நம்ப முடியவில்லை... நெஞ்சம் கனக்கிறது! posted byS.K.Salih (Kayalpatnam)[17 December 2015] IP: 116.*.*.* India | Comment Reference Number: 42466
இச்செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை... இவர் நல்ல மனதுக்கு இன்னும் பல ஆண்டுகள் பணியாற்றுவார் என ஆவலோடு எதிர்பார்த்திருந்த ஏராளமான காயலர்களுள் நானும் ஒருவன். இறை நாட்டம் வேறு வகையில் அமைந்துவிட்டது!
நண்பர் ஹாமித் ரிஃபாய் சொன்து போல, மிகவும் பணிவானவர் அவர். ஓர் அரசு அதிகாரி / ஊழியர் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்பதற்கு முழு இலக்கணமாகத் திகழ்ந்தவர். எனது வாழ்வில் நான் அரிதாகப் பார்த்த - விரல் விட்டு எண்ணும் அளவிலுள்ள அரசு அதிகாரிகள் வெகு சிலரில் இவர் ஒரு மணிமகுடம்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இணையதள சேவையைத்தான் பல்லாண்டுகளாகப் பயன்படுத்தி வந்தேன். அன்றாடம் எக்கச்சக்கமான குறைகள்... என்றாலும் இவர் முகத்தை முறித்துக்கொண்டு அதிலிருந்து வெளியேறுவது ஏதோ என் சொந்த அண்ணனைப் பகைத்துக்கொள்ளும் உணர்வை எனக்குத் தந்ததால் அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன். (அவர் வழியிலேயே பணியாற்றி பணி நிறைவும் பெற்ற நம்பிராஜன் அய்யா அவர்களிடமும் என்னால் வெட்டிக்கொள்ள இயலவில்லை. அவரது பணி நிறைவு நெருங்கிய காலத்தில்தான் - வேறு வழியின்றி நான் தனியார் நிறுவனத்தை நாட வேண்டியதாயிற்று!)
ஜெயக்கொடி சாரின் மரணச் செய்தியைக் கேள்வியுற்றதும், அவரது உடல் வைக்கப்பட்டுள்ள நடுநாலுமூலைக்கிணறு கிராமத்திற்குள் இன்று காலையில் வேக வேகமாகச் சென்றேன். (அங்கு செல்லும் முதல் காயலன் நானாகத்தான் இருப்பேன் என்று நினைத்துக்கொண்டு!) அங்கோ, எனக்கு முன்பாக ஏராளமான காயலர்கள் அவரது உடலைப் பார்த்துவிட்டு, கலங்கிய கண்களோடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அத்தனை பாசமானவர் இந்த ஊர் மக்கள் மீது!
ஒவ்வொரு வீட்டின் தொலைபேசி எண்ணும் அவரது நுனிநாக்கில் நிற்கும். யாராவது அவரை தொலைபேசியில் அழைத்தால், தெரிந்தவர் எனில் மரியாதையுடன் பெயர் கூறி விசாரித்துக்கொள்வார். பெயர் தெரியாவிட்டாலும், குரலைக் கேட்டதும், “சார், 280716 வீட்டுக்காரர்தானே...? இப்ப பார்த்துடுறேன் சார்” என்பார். அரசு அதிகாரிகள் ஒப்புக்குச் சொல்லும் சொல்தானே என நாம் அலட்சியமாக இருக்கும் நிலையில், ஐந்தே நிமிடத்தில் துணையாட்களுடன் நம் வீட்டுக் கதவைத் தட்டுவார்.
அவர் பதவி உயர்வு பெற்று, இந்த ஊரை விட்டும் பிரிந்தபோது, என் மனது கேட்கவில்லைதான்! ஆனாலும் அவரது வளர்ச்சியை வரவேற்காதவனாகி விடக்கூடாதே என்ற கவலையில், வேறு வழியின்றி வாழ்த்தினேன்.
இத்தனை சீக்கிரத்தில் எல்லோரது கண்களையும் குளமாக்குவார் என்று நான் கடுகளவும் எதிர்பார்க்கவில்லை.
(அரசு அதிகாரியாக) இவர் போல் ஒருவர் கிடைப்பதெல்லாம் குதிரைக் கொம்பான இக்காலகட்டத்தில், இவரது இழப்பை கனத்த இதயத்துடன் பொருந்திக்கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை; எமதூர் மக்களுக்கும்தான்!
அண்ணன் ஜெயக்கொடி அவர்களின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தார் யாவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, உங்கள் துக்கத்தில் அடியேனும் பங்கேற்கிறேன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross