கான் பாகவியின் தினமணி ஆசிரியர் கடிதம் posted byMohamed Buhary (Chennai)[19 September 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 30203
அண்மையில் தமிழகத்தில் அறியப்பட்ட பிரபல மார்க்க அறிஞர் கான் பாகவி அவர்களின் முகநூல் பக்கத்தில் படித்த கடிதம் ஒன்றை இங்கு பதிவு செய்கிறேன்.
தினமணி ஆசிரியருக்கு ஒரு கடிதம்
1975ஆம் ஆண்டிலிருந்து தினமணி நாளேட்டை விரும்பிப் படித்துவரும் வாசகன் நான். தினமணியின் 80 ஆண்டுகால வரலாற்றில் சுமார் 40 ஆண்டுகள் அதனுடன் தொடர்புள்ளவன்.
தினமணி வாயிலாகவே உலக அரசியல், பொருளாதாரம், கலை, அறிவியல், சமயம், நாட்டு நடப்புகளை அறிந்தவன். செம்மொழியாம் தமிழ்மொழியை நான் கற்றதே தினமணியிடம்தான். பிழையின்றி பேசவும் எழுதவும் கற்றுக்கொடுத்த ஆசிரியர் என்னைப் பொறுத்தவரை தினமணியே.
என் கட்டுரைகள், கடிதங்கள் பல தினமணியில் நிறைய வெளிவந்துள்ளன. என் முதலாவது ஆக்கம், ஐயா ஏ.என். சிவராமன் அவர்கள் காலத்தில் வெளிவந்தது. காலம் சென்ற என் தந்தையும் தினமணியின் நீண்டகால வாசகரே. என் பெரிய தந்தை ஒருவரை ‘தினமணி பெரியப்பா’ என்றே நாங்கள் அழைப்போம்.
தினமணியின் தனிச் சிறப்பே, அதன் செய்திகளில் இருந்த நம்பகத் தன்மைதான். நல்லிணக்கம், மதச்சார்பின்மை, கட்சி அல்லது குழு சார்பற்ற நிலை, நடுநிலைப் போக்கு, நளினமான நடை, கண்ணியமான எழுத்து, நல்ல தமிழ் முதலான அம்சங்களால் தமிழ் இதழ்களில் தினமணிக்குத் தனிஇடம் இருந்தது.
அண்மைக் காலமாக –குறிப்பாக கே. வைத்தியநாதன் அவர்கள் ஆசிரியர் பொறுப்பை ஏற்றதிலிருந்து- தினமணி தன் பாரம்பரிய கண்ணியத்தை இழந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. செய்திகள், தலையங்கம், கட்டுரை… என எல்லாப் பகுதிகளிலும் ஒரு வக்கிரம் தெரிகிறது. செய்திகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டது. நடுநிலை வாசகர்களை முகம் சுழிக்கவைக்கிறது.
1. செய்திகள்: முன்பெல்லாம் செய்தியை செய்தியாகக் கொடுத்துவந்த தினமணி, இப்போது சொந்தக் கருத்தைச் செய்தியினூடே புகுத்துவது வெளிப்படையாகவே தெரிகிறது; செய்திகளுக்கு உள்நோக்கம் கற்பிக்க ஆரம்பித்துவிட்டது. ஏதோ ஒரு புலனாய்வு வார இதழைப் படிக்கும் உணர்வுதான் சாமானிய வாசகனுக்கு ஏற்படுகிறது. ‘மெய்யாலுமா?’ ஓர் எடுத்துக்காட்டு!
ஒரு தேசிய – காந்திய நாளிதழ் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு ஏன் வக்காலத்து வாங்க வேண்டும்? இன்றைய தினமணியை வாசிக்கும் யாரும், அது மாநில அளவில் அ.தி.மு.க.வையும் தேசிய அளவில் பா.ஜ.க.வையும் ஆதரிக்கும் பத்திரிகை எனச் சட்டெனக் கூறிவிடலாம்.
மதச் சிறுபான்மையினருக்கு –குறிப்பாக முஸ்லிம்களுக்கு- எதிரான, அவர்களைக் காயப்படுத்துகின்ற செய்திகளுக்கு இப்போதெல்லாம் தினமணி முன்னுரிமை அளிப்பது வெள்ளிடை மலை. ஒரு பயங்கரவாதச் செயலுக்கு யார் காரணம் என்பது உறுதியாவதற்கு முன்பே முஸ்லிம்களைக் குற்றவாளிகளாக்கி முதன்மைச் செய்தியாக வெளியிட்டுவிட்டு, முஸ்லிம்கள் காரணமல்ல என்பது உறுதியானபின் ஓர் ஓரத்தில் முக்கியமே இல்லாமல் வெளியிடும் இரட்டை நிலை தினமணிக்கும் வந்துவிட்டது.
அவ்வாறே, உயர்சாதி இந்துக்களின் செய்திகள், நிகழ்ச்சிகள், புகைப்படங்களே இரண்டாவது மற்றும் மூன்றாவது பக்கங்களை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. அதிக முக்கியத்துவத்துடன் சமய விழாக்கள் அடிக்கடி சில பக்கங்களைப் பிடித்துக்கொள்கின்றன.
2. தலையங்கம்: தலையங்கம் சிலநேரங்களில் சிறப்பாக அமைந்துவிடுவதுண்டு. பெரும்பாலும், கட்சிக் கண்ணோட்டமே மேலோங்கி நிற்கிறது.
முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் கைங்கர்யமும் அவ்வப்போது நடக்கிறது. குற்றவாளிகளுக்கு மதம் ஏது? மத அடையாளத்தோடு ஏன் விமர்சிக்க வேண்டும்? குற்றத்தை அது உண்மையாக இருந்தால் – கண்டிக்க வேண்டியதுதானே?
3. கட்டுரைகள்: பெரிய எழுத்தாளர்கள், மொழி வல்லுநர்கள், துறைசார்ந்த அறிஞர்கள் ஆகியோரின் கட்டுரைகள் குறைந்துபோய், தரமோ சுவையோ இல்லாத கட்டுரைகளே பெரும்பாலும் ஆசிரியர் பக்கத்தில் இடம்பெறுகின்றன.
கட்டுரைகளிலும் கட்சி, மதம், சாதி ஆகியவற்றின் ஒருசார்பு நிலை அவ்வப்போது தெரிகிறது.
மொத்தத்தில் தினமணியின் தரமும் கண்ணியமும் சிறிதுசிறிதாக மங்கிவருவது நிதர்சனம். நடுநிலையான, உண்மையான, சார்பற்ற செய்திகளுக்காகத் தினமணி வாசகர்கள் ஏங்கத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில்தான், எமக்கு ஆறுதலாகவும் உற்சாகம் அளிக்கும் விதமாகவும் ‘தி ஹிண்டு’ குழுமத்திலிருந்து ‘தி இந்து’ எனும் தமிழ் நாளிதழ் வெளிவரத் தொடங்கியுள்ளது. நான் அவ்விதழுக்கு ஆறு மாதச் சந்தா செலுத்திவிட்டேன். தினமணிக்கு விடை கொடுத்துவிட்டேன்.
இது நான் மட்டும் எடுத்த முடிவன்று. என்னைப் போன்ற ஏராளமான தினமணி வாசகர்கள் எனக்குத் தெரிந்து ‘தி இந்து’ நாளிதழுக்குச் சந்தா செலுத்தியுள்ளனர். இது வருத்தத்தோடும் வேறுவழியின்றியும் நான் எடுத்த கசப்பான முடிவாகும்.
இனியாவது தினமணி தன் போக்கை மாற்றிக்கொண்டு, பாரம்பரிய கண்ணியத்தைக் காக்க முன்வர வேண்டும் என்பதே என் அவா!
பிரிய மனமில்லாமல் பிரியும் வாசகன்
அ. முஹம்மது கான் பாகவி
16.09.2013
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross