Re:... posted bySalih (Chennai)[14 January 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 32507
சகோதரர்கள் வெள்ளி சித்தீக் மற்றும் சூஃபி ஆகியோருக்கு,
கட் ஆப் குறித்த ரியாத் மன்றத்தின் ஆர்வம் மற்றும் சேவை பாராட்டிற்குரியது. இதனை முதலில் பதிவு செய்து கொள்கிறேன்.
கட் ஆப் குறித்து வெளியிடப்பட்டுள்ள தங்கள் பிரசுரத்தில் - அரசு அறிவித்துள்ள விதிமுறைப்படி, நான்காவது பாடமும் தரவரிசை பட்டியலில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரிவிக்கப்படவில்லை. மேலும், எடுத்துக்காட்டு அட்டவணையில், முதல் மூன்று பாடங்களுக்கு 197 க்கு மேலான மதிப்பெண்கள் உதாரணமாகக் காட்டப்பட்டு, நான்காவதான பாடத்திற்கு உதாரண மதிப்பெண்ணாக 120 மதிப்பெண் காட்டப்பட்டிருந்ததால் -
இதைப் பார்க்கும் மாணவர்கள், நான்காவது பாடம் முக்கியம் அல்ல என நினைக்கத் தூண்டும் என்பதால்தான் எனது கருத்தை முதலில் பதிவு செய்தேன்.
கட் ஆப் குறித்து மாணவ சமூகத்திற்கு சொல்லப்படும் தகவல் முழுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.
----------
அதே நேரத்தில் கட் ஆப் விழிப்புணர்வை மாணவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கமே தவிர, எந்த மாணவனும் 1000க்கு மேல் மதிப்பெண் எடுக்கத் தேவையில்லை என்ற நோக்கமில்லை, அப்படியும் குறிப்பிடவில்லை என்றே அறிய முடிகிறது. (C&P)
----------
கட் ஆப் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் பிரசுரத்தின் நோக்கம் என தெளிவுற கூறுவது மகிழ்ச்சிக்குரியதே. அதே நேரத்தில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தும் ஒருவரும் மெரிட்டில் மருத்துவம் செல்லவில்லை என்ற ஆதங்கத்தில், எடுத்துக்காட்டு அட்டவணையில் நான்காவது பாடத்திற்கு 120 உதாரண மதிப்பெண் வழங்கி, மொத்த மதிப்பெண் 949 முதல் 957 வரை என்று பட்டியலிட்டுக் காட்டியிருப்பது, தரவரிசைப் பட்டியல் தயாரிப்பில் (RANK LIST) நான்காவது பாடத்தின் முக்கியத்துவத்தை மாணவருக்கு உணர்த்தத் தவறிவிட்டதாகவே தெரிகிறது. அட்டவணையைத் தவிர்த்திருக்கலாம் - அல்லது அதனை தயாரிப்பதில் மேலதிக கவனம்
செலுத்தியிருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.
உயிரியல் மற்றும் கணிதம் எடுக்கும் மாணவர்கள், பொதுவாக மருத்துவம் கிடைத்தால் அதற்கு, இல்லையென்றால் பொறியியல் என்ற நோக்கில்தான் அந்த இரு பாடங்களையும் எடுப்பார்கள். மருத்துவம் மட்டும் என்ற தெளிவான சிந்தனையில் உள்ளவர்கள் விலங்கியல் / தாவரவியல் பாடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்.
பொறியியல் மட்டும் என்ற சிந்தனையில் உள்ளவர்கள் பொதுவாக கணிதம் / கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்.
தங்கள் எடுத்துக்காட்டு அட்டவணைப் படி, நான்காவது பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் - கட் ஆப் மதிப்பெண்ணில் மயிரிழையில் மருத்துவ இடத்தை இழந்த மாணவர், நான்காவது பாடமான கணிதத்தில் கவனம் செலுத்தாமல் போயிருந்தால் அவரின் நிலை என்ன? நல்ல பொறியியல் கல்லூரிக்கும் போக முடியாத நிலை ஆகி விடாதா?
கல்விச் சேவையில் பல சமூக அமைப்புகள், தங்களால் முடிந்த பணிகளை ஆற்றுகின்றனர். ஒரு அமைப்பின் திட்டம் / செயல்முறை என்பது கண்டிப்பாக அந்த அமைப்பின் நீண்ட பரிசீலனைக்குப் பிறகே வெளியிடப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
சமூக அமைப்புகளால் / கல்வி ஆர்வலர்களால், பொதுத்தேர்வை நோக்கியிருக்கும் மாணவர்களுக்கு பொதுவாக வழங்கப்படும் அறிவுரைகள், மாணவ சமுதாயம் எவ்வாறு தனது நேரத்தை மேலாண்மை செய்யவேண்டும் (TIME MANAGEMENT) என்ற அடிப்படையில் இருக்கும்.
ஒரு நாளில், ஆங்கில பாடத்திற்கு இவ்வளவு நேரம் கொடு, மொழிப்பாடத்திற்கு இவ்வளவு நேரம் கொடு, உயிரியலுக்கு இவ்வளவு நேரம், இயற்பியலுக்கு இவ்வளவு நேரம், வேதியலுக்கு இவ்வளவு நேரம், கணிதத்திற்கு இவ்வளவு நேரம் என்ற அடிப்படையிலேயே அறிவுரைகள் இருக்கும்.
தங்கள் சுய கட்டுப்பாட்டினாலும், பெற்றோரின் மேற்பார்வையினாலும், பள்ளிக்கூடங்களின் ஒத்துழைப்பினாலும் - ஒவ்வொரு ஆண்டும், நூற்றுக்கணக்கான மாணவர்கள், அனைத்து பாடங்களுக்கும் நேரம் ஒதுக்கி, படித்து, நன்றாகத் தேர்வு எழுதி, முழு மாணவர்களாக தேர்ச்சி அடைந்து - தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் பயின்றார்கள் / பயின்று வருகிறார்கள் / இறைவன் நாடினால்
இனியும் பயில்வார்கள். இது சாத்தியம் இல்லாத விஷயம் அல்ல! சாதித்த பல காயலர்களும் உண்டு.
இவ்வேளையில் - அரசு மருத்துவ கல்லூரியிலும், சிறந்த பொறியியல் கல்லூரியிலும் காயல் மாணவர்கள் சேர - ரியாத் மன்றம் வெளியிட்டுள்ள பிரசுரம் / வழிகாட்டு, பொதுவாக மாணவர்களுக்கு வழங்கப்படும் அறிவுரைகளில் இருந்து பெரிதும் மாறுபடுகிறது. இந்தப் பிரசுர அறிவிப்பில் இருந்து பிறருக்கு மாற்றுக் கருத்து இருக்கும் என்பதை ரியாத் மன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன்.
தமிழக அரசு வகுத்துள்ள பாடத்திட்டங்களில் - பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 6 பாடங்கள் வழங்கப்படுகின்றன. அதில் ஆங்கிலப் பாடமும் உண்டு, மொழிப் பாடமும் உண்டு. இவை அம்மாணவனுக்கு - இலக்கியத்தை அறிமுகம் செய்யும், இலக்கணத்தை அறிமுகம் செய்யும், எழுத்துத் திறமையை அறிமுகம் செய்யும். பள்ளிக் கூடப் படிப்பினை முடித்து, கல்லூரி படிப்பைத் துவங்கவுள்ள மாணவனுக்கு இப்பாடங்களில் ஆர்வமும், தேர்ச்சியும் - வருங்காலங்களில் அவனை, பல்வேறு திறமைகளை கொண்ட, ஒரு முழு மனிதனாக உருவாக்கும்.
பாடத்திட்டங்களை வகுத்த அரசு, அவ்வயது மாணவர்களால் - முயன்றால், திட்டமிட்டால், அனைத்து பாடங்களையும் நன்றாக படித்து, தேர்வாக முடியும் - என்று கணித்தே வடிவமைக்கிறது.
இந்த நம்பிக்கையை ஒவ்வொரு ஆண்டும் தமிழகமெங்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உண்மையாக்கி வருகிறார்கள். அவ்வப்போது நம் காயல் மாணவர்களும் கூட.
நம் மாணவர்கள் - மருத்துவர்களாகவும், நல்ல கல்லூரியில் இருந்து வெளிவரும் பொறியாளர்களாகவும், இன்னும் பல துறைகளில் வெற்றி காண, கனவு காணாத கல்வி ஆர்வலர்கள் இருக்க முடியாது. கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் இதனையே தங்கள் பிரதான குறிக்கோளாக வைத்திருப்பார்கள்.
இந்தக் குறிக்கோளை அடைய, ஒரு மாணவனை - சிறந்த வகையில் நேரத்தைப் பயன்படுத்த சொல்லலாம், பொழுதுபோக்கை தியாகம் செய்யச் சொல்லலாம், கட் ஆப் மதிப்பெண் என்ற ஒரே குறிக்கோளுக்காக, பிற பாடங்களையும், அதில் பெறும் மதிப்பெண்களையும் தியாகம் செய்யச் சொல்வது சிறந்த வழிகாட்டுதலாக இருக்க முடியாது.
வாதத்திற்கு எடுத்துக்கொண்டால், உயிரியலில் 200 எடுத்து, இயற்பியலில் 200 எடுத்து, வேதியலில் 200 எடுத்து, ஆங்கிலத்தில் 70, மொழியில் 70, கணிதத்தில் 70 எடுத்து - மொத்தம் 810 மதிப்பெண்கள் பெற்றும் ஒரு மாணவன் மருத்துவனாகலாம். ஆனால் அதில் அந்த மாணவனுக்கு பெருமை உள்ளதா? அவனது பெற்றோருக்குப் பெருமை உள்ளதா? பள்ளிக்கூடத்திற்கு பெருமை உள்ளதா? அவனை ஊக்குவித்த சமூக அமைப்புகளுக்கு பெருமை உள்ளதா?
உலகளவில், தேசிய அளவில், மாநில அளவில் சாதனை புரிய எண்ணங்களை வளர்க்க வேண்டிய சூழலில் - மருத்துவக் கல்லூரியில் நுழைய / நல்ல பொறியியல் கல்லூரியில் நுழைய, மற்ற பாடங்களை விழுந்து, விழுந்து படிக்காதே, மூன்று பாடங்களுக்கு மட்டும் அதிக நேரம் கொடு என்ற தொணியில் அறிவுரை வழங்குவது - நம் மாணவ சமுதாயம் மீது நமக்கே நம்பிக்கை இல்லை என்று கூறத் தூண்டுகிறது.
தமிழகம் எங்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களால் சாதிக்க முடிந்த - ஏன் இஸ்லாமிய சமுதாய மாணவர்களால் சாதிக்க முடிந்த - இன்னும்
சொல்லப்போனால் கடந்த காலங்களில் நம் காயல் மாணவர்களாலும் சாதிக்க முடிந்த ஒரு காரியத்தை, நம் வருங்கால காயல் மாணவர்களால், சீரான முறையில் அனைத்து பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, சாதிக்க முடியாதா?
பன்னிரண்டாம் வகுப்பின் அனைத்துப் பாடங்களுக்கும், முறையாக நேரம் ஒதுக்கி, அனைத்துப் பாடங்களிலும் சிறந்த மதிப்பெண்கள் பெறமுடியாத மாணவர், மருத்துவ கல்லூரியில் சேர்ந்து, கடினமான மருத்துவப் பாடங்களை எவ்வாறு சமாளிப்பார்? பொறியியல் கல்லூரியில் சேர்ந்து, பொறியியல் பாடங்களை எவ்வாறு சமாளிப்பார்?
சகோதரர்களே, இதனை நீங்கள் விவாதமாக எடுத்துகொள்ளாமல், ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றமாக எடுத்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் - கட் ஆப் குறித்த விழிப்புணர்வும் வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது; இருக்கக் கூடாது. ஆனால், அந்தத் தூண்டுதல், அந்த மாணவனை அனைத்து வகையிலும் தலை சிறந்த மாணவனாக விளங்கத் தூண்டும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான கருத்து.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross