சட்டம், தீர்ப்பு, தண்டனைகள்...! தரப் பரிசோதனை தேவைதானா...? posted byM.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.)[25 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25214
சுமார் இருபத்தி மூன்று ஆண்டுகாலம் சவூதி அரேபியாவில் பணியாற்றி அங்குள்ள பலதரப்பட்ட மனிதர்களோடு பழகியவன் நான். அரசாங்கத்தில் (வஸீர்) அமைச்சர் பொறுப்புக்கு கீழே உள்ளவர் வீட்டில் இரண்டரை வருடம் பணியாற்றி நன்மதிப்பை பெற்றவன் நான். பணியாட்கள் அல்லது பணிப் பெண்கள் விஷயத்தில் சவூதி மட்டுமல்ல பரவலாக எல்லா நாடுகளிலும் கொடுமைகள், கொத்தடிமைத்தனம், கொலைகள் என நடந்து வருவதை யாராலும் மறுக்க இயலாது. இதே சவூதி அரேபியாவில் பணிப்பெண்கள் கண்ணியமாக நடத்தப்பட்டும், மனித நேய அடிப்படையில் பல உதவிகளைப் பெற்றும் வீட்டுப் பொறுப்புக்களை நிர்வகித்து வரும் எத்தனையோ இலங்கை பணிப்பெண்களை நான் பார்த்திருக்கின்றேன்.
பாதிக்கப்பட்டவன் நிலையில் இருந்து பார்த்தால் தான் பாதிப்புக்கான இழப்பீடும், மதிப்பீடும் தெரியும். கட்டுரையாளர் இலங்கையில் வசிப்பவர் எனவே அந்த நாட்டுப் பெண்ணுக்காக பரிந்துரை செய்யப்பட்டு வரும் ஊடகச் செய்திகள் மற்றும் நாளேடுகள் ஆகியவற்றால் மனம் கசிந்து சம்பவத்தை விவரிக்கும்போதே ஒருவகை பரிவோடும், கனிவோடும் விவரித்திருக்கின்றார்.
கொடுமைகள் எங்கும் நடக்கும் ஆனால் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், உயிருக்கு உயிர் எனும் குர்ஆன் சட்டத்தைக் கற்றறிந்து கடுகளவும் அடி சருகாமல் மிகுந்த கவனத்தோடு கையாண்டு வரும் கண்ணியமிக்க உலமாக்களை காழிகளாக (நீதிபதியாக) பொறுப்பில் அமர்த்தி மன்னரின் மகனானாலும் மறை கூறும் சட்டம் யாவருக்கும் பொதுவானதே என பல்லாண்டு காலமாகப் பேணி வரும் சவூதி அரசாங்கத்தையும், அதன் வருமானத்தையும் கட்டுரையாளர் விமசித்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை!
பிள்ளைக்கு பால் புகட்டும் போது அப்பெண் அருகிலேயே இருந்திருக்க வேண்டும். அது அவளது பொறுப்பு. ஆனால் அப்பெண்மணியோ பால் புட்டியைக் குழந்தையின் கையில் கொடுத்து விட்டு வேறு வேலைக்குச் சென்று விட்டாள். வந்து பார்த்த பின்னர்தான் நிப்பிள் மூக்கில் ஏறி பால் மூச்சுடன் கலந்து மழலையின் மரணத்திற்கு காரணமாயிற்று. இதைத்தான் உலமாக்கள் மற்றும் நீதிபதிகள் உறுதி செய்து வேலைக்காரியின் கவனக் குறைவால்தான் உயிரிழ்ப்பு ஏற்பட்டது... எனவே, அவள் தன் கடமையிலிருந்து தவறிவிட்டாள்... என தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
கட்டுரையாளர் கூறுவது போல ஏதோ ஒரு ஆடு மேய்ப்பவரின் மொழிபெயர்ப்பை மட்டும் அடிப்படையாக வைத்து தீர்ப்பு வழக்கப்பட்டது என்பது தவறு. சவூதி அரேபியாவில் மார்க்கப் பணியாற்றி வரும் இலங்கையைச் சார்ந்த எத்தனையோ ஆலிம்கள், மொழிபெயர்ப்பாளர்கள் இன்று வரை பொறுப்பில் இருந்து வருவது கட்டுரையாளருக்கு தெரியாதது வருத்தத்திற்குரியரியதே!
மரண தண்டனை என்பது அவ்வளவு சுலபமாக வலுவான ஆதாரம் மற்றும் சாட்சிகள் விசாரணைகள் என்றில்லாமல் நிறைவேற்றப் படுவதில்லை. மற்ற நாடுகள் பல விதமாக (கொடூரமாக) மரண தண்டனையை நிறைவேற்றும்போது சவூதி அரேபியாவில் இன்றளவும் மக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டு வருவதை ஊதி பெரிதாக்கி ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.
இக்கட்டுரை அந்த பணிப்பெண்ணின் கவனக்குறைவால் குழந்தையை இழந்த தம்பதியினரை குற்றம் சாட்டியும், இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் முழுக்க முழுக்க இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் வழங்கப்பட்ட நீதியைக் குறை கூறுவதைப் போன்றும் அமைந்திருப்பதால் ஏற்புக்குரியதல்ல என்பது எனது பணிவான கருத்து.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross