Re:...அல்லாஹ் அவன் நாடியவர்களை உயர்த்துவான்- அவன் நாடியவர்களை கேவலப் படுத்துவான் posted bymackie noohuthambi (chennai)[08 March 2014] IP: 124.*.*.* India | Comment Reference Number: 33595
சென்னை கடற்கரையில் நடந்த வாழ்வுரிமை மாநாடு அது.பீஜே அவர்கள் ஒரு இஸ்லாமிய புரட்சி தலைவராக அடையாளம் காட்டப்பட்ட காலம் அது..
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் முஸ்லிம் மக்களிடம் அளிக்கப்போவதாக அவர் பிரகடனப் படுத்தியபோது ஒரு மறுமலர்ச்சியை நோக்கி, விடிவெள்ளி தெரிவதாக எண்ணி, விடியலை தேடி விடலைப் பருவ இளைஞர்கள் அவர் பக்கம் அலை அலையாக திரண்டு சென்ற ஒரு கனாக் காலம் அது.
அந்த மாநாட்டிலே புரட்சி தலைவி அறிவிக்கிறார்கள். BJP யுடன் கூட்டணி வைத்த தவறை நான் உணர்ந்து கொண்டேன், இனி ஒருபோதும் அவர்களுடன் எந்த நிலையிலும் கூட்டு சேரமாட்டேன், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக பெற்றுத் தருவேன் என்று அவர்கள் முழங்கியபோது இஸ்லாமிய சமுதாயத்துக்கு பீஜே மட்டுமல்ல அம்மா அவர்களும் ஒரு விடிவெள்ளியாக காட்சி தந்தார்கள்.
கும்பகோணம் குலுங்கியது உண்மை தஞ்சாவூர் நாம் தலை நிமிர்ந்து நிற்க உதவியது உண்மை. ஆனால் காலப் போக்கில் இவை நிஜமல்ல, கதை என்று முஸ்லிம்கள் உணர தலைப்பட்டனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் பல பிரிவாக பிரிந்து மனித நேய மக்கள் கட்சி என்று ஒரு அரசியல் கட்சியாக உருமாறியது.
இப்போது அரசியலிலும் அவர் நிலைப்பாடு அவரது முகமூடியை அம்பலப் படுத்துகிறது. அம்மா அவர்கள்,காங்கிரசையும் திமுகவையும் எல்லாக் கூட்டங்களிலும் தாக்கி மத்தியில் காங்கிரஸ் வரக் கூடாது என்கிறாரே தவிர மதவாத பிஜேபி யும் வரக்கூடாது என்று அவர் முழங்கியிருந்தார் என்றால், அவரது மூன்றாவது அணிக்கு நாம் ஆதரவு அளிக்கலாம். ஆனால் கருத்து கணிப்புக்கள்படி நரேந்திர மோடி பிரதமராகும் வாய்ப்புடன் பிஜேபி அரியணை ஏறக் காத்திருக்கிறது. அந்த நிலை ஏற்படும்போது தனியாக ஆட்சி அமைக்க முடியாமல் தவிக்கும்போது புரட்சி தலைவி கைகொடுத்து உதவுவார்கள் இந்த பிஜேபி-அதிமுக கூட்டணி ஆட்சி மத்தியில் அமையும்.
பீஜே அவர்கள் முஸ்லிம்களுக்காக அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறாரா அல்லது தனக்கு எதிரான இஸ்லாமிய அமைப்புகள் திமுகவின் கூட்டணியில் இருப்பதால் நாம் அதற்கு எதிரணியில் இருக்க வேண்டும் என்று நினைத்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறாரா அல்லது அம்மா அவர்கள் தேர்தல் கூட்டங்களில் சொல்லிவருவதுபோல் இஸ்லாமிய அமைப்புக்கள் அதிக ஒதுக்கீடு கேட்பதை பரிசீலனைக்கு அனுப்பி இருப்பதாக சொல்கிறாரே அதை நம்பி அவருக்கு ஆதரவு தருகிறாரா.
அவரது வாக்குறுதிகள் எவ்வளவு நம்பகத்தன்மை உள்ளவை என்பதை ஏற்கெனவே அவருடன் கூட்டணி அமைத்து நொந்து நூலாகி படுத்த படுக்கையாக கிடக்கும் வாஜ்பாயை கேட்டுப் பாருங்கள். புழுதியாக பறக்க விடப்பட்ட புரட்சிப் புயலை வைக்கோவை கேளுங்கள் ஆணடவனுடன் கூட்டு மக்களுடன் கூட்டு என்று சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் அம்மாவுடன் கூட்டு சேர்ந்து சிதறி சின்னாபின்னப் பட்டு நிற்கும் விஜயகாந்தை கேளுங்கள். இறுதியில் கொள்கைகளே தங்கள் லட்சியமாகக் கொண்டு வாழும் காம்ரேடுகள் அவமானப் பட்டு அர்த்த ராத்திரியில் பெட்டி படுக்கையுடன் வெளியேறிய அவல நிலையை பாருங்கள்.
ஒருகாலத்தில் உயரத்தின் உச்சத்தில் இமயமலையாக நின்ற பீஜே இப்போது அந்த இமயமலையின் அடிவாரத்தில் அடையாளம் தெரியாமல் சிதறிக் கிடக்கின்ற கூழான் கற்களைப் போல் ஆகிவிட்டார்களே என்று எண்ணும்போது, அல்லாஹ்வின் திருமறை வசனம் என் கண்முன் வந்து நிற்கிறது.
"அவன் நாடியவர்களை உயர்த்துவான், அவன் நாடியவர்களை கேவலப் படுத்துவான், அவன் நாடியவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுப்பான் அவன் நாடியவர்களிடமிருந்து அதனை பறித்துக் கொள்வான். அவன் மிக்க சக்தி வாய்ந்தவன்" .
அல்லாஹ்வின் வல்லமையை யார்தான் கணக்கிட்டு சொல்ல முடியும் அல்லாஹ் மிக அறிந்தவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross