருக்கிறார்களே என்று.! நிரூபித்தார்கள் பாருங்க நாங்கள் அவ்வாறு இல்லை என்று (பார்க்க: http://www.kayalpatnam.com/shownews.asp?id=9811). அடுத்து யார் தலைவர் என்பதும் முடிவாகி இருக்கலாம். ஏனெனில், அடுத்து நம்பிக்கை இல்லா தீர்மானம்தானே?
"அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்காயும் கேடீன் பது" (பொருள்:-பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த பகையே வேண்டாம், அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்) என்ற திருக்குறளையும் "இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகும்" (பொருள்:- அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்) என்ற திருக்குறளையும் இங்கே பதிந்து எனது கருத்தை முடிக்கிறேன். நன்றி. வாழ்க ஜனநாயகம்!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross