தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது.
கடந்த மார்ச் மாதம் 4 ஆம் தேதி தொடங்கிய பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள், ஏப்ரல் 1 ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், முடிவுகள் இன்று காலை வெளியிடப்படும் என்று, அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவித்திருந்தது. அதன்படி தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.31 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை, டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்படுகிறது.
மாணவ-மாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து தேர்வு முடிவை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம்.
முடிவை தெரிந்துகொள்ளும் இணையதள முகவரிகள் வருமாறு:-
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
விடைத்தாள் நகல், மறுகூட்டல்: விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் செவ்வாய்க்கிழமை (மே 17) மற்றும் புதன்கிழமை (மே 18) ஆகிய இருநாள்கள் விண்ணப்பிக்கலாம்.
தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: பிளஸ் 2 தேர்வு முடிவை மதிப்பெண்ணுடன் பதிவிறக்கம் செய்யும் மாணவர்கள், அதில் தங்களது பள்ளி தலைமையாசிரியர் சான்றொப்பத்தைப் பெற்றோ அல்லது அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியின் சான்றொப்பத்தைப் பெற்றோ பயன்படுத்தலாம்.
மேலும், மாணவர்கள் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை 19-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மே 21-ஆம் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த, தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கும் பி.இ. உள்ளிட்ட தொழில் சார்ந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்கவும் தற்போதைக்கு தாற்காலிகச் சான்றிதழ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவல்:
தினமணி |