மதிப்பிற்குரிய பெருந்தகை... posted byS.K.Salih (Kayalpatnam)[18 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32074
பெருமதிப்பிற்குரிய பெருந்தகை உவைஸ் அப்பா அவர்களின் மறைவு என்னைப் பெரிதும் வாட்டியது.
அவர்கள் சுகவீனமுற்று, கே.எம்.டி. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தியை, ஐக்கியப் பேரவை அலுவலகப் பொறுப்பாளர் மரைக்கா காக்கா மூலமாக 16ஆம் தேதியன்று அறிந்தேன். மனம் துடித்தது. கைவசம் மோட்டார் வாகனம் எதுவுமில்லா நிலையில், லரீஃப் காக்காவின் உதவியுடன் அங்கு சென்று பார்த்தேன். மூச்சுத்திணறலால் அவர்களது மிருதுவான மேனி ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. மருத்துவர்கள் இருவர் அங்கேயே இருந்து அவர்களது உடல் நல நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அல்லாஹ் இவர்களை நிச்சயம் குணமாக்குவான் என்ற நம்பிக்கையோடு இல்லம் திரும்பினேன்.
மறுநாள் டிசம்பர் 17 காலையில் அவர்களது பிரிவுச் செய்தி எனக்குக் கிடைத்தது. அனைவராலும் மதிக்கப்பட்ட உவைஸ் அப்பா இனி நம்மோடு இருக்கப் போவதில்லையே... என்று நினைக்கையில் கண் கலங்கியது.
நஸூஹிய்யா மத்ரஸாவின் நிறுவனரான அவர்களது தலைமையில், அம்மத்ரஸாவின் மாநில அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டிக்காக, அவர்களது இல்லத்தில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தின்போது (http://kayalpatnam.com/shownews.asp?id=12182), அவர்கள் அருகில் இருந்ததே - ஆரோக்கியமான நிலையில் அவர்களை நான் சந்தித்த கடைசித் தருணமாகிப் போனது.
நகர மக்களின் குடும்ப உறவு, சொத்துப் பிரச்சினைகளை அவர்கள் சிரமேற்று தீர்வளித்த விதத்தைப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும் அவற்றில் பெற வேண்டிய பாடம் நிறையவே உள்ளது என்று. அந்த புனிதமான - இறைவனுக்கு மிகவும் விருப்பமான - ஷைத்தானுக்கு மிகவும் வெறுப்பான பணியை தன்னலம் பாராது செய்த பெருந்தகைகளுள் ஒருவரான உவைஸ் அப்பா இன்று நம்மோடு இல்லை.
அவர்களது ஜனாஸா நல்லடக்கத்தின்போது, தொழுகை நடத்துவதற்கு முன் - குடும்பத்தார் சார்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டது:
“மறைந்த மர்ஹூம் உவைஸ் ஹாஜியாரின் குடும்பத்தார் அனைவரும் உங்கள் யாவருக்கும் ஸலாம் சொல்கிறார்கள்... அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்னார் தம் வாழ்நாளில் உங்களில் யாருக்கேனும் தவறிழைத்திருந்தால் அதற்காக நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்.
தங்கள் வாழ்நாளில் உங்களில் யாருக்கேனும் எதுவும் தர வேண்டியிருந்தாலோ, தருவதாக வாக்களித்திருந்தாலோ - அவர்களது மகனார் அதை நிறைவேற்ற ஆயத்தமாக உள்ளார். தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்...”
இவ்வாறு அந்த அறிவிப்பு அமைந்திருந்தது. இதைக் கேட்டவுடன், என் தந்தை மறைந்தபோது, ஜனாஸா தொழுகை நடத்துமுன் நானும், அடக்கம் நிறைவுற்ற பின் என் இல்லம் அருகில் - உவைஸ் அப்பா தலைமையில் நகரப் பிரமுகர்களால் நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்தில் (http://kayalpatnam.com/shownews.asp?id=5484) என் சகோதரர் ஷமீமுல் இஸ்லாமும் இதேபோன்று சொன்னது நினைவுக்கு வந்து சென்றது.
பொதுவாழ்வில் என் தந்தையோடு நெருங்கிய பற்றும், பாசமும் கொண்டிருந்த உவைஸ் அப்பா அவர்கள், அப்பாசத்தை குடும்ப அளவிலும் விரிவுபடுத்தி, சுக - துக்கங்களில் எங்களோடு இணைந்திருந்தமை என் வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத நிகழ்வுகள்.
எழுத நிறைய உள்ளன. இடம் போதாது!
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் உவைஸ் அப்பா அவர்கள் அறிந்தோ - அறியாமலோ செய்த பாவங்களையெல்லாம் அவனது அளப்பெருங்கருணையால் மன்னித்து, அன்னாரின் மண்ணறையை சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில் நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் அவர்களையும், நம்மையும் ஒன்றாக இணைத்தருள்வானாக.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை அளித்தருள்வானாக, ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross