ஆமாம், இது ஒரு செயற்குழு கூட்டமட்டுமல்ல, ஒரு மினி பொதுக்குழு கூட்டமாகத்தான் காட்சியளித்தது. பலநூறு மையில்களுக்கப்பாலிருந்து தங்களுடைய வார விமுறை நாளையும் தியாகம் செய்து,யான்போவில் நமது செயற்குழு நடத்தப்பட வேண்டும்,அங்குள்ள காயல் நெஞ்சங்களோடு கலந்து சங்கமிக்க வேண்டும் என்ற தமதூர்மக்களின் மீதுள்ள உள்ளன்பின் மேலீட்டால் வந்து குவிந்த ஜித்தா சகோதரர்களை நான் வாழ்த்தி வரவேற்றேன்!.
உள்ளமகிழ் உல்லாசத்தில் திளைத்த எனக்கு உண்மையில் வார்த்தைகள் வரவில்லை,வாயடைத்து பிரமித்தவனாக பேரானந்தத்தில் மூழ்கியவன்தான், நிகழ்ச்சி நிறைவில்தான் சுயஉணர்வையடைந்தேன்!
நம் காயல் நகர ஏழை,எளிய மக்களின் இன்னல்கள் இனி இல்லாமலாகிட, எம்மால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்வோம் என்ற சவாலுடன் இயங்கிக்கொண்டிருக்கின்ற எமது இயக்கம் ,ஏழைகளின் துயர்துடைப்பது மட்டுமல்ல,எளிய இயலாத நோயாளிகளுக்கும்,ஏழை மாணாக்களுக்கும், வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் வரியவர்களுக்கும் எந்த அளவிற்கு உதவிட முடியுமோ அந்த அளவிற்கு உதவியளிக்க, உன்னத உள்ளத்தோடு வாரியிறைத்த பேருதவியை புண்ணிய மனதுடன் பங்கிட்டு கொடுக்கக்கூடிய தீர்மானவடிவம் அன்று நிறைவேறியது!
இந்த தீர்மானங்கள் எப்படியெல்லாம் நிறைவேறியது தெரியுமா? நம் இயக்கத்திலிருந்து ஒதுக்கிய உதவித்தொகையை ஒரு குடும்பத்திற்கு ஒதுக்கியளிக்கும் பொழுது, அங்கிருக்கும் ஓர் இதயம், இதுபோக என்னுடைய தனிப்பட்ட உதவியாகிய இத்தொகையையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று உளமுடன் முன்வந்து கூறுகின்ற வார்த்தைகளின் ஓசைகள் வரிசையாக பலரிடமிருந்து வந்தவண்ணமிருந்த அந்த கருணை மழையில் நனைந்தவர்களாகத்தான் அன்றைய நிகழ்வுகளை நிறைவுசெய்தோம்!
அங்கு வந்திருந்த வெளியூர் சிறப்பழைப்பாளர்கள் உள்ள மகிழ்ச்சியின் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள், தம்மூர் மக்களுக்கு உதவிட இப்படியொரு போட்டாபோட்டியா? இவர்கள் அனைவர்களுக்கும் இறைவன் ரஹ்மத்தை சொரிந்தருள்வானாக என்று துவா செய்தார்கள்!
ஜித்தா சகோதர்களை வாஞ்சையுடன் வரவேற்று, விருந்து உபசாரம் முதல் அத்தனை தேவைகளையும் தேனீக்களைவிட சுறுசுறுப்பாக செய்த "காயல் ஹவுஸ் " நெஞ்சங்களைத்தான் எப்படி பாராட்டுவது! அத்தனை செலவுகளுக்கும் அனுசரணை அளிக்க எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்று விண்ணப்பித்த இதயங்களுக்குத்தான் எப்படி நன்றி சொல்வது!
மொத்தத்தில் இது ஒரு அமைப்பின் கூட்டமாக கூடியதல்ல, ஒரு குடும்ப சரிதமாக கூடியது, ஒரு தாயிவயிற்று பிள்ளைகளாய் பாசத்துதுடன் பின்னிப்பிணைந்து உல்லாச கடலில் உறைந்து விட்டோம், கரைந்துட்டோம்.எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ஒற்றுமையையும், உதவிடும் உயரிய பண்புகளையும் நம்முடைய எல்லாக்காலங்களிலும் பயனாக்கித்தந்தருள்வானாக ஆமீன்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross