இஜ்திமா சிறக்க வாழ்த்துக்கள் posted byMohamed Buhary (Kayalpatnam)[06 April 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 26726
அண்மைக் காலமாக இஸ்லாமும் அதைப் பின்பற்றும் முஸ்லிம்களும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருவதை ஊடகங்களினூடாக அறிகிறோம். ஊடகங்களேகூட இது போன்ற விமர்சனங்களுக்குத் துணைபோவதையும் பார்க்கிறோம். இத்தகைய காலகட்டத்தில் முஸ்லிம்களாகிய நமக்கிடையே பொதுக்கருத்தை நோக்கிய பயணம் தொடங்கப்பட வேண்டும்.
காலங்காலமாக நம்மிடையே காணப்படும் வேற்றுமைகளையே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதாலோ அல்லது ஒருவர் மற்றவரை விமர்சித்துக்கொண்டிருப்பதாலோ அல்லது ஒரு ஜமாஅத் மற்றொரு ஜமாஅத்தை குறை கூறிக்கொண்டிருப்பதாலோ நன்மைகள் பயக்கப்போவதில்லை. பொது எதிரிக்குத்தான் இதில் அதிக நன்மை.
எந்தவொரு ஜமாஅத்தாக இருந்தாலும், இஸ்லாம் இயம்பும் அடிப்படையான விஷயங்களில் ஒற்றைக் கருத்துடையதாகத்தான் காணப்பட வேண்டும். அடிப்படைக்கு மாற்றமாக இருக்கும் ஜமாஅத் சமூகத் தளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவை. இன்றைய காலத்தில் ‘அவாமுந் நாஸ்’ எனப்படும் பாமர மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். யாரும் எதையும் கூறி, மழுப்பித் தப்பித்துவிட இயலாது; தப்பிக்கவும் விடமாட்டார்கள். உண்மை எது? பொய்மை எது? என்பதையும் தெளிவாக அறிந்துள்ளனர். ஆனால், அறிஞர்களிடையேதான் கருத்து யுத்தம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இது ஒரு விதமான அரசியலாகப் பார்க்கப்படுகிறது. தமது தரப்பு அணியினர் தம்மைவிட்டு விலகிவிடக் கூடாது என்பதற்காகச் செய்யப்படும் மூளைச் சலவை. இஃக்லாசும், இறையச்சமும் குறைந்தபோனதுதான் இதற்கான அடிப்படைக் காரணிகள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தொன்மையான இஸ்லாமியக் கலாசாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் பெயர்போன காயல்பதியில் தப்லீஃக் ஜமாஅத்தின் மாபெரும் இஜ்திமா நடைபெறுகிறது. இந்த இஜ்திமா குறித்த விமர்சனங்கள் பல எழுந்தாலும், தப்லீஃக் சகோதரர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை என்பதை அறிய முடிகிறது.
இந்த ஜமாஅத் காலங்காலமாக பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் பெங்களூரு தப்லீஃக் மர்கஸுக்குச் சென்று தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் தப்லீஃக் ஜமாஅத்தின் பணிகளும் சேவைகளும் தெரியவந்தது. ஒரு மஹல்லாவை இஸ்லாமிய அடிப்படையில் எவ்வாறெல்லாம் இயங்கச் செய்ய முடியும் என்பதை நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
தப்லீஃக் ஜமாஅத் இதர ஜமாஅத்களோடு பொதுக் கருத்துகளில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தப்லீஃக் அல்லாத ஏனைய ஜமாஅத்தாரை சமூகத்திற்கு அப்பாற்பட்டவையாக காணும் போக்கு கைவிடப்பட வேண்டும். எல்லோரும் நம் சகோதரர்கள் என்ற நிலைக்கு வர வேண்டும். பொதுவான சமூகத் தீமைகளை அகற்றிட இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு இடைவெளியின்றி செயல்பட முன்வருவோமானால், நமக்கிடையே காணப்படும் கருத்து பேதங்கள் சன்னம் சன்னமாக குறைந்துபோகும். நமது முழுக் கவனமும் வளர்ச்சிப் பணிகளை நோக்கியதாகவே இருக்கும். இது குறித்து அவசியம் சிந்திக்க வேண்டும். இலங்கையில் செயல்படும் ஜம்இய்யத்துல் உலமா இதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு. தப்லீஃக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, ஸலஃபி ஜமாஅத் இணைந்ததொரு ஜம்இய்யத்துல் உலமா இங்கும் உருவாக்கப்பட வேண்டும். சமூகப் பணியில் களம் காணும் இளம் உலமாக்களும், சிந்தனையாளர்களும் காலத்தின் தேவை கருதி இந்தக் கருத்தை நோக்கி தங்களை நகர்த்த வேண்டும்.
தப்லீஃக் சகோதரர்களுக்கு இஜ்திமாவின் சிந்தனையாக இவற்றை முன்வைக்கிறேன். நாம் அனைவரும் பொதுக் கருத்தை நோக்கிய பயணத்திற்குத் தயாராக வேண்டும். அல்லாஹ் நம் அனைவரையும் தூய எண்ணங்களுடனும் செயல்பாடுகளுடனும் இணைப்பானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross