சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நல மன்றம் & காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் ஆகியன இணைந்து, கடந்த கோடை விடுமுறையின்போது, மாணவ-மாணவியருக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி தொடர் வகுப்புகளை நடத்தி முடித்துள்ளன. இவற்றில் திரளான மாணவ-மாணவியர் பங்கேற்றுப் பயன்பெற்றுள்ளனர். இதுகுறித்து, இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
தற்போதைய கால கட்டத்தில் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆங்கிலம் பேசக்கற்றுக் கொள்வதென்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆங்கிலம் சரளமாக பேசத் தெரியாததால் கடந்த தலைமுறையினர் படும் பாட்டையும்,இன்றைய தலைமுறையினர் படும் பாட்டையும் நாமறிவோம். அது மட்டுமல்ல ஏராளமான மாணவர்கள் தமக்குள் திறமையிருந்தும் ஆங்கிலம் பேசத்தெரியாததால் கல்லூரிகளில் பின்னடைவை சந்திப்பதையும், பட்டப்படிப்பை முடித்து விட்டு பணிக்குச் செல்கையில் நேர்காணலில் (Interview) தோல்வியடைந்து மனம் வருந்துவதையும், பணிசெய்யும் நிறுவனங்களில் பதவி உயர்வு (promotion) கிடைப்பதற்கு ஆங்கிலம் பேசத் தெரியாதது ஒரு தடையாக இருந்து வருவதையும் காணமுடிகிறது.
இந்த அவல நிலை வருங்கால சமுதாயத்திற்கு ஏற்படக் கூடாது என்பதை மனதிற்கொண்டு தம்மாம் காயல் நற்பணி மன்றமும், இக்ராஃ கல்விச் சங்கமும் இணைந்து 2016 SUMMER SPOKEN ENGLISH COACHING PROGRAM (மாணவ- மாணவியர்களுக்கு தனித்தனியாக பயிற்சி வகுப்புகள்) பள்ளிகளின் கோடை விடுமுறையில் நடத்தியது. இதில் மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந்த கோடை கால ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பு கடந்த 05-05-2016 அன்று துவங்கியது. நிகழ்ச்சியின் துவக்கமாக இக்ராஃ கல்விச் சங்கத்தின் இணைச் செயலாளர் அல்ஹாஃபிழ் S.K.ஸாலிஹ், தம்மாம் காயல் நல மன்றமும், இக்ராஃ கல்விச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம், இதன் முக்கியத்துவம், ஆங்கிலம் சரளமாக பேசத் தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விரிவாக விளக்கி, இந்த நல்ல வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக்கொண்டு பலனடையுமாரும், குறித்த நேரத்தில் வருகை தர வேண்டியதன் அவசியத்தையும், கடைபிடிக்கப்பட வேண்டிய ஒழுக்கங்கள் குறித்தும் அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் துவக்க நாளன்று பிரபல ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியாளர் திரு. சுப்ரமணியன் Why English? Why Now? என்ற தலைப்பில் பாடம் நடத்தினார்.
அதனைத்தொடர்ந்து திரு R.உதயவேல் தினமும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தினார். இந்த ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பு கடந்த 05-05-2016 முதல் 30-05-2016 வரை நடை பெற்றது.
இதில் மாணவர்களுக்கு காலை 9:15 முதல் 11:45 வரை கீழ நெயினா தெருவில், இக்ராஃ அலுவலகத்திக்கு எதிரே உள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்திலும், மாணவிகளுக்கு மதியம் 02:00 மணி முதல் 04:30 மணி வரை தைக்கா தெருவிலுள்ள ஆயிஷா நலைன் அவர்களது இல்லத்தின் ஆங்கிலப் பயிற்சி வகுப்பறையிலும் நடை பெற்றது.இதில் 22 மாணவர்களும், 12 மாணவியர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சி குறித்தும், நிறை- குறைகள் குறித்தும் கருத்துக் கேட்டு மாணவர்களிடம் கருத்துக் கேட்புப் படிவம் அளிக்கப்பட்டு கருத்துக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகள் நன்முறையில் செய்யப்பட்டிருப்பதாகவும் ''வரும் காலத்தில் எழுதுவதற்கு மேஜை மற்றும் கழிவறை வசதிகள் செய்து தருமாறும்'' மாணவர்களால் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தன.
மேலும் இந்த spoken English course தங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்திருந்ததாகவும், பயிற்சியாளர் திரு R.உதயவேல் அவர்கள் மிகவும் அழகான முறையில், தெளிவாக புரியும் படி பாடம் நடத்தியதாகவும், இந்த கோடை விடுமுறையில் தாங்கள் பயனுள்ள வகையில் நேரத்தை செலவிட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும், இதனை ஏற்பாடு செய்த தம்மாம் காயல் நற்பணி மன்றத்திற்கும், இக்ராஃ கல்விச் சங்கத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து நிகழ்ச்சியின் இறுதி நாளன்று மாணவர்களிடம் பேசிய இக்ராஃ நிர்வாகி A.தர்வேஷ் முஹம்மது, இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துக் கொள்வதாகவும், கருத்துக் கேட்புப் படிவத்தில் மாணவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளவைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, வரும் வருடங்களில் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும், எங்களால் நடத்தப்படும் இது போன்ற கல்வி நிகழ்ச்சிகளில் எப்போதும் பங்குபெற்று பயனடையுமாறும் மாணவர்களை கேட்டுக் கொண்டதோடு, ,ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பை நடத்திய திரு R.உதயவேல் அவர்களுக்கு தம்மாம் காயல் நற்பணி மன்றம் மற்றும் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்து நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.
அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சி தெரிவித்து இறுதியாக ஆசிரியருடன் குழுவாக இணைந்து படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த பயிற்சி வகுப்புக்கு மாணவர்களிடமிருந்து ரூபாய் 400 மட்டும் கட்டணமாக பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. மீதமுள்ள கட்டணங்கள் மற்றும் செலவுகளை தம்மாம காயல் நற்பணி மன்றம் பொறுப்பேற்றுக்கொண்டது. கலந்துகொண்ட மாணவர்களுக்கு file, Pen, Notes, course kit, Refreshments வழங்கப்பட்டது. இந்த 2016 SUMMER SPOKEN ENGLISH COACHING PROGRAM ஏற்பாடுகளை இக்ராஃ நிர்வாகி A.தர்வேஷ் முஹம்மது, அலுவலகப் பொறுப்பாளர் மஹ்மூது புஹாரி மற்றும் தம்மாம் காயல் நற்பணி மன்ற செயலாளர் செய்யது இஸ்மாயில் ஆகியோர் செய்திருந்தனர்.
இதே போன்ற SUMMER SPOKEN ENGLISH COACHING PROGRAM -2014 ஆம் வருடம், தம்மாம் காயல் நற்பணி மன்றம் மற்றும் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் 28-04-2014 முதல் 28-05-2014 வரை ஒரு மாத காலம் நடை பெற்றது என்பதும், இதில் மாணவர்களுக்கு காலை 9:15 முதல் 11:15 வரை மற்றும் 11:30 முதல் மதியம் 01:30 வரை இரண்டு கட்டங்களாக பைபாஸ் சாலையில் உள்ள நுஸ்கியார் முதியோர் இல்ல அரங்கிலும், மாணவியருக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை சொளுக்கார் தெருவிலுள்ள காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரியிலும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை தைக்கா தெருவிலுள்ள ஆயிஷா நலைன் அவர்களது இல்லத்தின் ஆங்கிலப் பயிற்சி வகுப்பறையிலும் நடை பெற்றதும், அதில் 100 -க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் கலந்து பயனடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.S.E.மஹ்மூது
(மக்கள் தொடர்பாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம்.)
தம்மாம் கா.ந.மன்றம் & இக்ராஃ இணைந்து 2014ஆம் ஆண்டில் நடத்திய ஆங்கில பேச்சுப் பயிற்சி தொடர் வகுப்பு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தம்மாம் கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|