ஒரு துரோக வரலாறு Part-01 posted byIBN SAHIB (Dammam, Saudi Arabia)[16 March 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3314
கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு: ஒரு துரோக வரலாறு Part-01
1947-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15, இந்தியா விடுதலை பெற்றதும், பிரிவினையின் மூலம் பாகிஸ்தான் என்கிற நாடு உருவானது.அதனைத் தொடர்ந்து இந்திய முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. பிரிவினைக்கு காரணமான சங்பரிவார பாசிச சக்திகளின் சதி திட்டங்களை மறைத்து, முஸ்லிம்களே காரணம் என்றும் முஸ்லிம்களின் அரசியல் கட்சியான “முஸ்லிம் லீக்” தான் காரணம் என்றும் நாடு முழுவதும் முஸ்லிம் லீக்கை துடைத்தெறிய அப்போதைய பாசிச சிந்தனை ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலால் முஸ்லிம்களின் அரசியல் சக்தி சிதைக்கப்பட்டது. லீக்கின் தலைவர்கள் கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் இணைந்தனர். வட மாநிலங்களில் பல முக்கியத் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர்.
இதுபோன்ற கடுமையான நெருக்கடி மிகுந்த சூழலில் “முஸ்லிம் லீக்” என்ற இயக்கத்திலிருந்து யார் சென்றாலும் நான் ஒருவன் மட்டுமே மிஞ்சியிருந்தாலும் தனி நபராக வேனும் கட்சியை நடத்துவேன், என்று கூறி இந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாளெல்லாம் தொடர்ந்து போராடிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களை இவ்வேளையில் நினைவு கூர்வதும், நன்றி செலுத்துவதும், அவர்களது மறுமை வாழ்க்கை பெருமகிழ்ச்சி கொண்டதாக அமைந்திட சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் மீது கடமையாகும்.
விடுதலை அடைந்த இந்தியாவில் மூன்று அரசியல் கட்சிகள் மட்டுமே இருந்தன.
1) இந்திய தேசிய காங்கிரஸ்,
2) இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
3) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
இன்று தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டக் கட்சிகள் மட்டுமே 1400-ஐ தாண்டியுள்ளது.
இன்று தேர்தல் சின்னங்களாக இரட்டை இலை, உதய சூரியன், கை போன்றவை இருப்பது போன்று அப்போது “நிறங்கள்” சின்னமாக இருந்தன. காங்கிரஸ் சின்னம் ‘மஞ்சள்,’ முஸ்லிம் லீக் சின்னம் ‘பச்சை,’ கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் ‘சிகப்பு’ என்றிருந்தது. மஞ்சள் பெட்டி, பச்சை பெட்டி, சிகப்பு பெட்டிகள் வாக்குபதிவு மையத்தில் வைக்கப்படும். அதில்தான் மக்கள் வாக்களிப்பார்கள். அந்தளவுக்கு தனித்தன்மை வாய்ந்ததாக இந்திய முஸ்லிம்களின் அரசியல் இருந்தது.
1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் தமிழ்நாடு, “சென்னை மாகாணம்” என்ற பெயரில் கேரளத்தின் மலபார், ஆந்திராவின் திருப்பதி - கடப்பா, கர்நாடகாவின் சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது. சென்னை மாகாணத்தில் 29 தொகுதிகள் முஸ்லிம் வாக்காளர்களுக்கான தனித் தொகுதி யாக இருந்தது. 1946&ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காயிதே மில்லத் தலைமையில் இந்த 29 தொகுதிகளையும் முஸ்லிம் லீக் கைப்பற்றியது. மேலும் 7 மேல் சபை (எம்.எல்.சி) உறுப்பினர்கள் இருந்தனர்.
காயிதே மில்லத் அவர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகக் தேர்வு செய்யப்பட்டார். 1952 வரை இந்நிலை தொடர்ந்தது. பிறகு அரசியல் நிர்ணய சபையில் அப்போதைய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலின் சதியால் முஸ்லிம்களின் அரசியல் அதிகார உரிமை பறிக்கப்பட்ட சோக வரலாறு நடந்தேறியது. இதுவே இன்றைய இந்திய முஸ்லிம்களின் அவல நிலைகள் அனைத்திற்கும் மூலக் காரணம்.
காங்கிரஸின் துரோகத்தையும், பச்சோந்தி தனங்களையும் சகித்துக் கொண்டு மாற்று அரசியல் சக்தியை எதிர்நோக்கியிருந்த காயிதே மில்லத் அவர்கள் தமிழகத்தில் அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க முடிவெடுத்தார்.
திமுகவை தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி காங்கிரஸின் துரோக ஆட்சியை வீழ்த்திட, ராஜாஜியோடு அண்ணாவை இணைத்து கூட்டணி அமைத்தவர் காயிதே மில்லத் அவர்கள். 1967ல் அமைந்த அந்த கூட்டணியில் முஸ்லிம்லீக் பெற்ற தொகுதிகள் நான்கு மட்டுமே. துரோகத்தை வீழ்த்திட எண்ணிக்கைப் பற்றி கவலைப்படாமல் நான்கு மட்டுமே பெற்று மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது முஸ்லிம்லீக்.
திமுக அமைச்சரவை பதவியேற்றது; அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டே ஆண்டுகளில், 1969-ல் அண்ணா மரணமடைய கலைஞர் மு. கருணாநிதி முதல்வர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் ஏற்றார். இனி கலைஞரின் துரோக வரலாறு தொடங்குகிறது.
முஸ்லிம் சமுதாயத்தை கலைஞரின் கரங்களில் ஒப்படைத்தாரா காயிதே மில்லத்!
1972, ஏப்ரல்- 5 அன்று இறைவனடி சேர்ந்தார் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் அவர் மரணிக்கும் தருவாயில் கலைஞர் அவர்கள் காயிதே மில்லத் அவர்களை சந்திக்கச் சென்ற போது கலைஞரின் இரண்டு கரத்தையும் பிடித்துக் கொண்டு “முஸ்லிம் சமுதாயத்திற்கு, எவ்வளவோ செய்திருக்கிறீர்கள் அதற்கெல்லாம் நன்றியை கூறி இந்த சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்றார் என்று 35 ஆண்டுகளாக பொது மேடைகளில் பேசி வருகிறார் கலைஞர். இது எந்த அளவுக்கு உண்மை. கடைசி காலகட்டங்களில் கலைஞரோடு காயிதே மில்லத் அவர்களின் உறவு எப்படி இருந்தது. ஒரு சில வரலாற்று உதாரணங்கள்.
1971-ல் நடந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்தது. முஸ்லிம் லீக் 8 தொகுதிகளை, பெற்று தராசு சின்னத்தில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
1971 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்பித்த முதல்வர் கலைஞர் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். விடுதலைப் பெற்றதிலிருந்து ஓமந்தூர் இராமசாமி ரெட்டியின் ஆட்சி தொடங்கி அறிஞர் அண்ணா ஆட்சி வரை 24 ஆண்டுகாலமான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட மாநிலமான தமிழ்நாடு முதன் முதலாக கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில்தான் “சாராயக் கடைகள் திறக்கப்படும்” என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதனை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். “எதிர்கால தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து விடும்; சாராயக் கடையை திறக்காதீர்கள்” என்று வேண்டினார். சட்டமன்றத்தில் அப்போதைய முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்த திருப்பூர் மொய்தீன் அவர்கள் தனது கட்சியின் எதிர்ப்பை சட்டமன்றத்தில் வலுவாகப் பதிவு செய்தார். காமராஜர், ராஜாஜி, மா.பொ.சி, கம்யூனிஸ்ட் கட்சிகளின், எதிர்ப்புகளை எல்லாம் மீறி சாராயக் கடையைத் திறந்தார் கலைஞர்.
காயிதே மில்லத் கோபமானார். சாராயக் கடையால் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் பாதிக்குமே என்று தமிழ் மொழிக்காக அரசியல் நிர்ணய சபையில் குரல் கொடுத்த தலைவன் தமிழ்ச் சமுதாயத்திற்காக குரல் எழுப்பினார். கூட்டணிக் கட்சி என்று பாராமல் கண்டனக் குரல் எழுப்பினார். மாநில செயற்குழுவைக் கூட்டி தமிழகம் தழுவிய அளவில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டார். காயிதே மில்லத் அவர்களும் பல கூட்டங்களில் பங்கு கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
தமிழர்களைப் பற்றி கவலைப்படாத தமிழினத் தலைவர் கலைஞர் “மதுவிலக்கு ரத்து விளக்க கூட்டங்கள் நடத்தி முஸ்லிம் லீக்கையும், காயிதே மில்லத்தையும் கடுமையாகச் சாடியது மட்டுமல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) பற்றிப் பேசியும், முஸ்லிம் நாடுகளை கொச்சைப்படுத்திப் பேசியும் சமுதாயத்தை இழிவுபடுத்தினார். அதே காலகட்டத்தில் இன்னொரு சம்பவம் நடைபெற்றது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்க காயிதே மில்லத்திடம் பரிந்துரை கேட்டிருந்தார். பல வலியுறுத்தலுக்குப் பிறகு தனது கட்சியினரின் பட்டியலைக் கொடுத்தார் காயிதே மில்லத்.
ஆனால், கலைஞர் முஸ்லிம் லீக்கின் ஒற்றுமையைக் குலைக்க சதி செய்தார். காயிதே மில்லத் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு வக்ஃப் உறுப்பினர் பதவி தராமல், தனக்கு சாதகமான முஸ்லீக் லீக்கைச் சேர்ந்த இருவருக்கு பதவி கொடுத்தார் கலைஞர்.
சுயமரியாதைக்காகவும், தன்மானத்திற்காகவும் தனித் தன்மைக்காகவும் வாழ்ந்த அந்தத் தலைவன் உச்சக் கட்ட ரோஷம் கொண்டார். “கலைஞரே! கூட்டு சேர்ந்ததால் குறைத்து மதிப்பிட வேண்டாம். எதையும் அடமானம் வைத்ததாக எண்ண வேண்டாம்” என்று சுயமரியாதை முழக்கமிட்டார்.
என்னுடைய கட்சியில் யாருக்கு எந்த பொறுப்பு, பதவி கொடுக்க வேண்டும் என்பது எங்களது உரிமை. இதனை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்று கலைஞர் தந்த வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் காயிதே மில்லத். இதனால் திமுக, முஸ்லிம் லீக் உறவு சீர்குலைந்தது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் துறைமுகம் பகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. இதற்கு முஸ்லிம்லீக் ஆதரவு இல்லையென்றால் திமுக தோற்பது உறுதி என்ற நிலையில் ஆளும்கட்சி இடைத்தேர்தலில் தோற்றால் திமுகவுக்கு சரிவு என்பதால் அப்போதைய அமைச்சர் என்.வி. நடராஜனை அனுப்பி சமாதானம் பேசினார் கலைஞர். வாக்குப் பதிவுக்கு ஒருநாள் உள்ள நிலையில் திமுகவுக்கு ஆதரவளித்தார் காயிதே மில்லத்; திமுக வெற்றியும் பெற்றது.
இந்தக் கருணாநிதியிடம் முஸ்லிம் சமுதாயத்தை ஒப்படைத்திருப்பாரா காயிதே மில்லத்? இதுபற்றி அப்துல் ஸமத் அவர்களிடம் விசாரித்து அவருடைய 60 ஆண்டுகால உற்ற நண்பர் துபாஷ் சி.எஸ். தாஜூதீன் அவர்கள் அதனை தனது “சிராஜில் மில்லத் அப்துல் ஸமது” என்ற நூலில் கூறியுள்ளதைப் பாருங்கள்.
“சிராஜுல் மில்லத் (அப்துல்சமது) மரணத்திற்கு முன்னர் பீட்டர்ஸ் ரோடு அலுவலகத்துக்கு வந்திருந்தபோது, நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். காயிதே மில்லத் மரணத்துக்கு முன்னர் நானும், விடிய விடிய அவர்களின் அருகிலேயே நின்று கொண்டிருந்தேன். அவர் மூடிய கண்களைத் திறக்கவில்லை. மூச்சு மட்டும் சீராக ஓடிக் கொண்டிருந்தது. அருகிலிருந்த டாக்டர் யு. முஹம்மத்தின் துணைவியார் திருமறையில் இருந்து வசனங்களை மெல்லிய குரலில் ஓதிக் கொண்டிருந்தார்.
காயிதே மில்லத் செவிகள் வேத வரிகளை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. கண்கள் பளிச்சென்று ஒருமுறை திறந்து மூடின. அந்த சமயம் திமுக தலைவர் கலைஞர் டாக்டர். மு. கருணாநிதி தம் பரிவாரங்களோடு, காயிதே மில்லத் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தார். ஒரு நிமிட நேரம் பரபரப்பு நிலவியது. அப்துல் ஸமது சாஹிப், காயிதே மில்லத் காதருகில் குனிந்து, கலைஞர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்றார். கலைஞர் குனிந்து முகத்தருகே நின்று “அய்யா” என்றார், அல்லாஹ்வின் அழைப்பை எதிர்பார்த்திருந்த அந்த நேரத்தில் அவருடைய உதடுகள் கலிமாவை மொழிந்தன.
இந்த சமுதாயத்தைத் தங்கள் கையில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறேன் என்று தலைவர் அவர்கள் சொன்னதாகவும், சிலர் அவ்வாறு விளக்கம் அளித்ததாகவும் ஒரு செய்தி பரவியது. அது உண்மையா” என்று? கேட்டபோது அப்துல் ஸமது முகத்தில் பொருள் புரியாத புன்னகை ஒன்று தவழ்ந்தது. அதுதான் அவருடைய பதில்.
அரசியல்வாதியாகவும், ஆத்மீக ஞானியாகவும் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் “சக்கராத்” நேரத்தில் இறைவனிடம்தான் இந்த சமுதாயத்தை ஒப்படைப்பதாக உள்ளத்தில் பிரார்த்திப்பார்களே தவிர, கலைஞரிடமா ஒப்படைப்பதாகச் சொல்லியிருப்பார்கள் என்று யாரும் சிந்தித்துப் பார்க்கவில்லை என்பது ஆச்சரியம் தான்” என்று எழுதி வைத்துள்ளார் துபாஷ்.
காயிதே மில்லத் மட்டுமல்ல சிராஜுல் மில்லத், அப்துல் ஸமத் ஸம்ஸிரே மில்லத் அப்துல் லத்தீப் உள்ளிட்ட தலைவர்கள் யாருமே கலைஞர் கருணாநிதி செயல்பாட்டால் அவருக்கு எதிர்நிலை எடுத்தும், கருத்து முரண்பட்ட நிலையிலேயே மரணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காயிதே மில்லத் அவர்களின் மரண நேரத்தில் உடன் இருந்தவர்களில் வாக்குமூலம் இப்படியிருக்க, ஒரு உன்னத தலைவரின் மரணத்தில் கூட முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவது என்பது கலைஞரால் மட்டுமே முடியும்.
மேலும் காயிதே மில்லத் அவர்களுக்குப் பிறகு வந்த தலைவர்கள் உரிமைகளுக்காக போராடமல் வலிமையை இழந்தனர். இதனைப் பயன்படுத்திய கலைஞரின் பேனா முனையும், அவருடைய நாவன்மையும், முஸ்லிம் சமுதாயத்தை வசீகரிக்கத் துவங்கியது.
‘சிறுவனாய் இருக்கும்போதே ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையும் இன்னொரு கையில் “குடியரசு பத்திரிக்கையும் விற்றவன் நான்” “முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்றுச் சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்” என்றார்.
மீலாது மேடைகளில் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் ஓங்கி முழங்கினார். முஸ்லிம்கள் மெய்மறந்தனர். முஸ்லிம்களின் இயக்கம் திமுகதான் என்றனர். முஸ்லிம்லீக் என்ற தனித்தன்மை வாய்ந்த பேரியக்கம் தனது ஆதரவு தளத்தை தொலைத்தது.
தாயின் மடியில் இருக்கும் குழந்தை கிலுகிலுப்பை ஆட்டும் சத்தத்தின் மீது ஆசைப்பட்டு, கிலுகிலுப்பை ஆட்டுபவரிடம் சென்று விடுமே. அதுபோல் சமுதாயப் பேரியக்கத்தை விட்டு வார்த்தை ஜாலம் எனும் கிலுகிலுப்பை ஆட்டிய கருணாநிதியிடம் சென்றது சமுதாயம்.
திமுகவில் இருந்து வெளியேறி மக்கள் பேராதரவோடு அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். அவர் 1977 முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்தபோது கலைஞரோடு முரண்பட்ட முஸ்லிம்லீக் தலைவர் அப்துல் ஸமத் எம்.ஜி.ஆரை ஆதரித்தார்.
இதுபற்றி செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பி னார்கள்: முஸ்லிம் லீக் கட்சியினர் சமரசத்துடன் வைத்துக் கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்களே?
கருணாநிதி பதில் : “அமைப்பு ரீதியாக உறவு இல்லாவிடினும், முஸ்லிம் சமுதாயத்திற்கும், திமுகழகத்திற்கும் இடையே உள்ள அன்பும், உறவும் என்றும் நிலைத்திருக்கும், அந்த சமுதாயத்துடன் நாங்கள் கொண்டுள்ள தோழமை தேய்பிறை அல்ல! வளர்பிறை!” என்றார். சமுதாயத்திற்கும் - சமுதாய இயக்கத்திற்குமான உறவை விட, திமுகவிற்கும் சமுதாயத்திற்குமான உறவே கெட்டியானது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிபடுத்தின.
1977 சட்டப்பேரவைத் தேர்தல் எம்.ஜி.ஆர் அவர்கள் முஸ்லிம்லீக்கிற்கு, இதுவரை இல்லாத தொகுதிகளை அதிகமான சீட்டுகளை ஒதுக்கினார். 10 தொகுதிகளை வழங்கினார். ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார். முஸ்லிம்லீக் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
எம்.ஜி.ஆரின் மக்கள் பேராதரவு அலையில் கலைஞர் சிக்கித் திணறினார். திமுகவில் இருந்த முன்னணி தலைவர்கள் அதிமுகவில் ஐக்கியமானார்கள். ஆனால் முஸ்லிம் சமுதாயம் கலைஞரையே தனது தலைவனாக நினைத்தது.
கருணாநிதி தோல்வி பள்ளத்தாக்கில் விழுந்து கிடந்த போதும் 13 ஆண்டுகால வனவாசம் என்பார்களே அதுபோன்று 1977 தொடங்கி 1988 எம்.ஜி.ஆர் மரணமடையும் வரை அவரைத் தாங்கிப் பிடித்தது சமுதாயம்.
எம்.ஜி.ஆரிடம் இருந்த மக்கள் எழுச்சி கண்டு கலைஞர் கருணாநிதி மிரண்டு கிடந்த நிலையில் காயல்பட்டணத்தில் எம்.ஜி.ஆரின் மீது செருப்பு வீசும் அளவுக்கு கலைஞர் பாசம் முஸ்லிம்களிடத்தில் மேலோங்கி இருந்தது. இதுபோன்ற செயல்களால் முஸ்லிம்களுக்கு எதிரானநிலை எடுக்கும் சூழல் எம்.ஜி.ஆருக்கு உருவானது.
இந்தளவிற்கு கண் மண் தெரியாத பற்று என்பார்களே அப்படியிருந்த சமுதாயத்திற்கு கலைஞர் செய்தது என்ன?
-இன்ஷா அல்லாஹ் தொடரும்...
நன்றி: www.tmmk.in
Moderator: பிற வலைதளங்களிலிருந்து கருத்துக்களை மேற்கோள் காட்ட விரும்புவோர், அந்தந்த வலைதளங்களிலேயே பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் அவற்றின் இணைப்புகளை (links) மட்டும் அனுப்பி வைத்தாலே போதுமானது. முழு தகவல்கள் இப்பகுதியில் இனி பிரசுரிக்கப்படாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross