இன்று காலையில் நமதூர் பெரிய குத்பா பள்ளியில் ஒரு ஜனாஸாவை அடக்கிவிட்டுத் திரும்பியபோது, நல்லடக்கச் செலவினங்கள் தொடர்பாக ஒரு விவாதம் வாட்ஸ்அப் குழுமங்களில் ஓடிக் கொண்டிருப்பதாக அறிந்து, என்னிடம் வாட்ஸ்அப் இல்லாததால், அதை வைத்துள்ளவர்கள் மூலம் பார்த்து அறிந்துகொண்டேன்.
உடனடியாக, சகோதரர் எஸ்.கே.ஸாலிஹ் இடம் இதுகுறித்த எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி, “நானும் பல முயற்சிகளை மேற்கொண்டு விட்டேன். இதுவரை எந்தப் பயனையும் காணவில்லை. எனவே, நீங்கள் உங்கள் எழுத்தின் மூலமாவது விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என்று கேட்டுக்கொண்டேன்.
சம்மதித்துச் சென்றவர், சிறிய வாசகத்தைப் பதிவிடுவார் என்று பார்த்தால், ஒரு கட்டுரையையே தந்துவிட்டார்.
சரி, நான் இன்று பெரிய குத்பா பள்ளி மையவாடியில் மய்யித்தை அடக்கிய பின், அங்குள்ள மக்களிடையே பேசியதை அப்படியே கீழே தருகிறேன்:-
ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்துவிட்டால், அடுத்தடுத்துச் செய்ய வேண்டிய காரியங்கள் குறித்து எதுவுமே புரியாமல் - கவலையில் மரணித்தவரின் குடும்பத்தார் எதையும் கவனித்துச் செய்ய முடியாத நிலையில் இருப்பார்கள். அப்படியான நேரங்களில், அந்த மய்யித்தை அடக்கும் ஜமாஅத் நிர்வாகத்தின் சார்பில், அவர்களது சார்பில் நின்று பொறுப்பேற்று காரியங்களைச் செய்து கொடுக்க வேண்டியது நமது தார்மிகக் கடமை.
நமதூரில் 32 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றுள் மையவாடிகளைக் கொண்ட பள்ளிவாசல்கள் 18. இந்த 18 பள்ளிகளிலிருந்தும் தலா இரண்டே பேர் இந்த நல்லடக்கப் பணிகளைத் தெரிந்துகொண்டு, செய்திட முன்வந்தாலே நமதூரில் 36 பேர் இதற்காகக் கிடைப்பார்கள். அவர்களைக் கொண்டு தங்குதடையின்றி நல்லடக்கக் காரியங்களைச் செய்து, மரணித்தவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கலாம்.
இதன் நன்மையை உணர்ந்திருந்தால் இதற்குத்தான் போட்டி போட வேண்டும். ஆனால் பரிதாபம்! 18 வார்டுகளுக்கும் கவுன்சிலராய் நிற்பதற்கு நான் நீ என போட்டி போடும் மக்கள், இதுபோன்ற நற்காரியங்களுக்கு நேரில் சென்று அழைத்தாலும், தலைமறைவாகி விடுகின்றனர்.
இதுபோன்று பொறுப்பெடுக்க அந்தந்தப் பகுதிகளில் சமூக ஆர்வலர்களாக யாரும் முன்வராத காரணத்தால்தான் - கட்டுரையில் குறிப்பிட்டுள்ள படி, நேற்று நடைபெற்ற நல்லடக்கத்தில் 7,560 ரூபாயும், இன்று நடைபெற்ற நல்லடக்கத்தில் 5,800 ரூபாயும் காண்பிக்கப்பட்டுள்ளது. வித்தியாசம் 1,760 ரூபாய். இந்தத் தொகை வசதியுள்ளவர்களுக்கு ஒன்றுமே இல்லை. ஆனால் வசதியற்றவர்களுக்கோ சுமார் 15 நாட்கள் வாழ்க்கைச் செலவைப் பூர்த்தி செய்யும்.
இந்தப் பிரச்சினையை யார் கையிலெடுப்பது? பூனைக்கு யார் மணி கட்டுவார்?
இங்கு எல்லா ஜமாஅத்துகளைச் சேர்ந்த - எல்லாக் கொள்கைகளைச் சேர்ந்தவர்களும் வந்திருக்கின்றீர்கள். பலமுறை நானும் எல்லா ஜமாஅத்துகளையும், பொதுநல அமைப்புகளையும், ஐக்கியப் பேரவையையும் தொடர்ந்து வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட போதிலும் இதுவரை எந்தப் பயனும் கிடைக்கவில்லை.
இப்போது இறுதியாக உங்கள் அனைவரையும் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்...
இதுபோன்ற மரண நிகழ்வுகளில், அந்தந்த ஜமாஅத்துகள் பொறுப்பெடுத்துக் கொண்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட குடும்பத்தாருக்கு உதவியாக இருக்கும். எனவே, இனியேனும் காலம் தாழ்த்தாமல் இதுகுறித்து கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும், இதுகுறித்து ஐக்கியப் பேரவையைத் தொடர்ந்து வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கத் தூண்டுமாறும் இங்கு வந்திருக்கும் அனைத்து ஜமாஅத்துகளைச் சேர்ந்த மக்களாகிய உங்களை நான் அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.
இதைச் செய்வது ஈருலகிலும் நமக்கு நிறைவான நன்மையைப் பெற்றுத் தரும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்திய மேலான சுன்னத்தைப் பின்பற்றிய பாக்கியசாலிகளாக நாம் ஆவோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ் அதற்கு அருள் புரிவானாக, ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross